Sunday 30 December 2018

#பெரியார்_140

எந்த ஆண்டையும் விட தந்தை பெரியாரை நினைவு கூர்வதும் அவர்தம் கொள்கைகளை முன்னெடுப்பதும் இன்று கூடுதல் தேவை பெறுகிறது.

பிள்ளையாரை வைத்துக் கலகம் செய்பவனை விட அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடும் பாமரனுக்குப் புரியவைக்க, நம்மை கோவிலுக்குள் புக அனுமதிக்காதவன் தெருப்பிள்ளையாருக்குக் காவலிருக்க வைக்கிறானே அதன் சூட்சுமம் என்ன என்று அந்த ஏழைச் சிறுவர்களுக்கு உணரவைக்க பெரியாரை அவனுக்கு அறிமுகப்படுத்துதல் அவசியமாகிறது.

அந்தப் பிரம்மாண்ட பிள்ளையாரை தொட்டு தூக்கி நீரில் கரைய வைக்க பிரயத்தனப்படும் இளைஞர்களிடம் 
" உங்களை இதேபோல் தொடுவதற்கோ, தொழுவதற்கோ கோயில் கருவறைக்குள் அனுமதிப்பதில்லையே ஏனென்று எப்போதேனும் சிந்தித்தீர்களா?" என்று கேட்டு அவர்களை சுயமரியாதையோடு வாழவேண்டும் என்ற அடிப்படைச் சிந்தனையை ஊட்டுவதற்காக பெரியாரை முன்னிறுத்துவது இன்றியமையாததாகிறது.

ஒரு அரசியல் தலைவரை, முன்னாள் முதல்வரை, வயதில் முதிர்ந்தவரை நள்ளிரவில் குண்டுக்கட்டாகத் தூக்கி தாக்கி கைது செய்யும் வல்லமை பெற்ற காவல்துறை கைது செய்யவேண்டிய ஒரு கயவனுக்குத் காவல் நின்ற அவலத்தின் பின்னுள்ள காரணங்களைக் கண்டுணர நாம் பெரியாரைத் தூக்கிப் பிடிக்க வேண்டியது தேவையாகிறது.

தமிழகத்தின் ஒப்புயர்வற்ற அரசியல் தலைவனொருவனின் மரணத்தை எதிர்பார்த்துக் குதூகலித்துக் காத்திருந்த ஈனத்தனத்தினை உணர்ந்து சுதாரிக்க நாம் பெரியாரைப் பரப்புதல் தேவையாகிறது.

அத்தலைவனின் உடலைப் புதைத்துத் திரும்புவதற்குள் மெரீனா தீட்டுப்பட்டதாகக் கவலைப்பட்ட வன்மத்தை எதிர்கொள்ள வேறெப்போதையும் விட பெரியாரைத் துணைக்கோடல் இன்றைய காலத்தின் புறக்கணிக்கவியலா அரசியல் தேவையாகிறது.

இன்று "ஹைகோர்ட்டாவது.. மயிராவது..?
போலீஸ் டிபார்ட்மெண்ட் கரெப்ட் ஆயிடுத்து.. நான் தரேன்யா லஞ்சம்.." என்று பொதுவெளியில் எக்காளமிடும் திமிர்த்தனத்தின் பின்னணியை அம்பலப்படுத்த பெரியார் என்றைக்கும் தேவையாகிறார்.

#பெரியாரைப்_படிப்போம்
#பெரியாரைப்_பின்பற்றுவோம்
#பெரியாரைக்_கொண்டாடுவோம்
#பெரியாரைப்_பரப்புவோம்

No comments:

Post a Comment