Saturday, 11 January 2020

மனதுக்குள் 
ஆர்ப்பரிக்காது
பேசாமலிரு 
மௌனமே 😷

Thursday, 9 January 2020

விடமூறிய வலியொன்று விரல் வழி ஊடுருவ
விக்கித்து நிற்கின்றேன்.
எப்போது நிகழ்ந்ததென அறியாத பொழுதென்றில்
எதற்காகவென்ற அறிதலுமின்றியே
கால்கட்டை விரல் நகக்கண்ணில்
பாய்ந்ததொரு மின்னலாய்
நரம்புகள் வழிகடந்து
நாபிக்கமலமதில் நஞ்சினைப் பாய்ச்சி
நெஞ்சாங்கூட்டில் நெருப்பெனத் தகித்து
தொண்டைக் குழியினில் சொற்களைச் சிதைத்து
விழியிரண்டின் பார்வையைப் பறித்து
நடமாடவிட்டதெனை நடைப்பிணமாய்.
வலி என்பது வலிக்காமல்
விடமென்பது உயிர் பறிக்காமல்
வார்த்தைகளற்ற மௌனமாய்
நெருக்கமற்ற இடைவெளியாய்
உறக்கம் விழுங்கிய இரவுகளாய்
நினைவுகள் தின்று வாழும் நிர்க்கதியில் ஊசலாடும் உயிரொன்று.

Thursday, 2 January 2020

யானை கண்ட விழியற்றவனென
வாழ்க்கையை உணர்கிறேன்
ஒரு கை தலையில்
கரடுமுரடென
காதுகள் தொடுகையில்
கிழிந்து தொங்க
தந்தங்கள் குத்திக் கிழிக்க
வாலொன்று சாட்டையென வீச
துதிக்கையில் சறுக்கி விழுகையில்
கூர்விழிப் பார்வைகூட
ஒளிக்கீற்றைத் தரவியலாமல்
பெருத்த வயிற்றின் நிழல் மொத்தத்தில்
காரிருளுக்குள் கரைந்து போனது
கீரை ஆய்வதுபோல்
மனதைக் கிள்ளிப் போடுகிறாய்
தூசுதும்பு அகற்றும் முகமாய்
முறத்தில் புடைக்கப்படும் அரிசியென
அல்லாடுகிறேன்
சல்லடைக் கண்களென 
உன் வார்த்தைகள் துளைத்தெடுக்க
மேற்புறத்தில் மீந்த கசடென
தூக்கியெறிந்துவிட்டுச் செல்லும் 
உன் இயல்பை ரசிக்கவே செய்கிறேன்
ஒரு சமையல் பொழுதுக்குள் நேர்ந்துவிட்ட பிணக்கை
செரித்துத் தானே தீரவேண்டும் 💜