Friday 10 November 2023

ஒரு சாயலில் தெரிந்துவிடுகிறது
யாரோ ஒருவரைப் போல
யாரோ இருக்கிறார்கள்
யாரைப் போலவும் நானில்லை  
இப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறாள்
என்னைப்போலுள்ள அந்த ஒருத்தியும்
மழை பெய்தால்
சளி பிடிப்பதைப்போல
சட்டென்று தும்மல் வருவதைப் போல 
உன் நினைவும் வந்துவிடுகிறது

ஆனால்

மழையோ
சளியோ
தும்மலோ 
ஒரு கட்டத்தில் நின்றுவிடுவதைப்போலல்ல
உன் நினைவு 

#நனைஞ்சாச்சு_மழைல

Monday 30 October 2023

மழையெனப் பொழிந்து
மனம் நனைக்கிறதுன் நினைவுகள்🖤
மழைகுறித்தான வரிகள் 
ஈரம் நிறைந்தவை
வறண்ட வானிலையின்
உஷ்ணம் தணிப்பவை
பெய்து தீர்த்தாலும்
பேயாது கெடுத்தாலும்
மழைக்கான தேடல்
இருந்து கொண்டே தான் இருக்கும்
பெருமழையொன்றில்
உருவழிந்து போகும் மேகமென 
உன்னில் கரைகிறேன் 🖤

Sunday 29 October 2023

உன் மௌனத்தைப்போல்
அடர்த்தியானது
இன்றைய மழை 🖤
நீளும் நம் உரையாடல்களில்
பெரும்பாலும் முத்தங்களும்
எப்போதாவது வார்த்தைகளும் பரிமாறுவதுண்டு

Friday 14 July 2023

நினைவுகள் கொன்றது என்னை.
சற்றுமுன்வரை
தீராப்பசி தீர
நினைவுகளை மென்று
தின்று கொண்டிருந்தேன்.
விக்கித்தபோது கண்ணீர் அருந்திக் கடந்தேன்
தீரா தாகத்தை உமிழ்நீர் கொண்டு தணித்தேன்
கொஞ்சம் புரைக்கேறி தடுமாறும் பொழுது
கடந்த கொடும்பொழுதுகளைக் கொண்டு தட்டிக் களைந்தேன்
ஊன் செத்த பொழுதொன்றில்
குருதியின் சூட்டில்
உயிர் தப்பிக் கிடந்தபோது
கனவுகள் கடைந்து 
நினைவுகளை உயிர்ப்பித்து 
உண்டு 
தின்று 
செரித்த கணத்தில்
நெரிபடும் குரல்வளை திமிற விழித்துப் பார்க்க
நினைவுகள் கொன்றது என்னை.

Monday 10 July 2023

உன் விழியின் ஒளி தருகிறது
என் உயிர்த்தலுக்கான
பச்சையத்தை

Saturday 6 May 2023

உச்சிப் பொழுதில்
விண்ணையும் மண்ணையும் 
நிறைத்துக்கொண்டோடும்
இவ்வெள்ளை நதிக்கு
வெயிலென்று பெயர்

Friday 28 April 2023

இதோ இங்கே அலை விளையாடும் கடலினிலே எனக்கோர் பங்குண்டு
நுரைத்துப் பொங்கிச் சீறி
கால் நனைக்கும் அலையினிலே
எனக்கோர் பங்குண்டு
பிரபஞ்சத்தின் புரிந்தறியா ரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும்
அதன் ஆழத்தில் 
எனக்கோர் பங்குண்டு
ஆர்ப்பரிக்கும் அலையறியாத
அதன் ஆழ்கடல் பேரமைதியில்
எனக்குப் பெரும்பங்குண்டு.
நடக்க நடக்க உள்ளிழுக்கும்
கடற்கரை மணற்பரப்பில்
எந்தன் பங்கும் புதைந்தே இருக்கிறது.
ஒற்றை மணல்துகள் ஒட்டிக்கொள்ள
தட்டிவிட எத்தனிக்கும் விரல்களறியாது
மானுடப் பரப்பின் ஏதோ ஒர் புள்ளியில்
எந்தன் சக மனிதன் புரியும் செயலின் வினையாய்க் கிளர்ந்தெழும் சகல பாவங்களும் 
எந்தன் வாழ்வோடு ஒட்டாமல் உதறிச்செல்லுதல் எளிதல்ல என்று.

Tuesday 18 April 2023

விரட்டியடிக்க ஒரே தீர்வு
சிதைத்துச் சீரழிப்பதே என்பது அவர்கள் முடிவானது.
ஆட்சி அவர்கள் கையில்
நீதி அவர்கள் கையில்
கோவில் அவர்கள் கையில்
பூம்பிஞ்சைப் பலியிட்டனர் தெய்வத்தின் முன்னே
நித்தம் நித்தம் பலிபூசை
அவள் குருதியே குங்குமமாய்
அவள் கதறல்களே மந்திரமாய்
முனகல்களே மணியோசையாய்
வேள்வி முடித்த வெறியோடு 
வெளிவந்த பக்தர்களின் செவியில் விழுந்தது
ம்மா என்ற ஆவின் குரல்
கோமாதாவை
பக்தியோடு தொட்டு வணங்கி
வழிந்த கோமியத்தை ஏந்திக் குடித்து
ஏப்பமிட்டுச் சொன்னார்கள்
பாரத்மாதாகீ ஜே!!!

Friday 14 April 2023

ஆதியிலிருந்து இன்று வரை 
ஆரியத்திடம் அதே உத்தி
மண்ணின் மாந்தரைத் துரத்தியடிக்க
அவர்கள் சொன்னார்கள
நாம் குரங்கானோம்
அவர்கள் சொன்னார்கள் 
நாம் அரக்கர்களானோம்
அவர்களின்
மேனி நிறத்தில்
நாத் திறத்தில் மயங்கி
நம் சோதரியின் மூக்கறுத்தவனுக்காய் 
விபீடணர்களானோம்.
இன்று ஆசிஃபா வரை
ஆதிகுடிகளை விரட்டியடிக்க
அவர்கள் சொல்வதைச் செய்கிறோம்
ஒவ்வொன்றாய்ச் செய்தபின்
அவர்கள் சொல்கிறார்கள்
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது


பெய்து முடித்த பிறகும்
மரத்தில் மிச்சமிருக்கும்
எனக்கான செல்ல மழை💙
ஆதியிலிருந்து இன்று வரை 
ஆரியத்திடம் அதே உத்தி
மண்ணின் மாந்தரைத் துரத்தியடிக்க
அவர்கள் சொன்னார்கள
நாம் குரங்கானோம்
அவர்கள் சொன்னார்கள் 
நாம் அரக்கர்களானோம்
அவர்களின்
மேனி நிறத்தில்
நாத் திறத்தில் மயங்கி
நம் சோதரியின் மூக்கறுத்தவனுக்காய் 
விபீடணர்களானோம்.
இன்று ஆசிஃபா வரை
ஆதிகுடிகளை விரட்டியடிக்க
அவர்கள் சொல்வதைச் செய்கிறோம்
ஒவ்வொன்றாய்ச் செய்தபின்
அவர்கள் சொல்கிறார்கள்
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது


Wednesday 5 April 2023

தகிக்கிறது அனல்
கொஞ்சம்
வெயில் பருகிக்கொள்கிறேன்

Tuesday 4 April 2023

பூவில் தேனுறிஞ்சும்
ஒரு பட்டாம்பூச்சியை பிடிக்கும் விழைவில் கவனம் குவிக்கிறோம்
பட்டாம்பூச்சி நம்மைப் பிடித்துவிட்டதை அறியாமல் 🦋

படம்: இணையத்தில் எடுத்தது

Tuesday 28 March 2023

என்னை இக்காலையில் எழுப்பிய பறவையைத் தேடினேன்
வானமென அப்பறவையின் குரல் விரிந்திருந்தது 💙

Thursday 23 March 2023

நாலாய் மடித்து
வாயில் திணித்துக்கொள்ளும்
வெற்றிலையென 
சுருட்டிவிடுகிறாய் மனதை
உள்ளே நெறிபடும் பாக்கென
எனது  நியாயங்களும்
🤎🤍💚

Tuesday 7 March 2023

ஆம்!
எறும்பைப் போலத்தான் நான் இருக்கிறேன்
நீ ஏன் தேன் ஆகிறாய் 🐜🐜

Friday 3 March 2023

நிழலென உடன்வந்த 
பொழுதுகள் கழிந்து
நீயற்ற தனிமை
நீளும் கணங்களில்
நெரிக்கும் நினைவுகளூடே
உயிர் நழுவிப் போகுது  
அவ்வப்போது 💛