Monday, 20 July 2020

யானை கண்ட விழியற்றவனின் 
உணர்தலாய் வாழ்க்கை
ஒரு கை தலையில்
கரடுமுரடென
காதுகள் தொடுகையில்
கிழிந்து தொங்க
தந்தங்கள் குத்திக் கிழிக்க
வாலொன்று சாட்டையென வீச
துதிக்கையில் சறுக்கி விழுகையில்
கூர்விழிப் பார்வையின் ஒளிமங்கி
பெருத்த வயிற்றின் நிழல் மொத்தத்தில்
காரிருளுக்குள் கரைந்து போனது
நீ
என் விழிகளின் உறக்கத்தோடு
உறக்கத்தின் கனவுகளையும் களவாடிச் சென்றுவிட்டதை
தலையணையிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறேன்🖤

Saturday, 18 July 2020

திமிறிக்கொண்டு ஓடும் 
காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுக்கிறது 
வாழ்வின் மீதான பேரன்பு
எப்போதாவது.

அசராமல் அடித்துப்பெய்து
ஆளை நனைக்கும்
வாசல் மழையின் சுதந்திரம்
ஜன்னல் மழைக்கில்லை🖤

Saturday, 11 July 2020

நீர் தேடி நீளும் வேரென
உனைத்தேடி
நீளும் நினைவுகள்

Thursday, 9 July 2020

அடைக்கும் தாழில்லை
தடுக்கும் கதவில்லை
தனக்குத் தானே
விலங்கிட்டுக் கொள்ளும் மனது
திமிறிக்கொண்டு ஓடும் 
காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுக்கிறது 
வாழ்வின் மீதான பேரன்பு
எப்போதாவது.

Monday, 6 July 2020

பூட்டி வைக்கின்றார்
ஔியனெப் பாய்கிறாள்
குரல்வளை நெறிக்கின்றார்
அறைகூவலனெ ஒலிக்கிறாள்
கொன்று புதைக்கின்றார் 
ஆங்கே
கங்கெனத் துளிர்க்கிறாள் 🔥
மஞ்சள் வானம்
வெள்ளை வெயில்
கண்கூசும் வெளிச்சம்.
எல்லாம் சரி... 
எங்கே என் மழை?
மரணம் என்பது மூச்சிழந்து போவது மட்டுமல்ல.

Saturday, 4 July 2020

உயிர் நிறையும் பொழுதொன்றில்
உடன்நின்று
உரசிச் சிரிக்குது உன் முகம்🖤