Saturday 15 October 2016

பார்வைகள்

வீடு நுழைந்ததும் கழற்றியெறிகிறேன்
ஒவ்வொன்றாய்.
காலையில் வாசலில் கால்வைத்ததும்
ஒட்டிக்கொண்ட முதல்பார்வையை.
வாகனம் ஓட்டிச் செல்லுகையில்
இடதுபக்கமிருந்து படிந்த
இன்னொரு பார்வையை.
அலுவலகத்தில்
வந்துபோன வாடிக்கையாளரின்
வக்கிரப் பார்வையை.
திரும்பி வருகையில்
தினந்தோறும் சந்திக்கும்
தினுசான பார்வைகளை.
முச்சந்தியில் முறைப்பதுபோலும்
வெறித்த பார்வைகளை.
இப்படி கையில்
முகத்தில்
முதுகில்
என
உடலெங்கும்
ஒட்டிக்கொண்ட பார்வைகளைப்
பிய்த்தெறிந்தேன்.
ஆனால்
காலையில் கிளம்பும் வேளை
வீட்டிலேயே ஒட்டிக்கொண்ட
கண்காணிப்புப் பார்வையைக்
கழற்றியெறியவே முடியவில்லை
கடைசிவரை.
                                15/10/2016

Wednesday 12 October 2016

அவசர சமையல் அறிவது அவசியம்

ரசம்

ரசமில்லா
நவரசமில்லா வாழ்க்கையில் ஏது இனிமை?

பேச்சிலர் ரசம் வைப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?

5 நிமிடம்தான்.

மிக்சியில் ஒரு எலுமிச்சையளவு புளியை உருட்டாம பிச்சி பிச்சிப் போட்டு, மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் போட்டு, லேசா ரெண்டு ரவுண்டு ஓட்டி, பின் பூண்டு 4 பல், வரமிளகாய் 2 தக்காளி ரெண்டு (கட் பண்ணி) போட்டு ரெண்டு ரவுண்டு ஓடவிடுங்க. அவ்வளவுதான். மிக்சியில் அரைச்ச விழுதை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் விட்டு கொதிக்கவச்சு தாளிச்சா ரசம் ரெடிங்க.
மல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்குங்க.
மறக்காம உப்பு சேருங்க.

புளி ஊறவைக்கக்கூட நேரமில்லாத சமயத்தில் இது எளிமையான முறை.

Friday 26 August 2016

அரவங்களினூடே...

மண்கிளர்த்தி துளிர்த்தது அந்தச்செடி
மொத்தம் மூணு இலைவிட்டு.
தளிரின் மென்மை தூண்டியதாய்
சற்றே தீண்டிப்பார்த்தது அரவமொன்று.
வளர்ந்து செழித்தது செடி
மொட்டுகள் தூண்டியதாய்
முகர்ந்து தீண்டியது அரவமொன்று.
பூத்துக்குலுங்கி புன்னகை செய்தது.
வண்ணங்கள் தூண்டியதாய்
வலிந்து தீண்டியது அரவமொன்று.
காய்த்துக் கனிந்த தருவாய்
நின்றது.
செழுமை தூண்டியதாய்
சிறிதே உரசித் தீண்டியது அரவமொன்று.
ஆணிவேரூன்றி
அடர்ந்து கிளைத்துப் படர்ந்து நின்றது விருட்சமாய்.
நிழலின் இதத்தில்
வாகாய்த் தங்கி
வசதியாய்த் தீண்டியது அரவமொன்று.
அரவங்கள் தீண்டுந்தோறும்
அரவமெழுப்ப வழியற்று அமைதிகாத்த விருட்சத்தை
ஆதித்தரு என்றே போற்றி
ஆலயம் எழுப்பிட்டார்.
அங்கே
அர்ச்சனை செய்யவும்
அரவமொன்று வந்தது.

                       24/8/2016

Sunday 24 July 2016

காத்திருப்பு

காத்திருத்தல் கடுமையானதுதான்
காதலில்.
கணநேரத்தாமதம் கூட
கனலெனச் சுட்டெரிக்கும்.
நட்பின் காத்திருப்போ
நல்ல தருணங்களை
அசைபோட்டு அனுபவிக்கிறது.
நாளை என்ன அளவளாவ ?
என்றே அன்போடு யோசிக்கவைக்கிறது.
மீதமிருக்கும் மணித்துளியில்
மொக்கையாய் ஒரு
கவிதையென்றொன்றை
எழுதிமுடித்துப் பரிசளிக்கக
காத்திருக்கிறது.

                                   24/7/2016

Tuesday 19 July 2016

கூடுதிரும்புதலே வீடடைதல் ஒரு பறவைக்கு இரவைக்கழிக்கும் பொருட்டு.
இருளை எதிர்கொள்ள வேண்டிய இரவில்
உன் குறுஞ்செய்தியின் வரவொன்றே
வீடடைதலுக்கான காரணமெனக்கு.
வீடடைதல் தொடங்கிடும்
உன்னுடனான உரையாடலோடு.
பிறிதொரு நாளில்
உன் உரையடலற்ற இரவில்
நினைவுப்பறவையொன்று
இருளடர்ந்த இரவில்
தனித்துப் பறந்து தவித்திருந்து
வீடடையும் விருப்பமின்றி
சிறகுகளின் வலியுணராமல்
வலிந்து அசைத்து
வானளந்து திரிந்ததை யாரறிவார்?

வீடடைதல்

கூடுதிரும்புதலே வீடடைதல் ஒரு பறவைக்கு
இரவைக்கழிக்கும் பொருட்டு.
இருளை எதிர்கொள்ள வேண்டிய இரவில்
உன் குறுஞ்செய்தியின் வரவொன்றே
வீடடைதலுக்கான காரணமெனக்கு.
வீடடைதல் தொடங்கிடும்
உன்னுடனான உரையாடலோடு.
ஆனால் யாருமறிவரோ
உன் குறுஞ்செய்தியற்ற
இரண்டு இரவுகள்
இருளடர்ந்த வானில் 
தனித்துத் தவித்திருந்து
வீடடையா என் பறத்தலை.
                                      19/07/2016

Sunday 17 July 2016

மகிழ்வும், நிறைவும்.

15.07.1996
காலை பத்துமணியளவில் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது இதுதான் நாம் இருக்கப்போகும் ஊரா? என திகைத்து மலைத்து நின்றது இன்னும் நினைவிலாடுகிறது. அசல் கிராமத்து மக்களை அவ்வப்போது பார்த்திருந்தாலும் அவர்களோடே வாழவேண்டிய நிர்ப்பந்தம் வந்திருந்தது எல்.ஐ.சி. பணிநியமன வடிவில். சினிமாவில் பார்க்கிற பசுமையான வயல்களும் வரப்புகளும் காதல் கொஞ்சும் மரத்தடிகளும் கயிற்றுக்கட்டிலும் காணப்படவில்லை அங்கு. பிழைப்புக்காகப் போராடும் வாழ்க்கையும் கூலி வேலை கிடைக்காதா எனத் தவித்த அன்றாடங்காய்ச்சிகளும், பாசனத்தேவையின் போது வறண்டு கிடந்து தேவையற்ற அறுவடை நாளில் நீர்கொண்டு பயிரை மூழ்கடிக்கும் ஆறுகளுமாய் மக்களின் போராட்டமான வாழ்க்கை. இவ்வூரில்தான் நான்காண்டுகள் எல்.ஐ.சி பணியைத் தொடர்ந்தேன்.
தடுக்கிவிழுந்தால் ஒரு கவிஞர் இருப்பார் என்பது அந்த மண்ணின் சிறப்பு.. அங்கு கற்ற வாழ்க்கை என்னை சற்றே சுயமாக சிந்திக்க வைத்தது. நூலகங்கள் சென்று படிக்கும் வாய்ப்பும் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சினிமா பார்த்ததும் அங்கே தான். எனக்குள்ளே நான் யார் என்பதை அடையாளம் காட்டியதும் அங்கு வாழ்ந்த வாழ்க்கைதான். நட்பின் பெருந்தக்க நண்பர்கள் பலரின் அறிமுகமும் அங்கேதான். இன்று ஏதோ கொஞ்சம் எழுதத்தெரிகிறது என்றால் அதற்கான வாசலைத் திறந்துவிட்டதும் அங்கு வாழ்ந்த சூழல்தான்.
மூன்றாண்டுகள் பணி முடித்தநிலையில் திருமணம் முடிவானபோது தன்வீட்டுப் பெண்ணுக்குத் திருமணம் என்பதுபோல் கொண்டாடிய மக்களும் நண்பர்களும் முகவர்களும் என்றென்றும் என் நினைவில்.
நான்கு ஆண்டுகள் முடியுமுன்னரே திருச்சிக்கு மாற்றலாகி வந்து இன்று இருபது ஆண்டுகள் பணிமுடித்த நிறைவிலேயே இப்பதிவு.
இந்தியாவின் தன்னிகரற்ற ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெருமையும் பொறுப்பும் உண்டு எங்களுக்கு. ஒரு கடைக்கோடியிலிருக்கும் படிப்பறிவற்ற பாமரனுக்கும்கூட காப்பீடு வழங்குவதும் முதிர்வுத் தொகை வழங்கும் பொருட்டு அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வழங்குவதும் எங்களின் பெருமைமிகு பணியில் தலையானது.
நிறுவனத்தில் பணிசேர்ந்த பின் இணைந்த AIIEA எங்களின் தொழிற்சங்கம் நான் கேள்விப்பட்டிருந்த labour union என்ற வார்த்தைகட்குப் புதிய அர்த்தத்தைச் சொல்லியது. உறுப்பினரின் பணிப்பாதுகாப்பும் பெண் ஊழியர்களின் கண்ணியமும் காப்பதில் முன்நிற்கும் சங்கம் வெறும் ஊதிய உயர்வுக்காக மட்டும் போராடாமல் சமூகப் பிரச்சினைகளையும் முன்னிறுத்திப் போராடக் கற்றுத்தந்தது.
இத்தகைய ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலிலும் நிறுவனத்தின் அரவணைப்பிலும் இன்று (15.07.2016) 21வது ஆண்டில் பணியைத் தொடர்கின்றேன்.
எங்கள் நிறுவனத்தோடு நாங்கள் வளர்கிறோம். எங்கள் வாழ்க்கைநிலை உயருகிறது. எனக்கான ஓய்வூதியக்காலத்தின் நிறைவான சூழலும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.
அதற்காக எங்களின் எல்.ஐ.சி. நினுவனத்துக்கும் எங்களை வழிநடத்திப் பாதுகாக்கும் AIIEAவுக்கும் நன்றி.
என்னோடு இணைந்து பணியாற்றும், என் பணிச்சூழலை இலகுவாக்கும் நண்பர்களுக்கு நன்றி.

அனைத்துக்கும் மேலாக பெண்களுக்குக் கல்வி எதற்கு என்று கேட்கும் சுற்றங்கள் நிறைந்த குடும்பச்சூழலில், அதைமீறி என்னைப் படிக்கவைத்து இந்த நிறைவான வாழ்க்கைக்கு வித்திட்ட எனது பெற்றோர்க்கு ஏது கைம்மாறு?

Sunday 10 July 2016

ஒருத்தி

காதுகளற்ற ஒருத்தியாய் இருக்கிறேன் பல பொழுதுகளில்.
பார்வைகளற்றவளாயிருக்கிறேன்
பெரும்பாலும்.
உணர்வற்ற ஒருத்தியே நான்
இருளும் படர்ந்த இரவுகளில்.
ஆனால்
ஒருபோதும்
உடலற்ற ஒருத்தியாய் இருந்ததே இல்லை
பெண்ணாய்ப் பிறந்ததிலிருந்தே.
                             
                           10/7/16

Monday 27 June 2016

தேடியது கிடைத்ததா
தெரியவில்லை.
காத்திருந்து தோற்றதில்
கவலையேதுமில்லையோ?
நேற்றைய பொழுதுன்
சிறுவயிறு நிறைந்ததா?
நாளைய பொழுதிற்கு நம்பிக்கை மிச்சமா?
இன்றைப்பாடு
இக்கதியானாலும்
என்றைக்கும் விரிப்பாய் சிறகை.

                                    27/6/2016

Monday 6 June 2016

விசும்பின் பெருவெளியில்
இலக்கற்று உலவும் சிறுதூசினைப் போல்
பிரபஞ்சமெங்கும் பயணிக்கும் பொருளற்ற மன எண்ணங்கள்.
சிறுபுள்ளின் நினைவொன்றில்
வானளக்கும் கனவுகள் சிதைக்கப்பெற்றுக்
கூடடையும் பொழுதொன்றிலாசை துளிர்க்கும்
நாளையேனும் வானளக்க.
இரைதேடும் நீண்ட பயணத்தில் நினைவில் வந்துபோகும்
நேற்றுத் தவறவிட்ட
தாமரைக்குளத்து மீன்.
இறக்கை விரிக்கும் ஆசை குறுக்கி
சிறகு மடக்கி
சேற்றுக் குளத்தில் இறங்கித் தேடும்
சிறு புள் நானே.

                                   06.06.2016

Friday 3 June 2016

மழையடித்து ஓய்ந்த பொழுதொன்றில்
ஆசுவாசமாய் அமர்ந்து
வேடிக்கை பார்த்த கருங்கல் திண்ணை.
நீண்ட திண்ணையின்
ஒருமுனையில் நீயும்
மறுமுனையில் நானுமாய்.
நம் மவுனமொழி உரையாடலின்
தூதாய்
வரிசைகட்டிய எறும்புகளின் ஊர்வலம் நமக்கிடையே.
எறும்பு சுமந்த ஒற்றைக்கடலையை
பிடுங்கி எறிந்த அம்மாவின் பார்வை
பறித்து எறிந்தது நமக்கான மொழிகளையும்.

Monday 16 May 2016

அடித்துப் பெய்த மழையிலும்
அசராது அனலாய் சுடும்
அவன் நினைவுகளின் சூட்டை
பெருமழையின் மிச்சமென
இலைகளில் சொட்டும் நீர்த்திவலைகள் ஆற்றிடுமா?
 
                                  16.05.2016

Tuesday 10 May 2016

ஒரு அடர்மழைக்குத் தயாராகிறது வானம்.
வெளுப்பு குறைந்து கருமை சேர
முழுதான மழையென்று அறிவிக்க
குளிர்காற்றை துணைக்கு அழைக்கிறது.
வீசும் காற்றில் ஆடும் இலைகளில் பரவசம்.
கொடியில் காயும் துணிகள் எடுக்கும் அவசரம் வீட்டில்.
எட்டி நடையைப்போட்டு,
வாகனத்தின் வேகம் கூட்டி
விரையும் மனிதர்கூட்டம் வீடடைய.
விழவிருக்கும் முதல் மழைத்துளி ஏந்தும் விழைவோடு
சாளரத்தின் வெளியே கரங்கள் நீட்டிக்
காத்திருக்கிறேன்.
எங்கோ ஒரு சாளரத்தின் வழியே
நீண்டிருக்கும் உன் கரங்களும்.
விழுந்த முதல் மழைத்துளி
நம் உயிர்த்துளியாய்
நீ அன்றொரு நாள் சொன்ன வார்த்தையின்
நம்பிக்கையை இன்னும் ஆழமாய் விதைக்கும் உயிருக்குள்.
உள்ளங்கையில் நிறைந்த மழைநீரில்
உன் முகம் பார்த்துப் புன்னகைக்கிறேன்
எங்கோயிருந்து எனக்கு நீ தந்த
புன்னகைக்கு பதிலாய்.
மழை பெய்து கொண்டேதானிருக்கிறது
காதலில் கனிந்த
மனசுக்குள் எப்போதும்..

Friday 6 May 2016

காதலின் துவக்கப்புள்ளி

நினைவுகளின் அடுக்கிலிருந்து
போகிற போக்கில்
ஒற்றை இழையை உருவிவிட்டுப் போகிறாய்.
சீட்டுக்கட்டெனச் சரிந்து
எங்கும்
சிதறிக்கிடக்கின்றன நினைவுத்தளங்கள்...
சேகரித்து அடுக்க விழைகின்றேன்
ஒவ்வொன்றாய்.
எடுக்க எடுக்க
நினைவின் கனம் நெஞ்சுக்குள்
கூடுகிறது.
நினைவலைகளில்
நெளிகின்றன
அவை நிகழ்ந்த பொழுதுகள்....
ஒவ்வொரு அடுக்கிலும்
ஒளிந்துகொண்டிருக்கும்
உன் நினைவுப் புள்ளிகள்
வெளிக்கிளம்புகின்றன.
புள்ளிகளின் எண்ணிக்கை
கூடக் கூட
நீ என்னை வியாபிக்கத் துவங்குகிறாய்.
உன்னைத் தவிர்த்து வேறொன்றைத்
தேடியெடுக்க முனைகிறேன்.
தேடத் தேட...
உன் ஆக்ரமிப்பின் உக்கிரம் கூட
முழுவதுமாய் உன்னை என்னில் நீ நிறைக்கின்றாய் ஒரு தருணத்தில்
....
களிப்புற்றுக் களைப்புற்று
நான் மதி மயங்கும் அக்கணத்தில்
விழியோரம் மின்னிச் செல்லும்
சிதறிய நினைவுத்தளங்களின்
குவியலில் புதைந்த நமக்கான கவிதையின்  முற்றுப்புள்ளி.

-------------------------7/5/16

Wednesday 4 May 2016

முடிவில்லாப் பயணமாய்...

வழியனுப்பத்தான் வந்தேனா?
நின் வழித்துணையாய் 
பயணத்தில் வரும் ஆசை கொண்டேனா?
விழி விரிய ஆவல் கண்டேன்
உன்னிடத்தில்.
விழிநிறைத்த நீர் மறைக்க
கையசைத்து விடைபெற்ற பொழுதில்
மனமென்னவோ உன்னைத் தொடர்ந்தது.
வழிப்போக்கனாய் வந்தவனில்லை
என் வாழ்வில் நீ
என்றுணர்த்தியது
நம் முந்தைய ரயில் பயணம்.
அன்று
கடைசி நிறுத்தத்தில்
இறங்கிய நாம்
மீண்டும்
தொடங்க ஒரு ஒத்திகை தானின்று.
வழிகாட்டி முன்செல்லும்
நட்பின் விரல் பிடித்துப் 

பின்தொடர்வேன் என்றென்றும்.

Wednesday 27 April 2016

கோடைமழை

உன் பிரியத்தின் வாசலில் நிற்கிறேன் கரங்கள் ஏந்தி.
மொத்தத்தையும் தருகிறாய்
இதயம் திறந்து.
செய்வதறியாமல் திகைக்கிறேன்
கோடையின் வெம்மை தணிக்கும்
ஒரு குவளை நீராய் என்
உயிரை நனைக்கிறாய் தோழா.

Monday 21 March 2016

சிந்தை குடைந்த சொற்களைக் குவித்து
கருப்பொருள் கொஞ்சம் அளவாய்ச் சேர்த்துக்
கனிந்த வரிகளைக் கவிதையெனவே
கைவிரல் மாற்றும் நேரந்தனில்
கொதிக்கும் ரசத்தின் மணம் வந்து
தாளிக்க அழைத்தது.

நட்பின் பெருவலி

தனித்துச் சென்றுகொண்டிருந்த
நட்பின் இழைகள்
மெல்ல மெல்ல பின்னத் துவங்கிய
துவக்கத்தின் மென்வலியது.

வெளிச்சக்கீற்று

இருள்கீறி உள்நுழையும் வெளிச்சமென
மெல்ல மெல்ல ஊடுருவிப்
பரவும் விடியலாய்
உன் நட்பு.

Wednesday 16 March 2016

புத்தன் கணக்கு

சாவறியா வீட்டில்
கடுகு வாங்கி வரச்சொன்ன
புத்தனின் கணக்கில்
என் வீடும் இருந்தது.
இதையறியாதவளாய்
இருந்திருந்தபோதுதான்
அழைப்புமணியொலிக்க
ஆங்கே ஓர் யுவதி நின்றிருந்தாள்.
மடியேந்திப் பிச்சைகேட்டாள்.
என்ன உன் தேவையென்றேன்
புத்தன் கேட்ட கடுகென்றாள்.
வீடெங்கும் தேடித்தேடிப் பின்
வாசல் விரைந்தேன்.
வந்திருந்த தோழியோடு
மடியேந்தி நின்றேன்  
மற்றோர் வாசலில்.

                                 17/3/16

ஏனம்மா? ஏன்?

விரைந்தே முடிக்கின்றேன் வேலைகளை.
நடையைக் கொஞ்சம் எட்டிப்போட்டு
வீடுபோய்ச் சேர நினைக்கிறேன் விரைவாய்.
நேற்று அவள் வரவில்லை.
நான் போவதற்குள் சென்றுவிட்டாளோ?
இன்றேனும் பார்த்துவிடவேண்டும்.
கடைசியாய்ப் பார்த்ததெப்போது?
கடைசி நாளன்று தானே.
நினைவோட்டம் சுழன்றாலும்
நடைவேகம் குறையவில்லை.
வீட்டின் கதவைத் திறக்கின்றேன்.
யாருமற்ற வீடு.
எங்கேனும் எங்கேனும் அவள் வந்த சுவடு இருக்கிறதா?
வேறு எவர் வருகைக்கும் முன்பாக
வந்துவிடமாட்டாளா அவள்?
எனக்கும் அவளுக்குமான பேச்சுகள் எத்தனை
இன்னும் பேசப்படாமலே.
வீடெங்கும் தேடிச் சோர்ந்தபின்னரே உறைக்கிறது புத்தியில்
வீடே அவள்தானே.
தாயாய்  மடியில் அவளை ஏந்தாமல்
அவள் மடியில் தவழ்கிறேனே நான்?
விசித்திரமான வேதனை இது.
வேறொன்றும் கேட்பதற்கில்லயம்மா.
அடி யாழினி!
நீ வந்ததும் சென்றதும் ஏன்?

Thursday 10 March 2016

உயிர்ப்பேன்

விரல்களில் வழிந்துவிழும் வார்த்தைகள் கவிதைகளாய்
உனக்கு மட்டும் எப்போதும்.
அடுத்து வரிசையில் நான்
உன் விரல்வழிப் பாதை மீண்டு
கவிதையாய் உருப்பெற.

Tuesday 1 March 2016

பயணம்

வழிநெடுகிலும்
பூத்தூவிய பாதை
கண்ணெதிரே தெரிந்தாலும்
குறுக்கு வழியில்
இலக்கு நோக்கி
அழைத்துச்செல்வதாய்
சேற்றிலும் சகதியிலுமே
நம் பயணம்.
இலக்கு என்பது உன் தாய்வீடுதான்
உன்னைப் பொறுத்தவரை.
தனிக்குடித்தனமிருக்கும்
உன் சகோதரிகளின் நியாயத்தில்
உருகிப்போகும் உன் மனது
அதே நிலையிலிருக்கும்
என் அராஜகத்தை கண்டிக்கும்
நீதிபதி ஆகிறது.
உன் வீட்டுப் பெண்களின்
சோகங்களனைத்தும்
எனது கண்ணீருக்கு  காரணமாகின்றன.
காலையிலிருந்து இரவுவரை
ஓய்வின்றி உழைத்தாலும்
உடல் நலுங்கிக் களைத்தாலும்
உதவிக்கு வராத உன் விரல்கள்
ஊர் உறங்கும்வேளை
என் உதவிதேடிச் சுரண்டுவதும்
ஓய்வதில்லை.
அனைத்தையும் பொறுத்தாலும்
நம்மிடையே வாக்குவாதங்கள்
முற்றும் வேளை
உன் குழந்தைகளை விட்டுவிட்டு
வெளியேறச் சொல்லும்
உன் கயமையை மட்டும்
பொறுப்பதற்கில்லை கணவனே.
ஒருமுழம் கயிற்றுக்கு அஞ்சிய
பெண்மகள் நேற்றோடு
தொலைந்தொழிந்தாள் என்பதறியாத
உன் அறியாமையின்மீது
கொஞ்சம் இரக்கத்துடனே
ஒன்றை நினைவூட்டுகிறேன்.
உன் வீட்டுப் பெண்களைப்போல்
நானும் உதிரம் கொட்டித்தான்
நீ பெருமிதம் கொண்டு போற்றும்
உன் வாரிசைப் பெற்றேன்.

Tuesday 16 February 2016

பற்றுதல்...

ஒவ்வொருவர்க்கும்
பற்றிக்கொள்ள ஏதோவொன்று கிடைக்கத்தான் செய்கிறது.
பொழுதுகள் தள்ள எதையாவது பற்றிக்கொள்ளல் நலம்.
அதிகாலை விழிக்கையில்
அதுவாய் வந்து பற்றும்
முந்தைய நள்ளிரவில் கேட்ட
ஸ்வர்ணலதாவின் எவனோ ஒருவன்...
யாருமற்ற வேளை
சமையலறையில் எழும்பும்
குக்கரின் விசில் எண்ணிக்கை...
மதிய பொழுதுகளில்
எங்கோ யார் வீட்டிலோ ஓடும்
கிரைண்டர் ஓசை...
அயர்ந்து பின் விழிக்கும் தருணம்
பக்கத்து வீட்டில் ஒலிக்கும் அழைப்புமணி ஒலி...
இப்படி பற்றிக்கொள்ள
எத்தனையோ இருக்க
எப்போதும் மௌனத்தைப் பற்றுதல் அவசியமாய் இருக்கிறது
வாழ்வின் பெரும்பகுதி கடக்க.

அம்மா, அன்னை தெரியும். மாதா தெரியுங்களா?

மாலை அலுவலகம் விட்டு வெளிவர இயலவில்லை. சாலையில் போக்குவரத்து நெரிசல். சிலநேரம் முடங்கியும் போனது. ஆட்டோக்களை நிற்கவிடவில்லை காவல்துறை. காக்கிச்சட்டையைக் கண்டதும் அவர்களும் நிற்கவில்லை. நின்ற ஒருவரும் எப்போதும் நூற்றுப்பத்து ரூபாய் (அதுவே கொள்ளை தான்) கொடுக்கும் தூரத்துக்கு இருநூறு ரூபாய் கட்டடணம் கேட்டார். பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களும், அலுவலகம் முடிந்து செல்வோரும் பணிமுடிந்து திரும்பும் இதரரும் ஒருவித பீதியோடு போக்குவரத்தைப் பார்த்தபடி பேருந்து கிடைக்காமலும் ஆங்காங்கே தேங்கி நின்றனர்.
அப்படி என்ன நிகழ்வு?
ஏதும் மக்கள்நலத்திட்ட முகாமா?
அரசு விழாவா? சமூகநலப் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வா? ஏதும் நிவாரணப் பணியா?
-----------------------------
-----------------------------
தேசியக்கல்லூரி வளாகமே நிரம்பிவழியக் காரணமென்ன?
-----------------------------
-----------------------------
நான்கு நாட்கள் நடக்கவிருக்கும் அதிமுக்கிய நிகழ்ச்சி தான் என்ன?
-----------------------------
-----------------------------
ம்ம்ம்! அது வந்து...
            அது வந்து...
-----------------------------
------ மாதா வர்றாங்களாம்
------ யாரு?
------ அம்மா, அன்னை தெரியும்.
------ இது யாரு மம்மி சாரி மாதா?
------ இவங்க
             மாதா அமிர்தானந்த மயி
             ரொம்ப சக்தி வாய்ந்தவங்க
              .
              .
              .
              வெளங்கிடும்...


கண்ணாமூச்சி

வேடிக்கையாய்த் துவங்கினோம்
இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை.
ஒருவருக்குள் மற்றொருவர்
ஒளிந்துகொண்டதை அறியாததுபோலவே
தேடும்பாவனை சலிக்கவேயில்லை.

Monday 15 February 2016

என் பிரியசகாவே!

கரங்கள் கோர்க்கும்வேளை
லேசாய் விரல் நெறிக்கும் உன் பிரியம்.
வலிக்காதென்பதறிந்தே
வலிக்கிறதா என வினவும் குறும்பு.
என் விழி தாழ வைக்கும் முயற்சியாய்
குறுகுறு என முகம் நோக்கும் விஷமம்.
நாணம் தேடும் முகத்தான்
படக்கென்று கண்ணடித்து
நாக்கை உள்மடித்து
நீ  என் ஆளெனக் காட்டத் துடிக்கும்
அன்பான ஆளுமை
.
.
.
இன்னும்
இன்னும்
ஏதேதோ  உன் அதீத அன்பைக்கூறும் தன்முயற்சிகள்
தன் வெற்றிதனை அறியாது
விக்கிரமனாய்
என் எதிரே நீ.

Friday 5 February 2016

வழி பார்த்து, விழி வைத்து...

கிளம்பட்டுமா
என்று வினவிப்
புறப்படும்போதெல்லாம்
ஒரு புன்னகையை மட்டும் கொடுத்துவிட்டு
ஒட்டுமொத்தமாய்
உயிரை அள்ளிச் செல்கிறாய்.
உயிரற்ற உடலோடு தலையசைக்கையில்
உன் புன்னகையின் சக்தியில்
கொஞ்சமாய் உயிர் ஒட்டிக்கொள்கிறது.
மீண்டும் நீ திரும்பிவரும் நாள் பார்த்து
ஊசலாடும் உயிரோடு காத்திருத்தல்
இயல்பாகிப் போனது.

Tuesday 12 January 2016

ஆக்கிரமிப்பு

அத்துமீறிய ஆக்கிரமிப்புகளை
அகற்றச் சொன்னது மாநகராட்சி.
உன் நினைவுகளை...?

Sunday 10 January 2016

வான் மறந்த...

சிட்டுக்குருவிகள்
சிறகடித்துப் பறந்தவானில்
சிக்னல் தேடி அலைகின்றன
குறுஞ்செய்திகள்.

Friday 8 January 2016

தூவானம்..

காத்திருந்த மணித்துளிகளின் எண்ணிக்கையாய்
மழைத்துளிகளை சேமித்துக்கொண்டேன்
மழைவிட்டும் தூவானம் விடவில்லை.
அவன் வருகை குறித்த
அய்யம் ஏதுமில்லை.

எனக்கானது.

வெற்றுப் பார்வையென எல்லோருக்கும் அது.
உன் விழி
வீசிச் செல்லும் சொற்களைக் கோர்ப்பவளுக்குத்தானே தெரியும்.
அது எனக்கான கவிதையென்று.

Tuesday 5 January 2016

நேரமில்ல...

நேரமில்லன்னு சொல்றது உண்மையிலேயே நேரமில்லையா மனமில்லையா?
எதுவானாலும் இப்ப நேரமில்ல, பிறகு வரேன்

Sunday 3 January 2016

ச்சும்மா...

ஞாயிறு என்பது ஓய்வின் பொழுதாயிருந்தது ஒரு கனாக்காலமாகிப் போனது. அதிகபட்சம் ஒருமணிநேரக் கூடுதல் தூக்கம் மட்டுமே கொண்டாட்டமான அம்சம் எங்கள் ஞாயிறில். அசால்ட்டா தாமதமா எழுந்து காபி முடிச்சுப் பார்த்தா ஆகுது மணி 9.30. காலையும் மதியமும் கலக்கும் ஒரு பொழுதில் சிற்றுண்டியா பேருண்டியா எதைத் தின்பது? மதிய உணவென்பது மாலையைத் தொட்டுவிட இரவு ஏனோ திங்களின் நினைவில் இறுக்கமாகிப் போகிறது.
--------------------------------------------------------------
இது ஓய்வின் கொண்டாட்டமா இல்லை ஒழுங்கீனமா?

Saturday 2 January 2016

நட்பூ மலர..

Bஒவ்வொரு நாளும் விழிக்கும்போது
உனக்குள் புன்னகை செய்துகொள்.
எதிர்ப்படும் முதல் முகத்தைப் பார்த்து
இலேசாய் இதழ் விரித்திடு.
சிற்றுண்டி பரிமாறும்வேளை
சிறிது சிரிப்பையும் சேர்த்தே பரிமாறு.
வேலைப்பளுவில் இடுப்பொடியும் நேரம்
தேநீர் தரும் சிறுவனைப்பார்த்து
சிறிதே சிரித்து நன்றி சொல்.
காணும் மனிதரிடம் புன்னகை செய்.
காலமெல்லாம் சிரிப்பு நம் சொந்தமாயிருக்கும்.
ஒரு புன்னகையை மட்டும் விலையெனக் கொடுத்து
உலகையே உனதாக்கிக்கொள்.
நட்டம் ஒன்றும் யாருக்குமில்லை.
மாறாய்
கொடுப்பவர்க்கும் பெறுபவருக்கும்
கிடைக்கும் ஒரு நட்பூ.

                                   3/1/2016