தொலைவில் சென்றுவிட்ட போதும்
புள்ளியாய் ஒளிர்கின்றாய் என் பார்வைக்கு
அருகருகே நெடுநேரமாய் நிற்கும்போதும்
அப்போதுதான் பார்த்ததாய் வியந்து சொல்கிறாய்
நேரமாகிவிட்டதாய் சடுதியில் விடைபெற்று
மற்றவர்களோடு மணிக்கணக்கில் அளவளாவுகிறாய்
அலைபேசி அழைப்புகளை ஞாபகமாய்த் தவிர்க்கிறாய்
உன் அழைப்புகள் ஏற்கத் தாமதமெனில்
அடுக்கடுக்காய் காரணம் தேடுகிறாய்
சினம் கொண்ட உன் வார்த்தைகள் புதிதல்ல
முகம் பார்க்க மறுக்கும் உன் விழிகளே புதிது
இதோ அன்று கொண்டாடி நனைந்த பிரியத்தின் மழைத்தூறல் இன்னும் ஓய்ந்துவிடவில்லை.
உன் ஒற்றைத்தும்மலொலி கேட்டு
அருமருந்தொன்று கொதிக்கிறது அடுப்பில்
அருந்திய பின் தொடர் உன் ஆசைப்படி