Saturday, 24 July 2021

ஒவ்வொரு நாளும் உள்நுழையும் இருள்
வாழ்வின் இறுதிக்கணங்களை கண்முன்னே காட்சியெனத் தருகிறது
இரவு கவிந்து சாமம் தொடங்கும் பொழுதில்
விழித்திருக்கும் உயிருணரும் தனிமை
மரணமன்றி வேறேது?
உடல் பிரிந்த உயிர் நினைவுகள்தோறும் தாவி
கனவொன்றின் மேல் இளைப்பாறுகையில்
மீண்டு வரும் நினைவலைகள் தருவது சிறகெனில் 
காலையில் உயிர்த்தெழுதலும்
விலங்கெனில் மரணித்தலும்
புலர் காலையில் நியதியாகிறது.
மீண்டும் வாழ்வா மரணமா
என்பதை நிர்ணயிக்க இருள் கவ்வும்
மாலை வரை உயிர்த்திருக்கும் உயிர்

Saturday, 17 July 2021

நீ சொல்கிறாய்
நான் உன் சொல்லாகிக்கொண்டு இருக்கிறேன் 🖤
நீ சொல்கிறாய்
நான் உன் சொல்லாகிக்கொண்டு இருக்கிறேன்🖤

Thursday, 15 July 2021

நின் வரவை எதிர்நோக்கியிருக்கையில்
நித்திரையெனவே வந்து இமை தழுவுகிறாய்
அமுது சமைக்க எரிக்கும் தீயும்
ஆடை பற்றும் தீயும்
ஒன்றெனக் கொள்ளலாகாது

Thursday, 8 July 2021

ஒரு புள்ளியில் நிறுத்திவைத்தாய்..

பார்ப்பவர்க்கு அது புள்ளியாய்த் தெரியலாம்

பெரும்பாறையில் முட்டிக் கொண்டதுபோல் குருதியில் நசநசத்து
தவித்தலையும் என் உயிரின் அழுகையை நீ கேட்டிருக்கக்கூடும்

அதை ஒரு புன்சிரிப்போடு கடந்திருப்பாய் இந்நேரம்



Thursday, 1 July 2021

வார்த்தைகளை வரிசைப்படுத்துகிறேன்
பார்வையின் அனலில்
உருகிச் சிவக்கின்றன
வரிசை கலைந்து
சரிந்து விழுவனவற்றை
மேலொன்றாக அடுக்குகிறேன்
மெய்ப்புள்ளிகளின் கனம் தாளாது
நொறுங்கிச் சிதைகின்றன
வார்த்தைகளைப் பிரித்தெடுத்து
பத்திரப்படுத்தி
வைக்கிறேன்
என்
மௌனத்தின் பெட்டகமது
நிறைந்து வழிகிறது
இதுவரை மொழிந்திராத இவ்வார்த்தைகளின்
கனம் தாங்கி
பொருளுணரும்
உயிரொன்றிடம் சேர்ப்பிக்கும்
காலம் வரை
மௌனத்தை சுமந்து திரிவேன் 🖤