Thursday 27 December 2018

காற்றின் மொழி

#காற்றின்மொழி திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

இந்தப் படத்தில் சாதிக்கத் துடிக்கும் அல்லது தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ள ஒரு பெண், அவள் ஒரு குடும்பத்தலைவி யாகவும் இருக்கிறாள். எதையும் முயன்று பார்த்துவிடும் அதீத ஆர்வம், தயக்கமின்மை, பொதுவெளியில் கூட சட்டென்று தன்னை வெளிப்படுத்தி விடுபவள் என ஒரு உற்சாகமான கதாபாத்திரம். வேலைக்குச் செல்லவேண்டும், சுய தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று பல ஆசைகளை சுமந்து கொண்டு திரிகிறாள்‌. நடுத்தர குடும்பத்தை திறம்பட நிர்வகித்து குதூகலமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை. அவளுடைய திறமைக்கென்று வேலை கிடைத்து மகிழ்ச்சியும் உற்சாகமுமாய் பணி செல்ல முற்படுகையில் வருகின்ற சோதனையும் அதை எதிர்த்து நிற்பதும் ஓரளவுக்கு மேல் பிரச்சினைகள் அளவுமீற இறுதியாக தன் குழந்தையையும்  முந்தைய மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கையையும் மீட்கும் பொருட்டு வேலையை விடுகிறாள். முக்கால்வாசி கதை இது.

இது பல குடும்பங்களில் நிகழ்வது தான். ஆனால் இதில் மேலோட்டமாக காண்பித்துள்ள ஒரு விஷயம் மிகவும் #நுட்பமான ஒன்று. விஜயலட்சுமியின் அக்காள் இருவரும் நல்ல அரசுப்பணியில் இருக்க ப்ளஸ் டூ கூட முடிக்காத விஜயலட்சுமி தன் பிறந்தவீட்டாரால் அவமானப்படுவதும் பல திறமைகளை உள்ளடக்கிய அவளது ஆளுமையை "நாய் வாயை வச்சாப்போல" என் பிறந்தவீட்டு நபர்களே எள்ளுவதும், இரவு நேர FMல் வேலைக்குச் செல்பவளை கவுரவமான வேலையில்லை என இகழுவதுமாய் காட்சிகள் இருக்கின்றன.

ஒரு கட்டத்தில் அவளது திறமையை முடக்கிப்போட விரும்பாத கணவன் அவள் தொடங்கிய வணிகத்தில் பார்ட்னராக செயல்பட்டுக் கொண்டே அவளை வேலைக்குச் செல்லுமாறு ஊக்குவிப்பதாக சுபமாக படத்தை முடித்திருக்கிறார்கள்.

ஆனால் நிஜத்தில் என்ன நடக்கிறது பல வீடுகளில்?

கணவன் வீட்டாரிடமிருந்து அன்போ ஆதரவோ தானாகக் கிட்டினால்தான் உண்டு. ஆனால் தன் பிறந்த வீட்டில் தான் அன்பும் அனுசரணையும் உரிமையோடு எதிர்பார்க்கலாம். இதில் இயல்பான துடுக்குத்தனமும் குழந்தைத்தனமும் கொண்ட பெண் திருமணமான பின் எல்லாவற்றையும் மறந்து மறைத்து வாழ வேண்டும் என பல பெற்றோர்களே எதிர்பார்ப்பதோடு இவளால் ஏதேனும் புகுந்த வீட்டிலும் தவறு நேர்ந்திடுமோ என கண்டிப்புடனே இருப்பது பல பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையில் அகற்ற முடியாத முள்ளே.

இப்படத்தில் விஜயலட்சுமி வேலைக்குச் செல்வதால் ஒவ்வொரு கட்டத்தில் வரும் பிரச்சினைகளின் போதும் கணவன் நேரடியாக பேசாமல் அவளுடைய சகோதரிகள் மற்றும் அப்பாவை வரவழைக்கிறான். இது எதனால்? ஏற்கனவே அவள் மீது எப்போதும் குற்றப்பத்திரிகை வைத்திருக்கும் பிறந்தவீட்டினர் தவறு இவள் மீதுதான் எனக் கூறும்போது அவள் கணவன் மறைமுகமாக இவளிடம் தெரிவிக்கும் செய்தி " பார், நான் சொல்லல. உன் வீட்டிலேயே சொல்றாங்க" என்பதுதான்.

இந்த அணுகுமுறை நாளடைவில் அந்தப் பெண்ணுக்கு பிறந்தவீட்டினரிடம் தன் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான இயல்புத் தன்மையை குறைக்கலாம். அல்லது சொல்லாமலே துன்பப்படலாம். பெற்றோர் உடன்பிறந்தவர்களிடம் இருந்து மனதளவில் விலகிப் போகலாம்.

விஜயலெட்சுமிக்கு அவள் கணவன் புரிந்து கொண்டான் என்பதே ஆறுதல். வெற்றி.

கதையை இப்படி முடித்திருப்பதன் நோக்கம் கணவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். அவள் பிறந்தவீட்டிலும் புரிந்து கொண்டதாகவும் கூட காட்டியிருக்கலாம்.
ஏனெனில் படத்தில்  லேசாகக் தொட்டுச்செல்லப்பட்ட அப்பிரச்சினை பல குடும்பங்களில் மையமாகவும் இருப்பதே.

விஜயலட்சுமிகள் கிளம்பட்டும் துணிவோடு.

No comments:

Post a Comment