என் பால்யத்தின் வண்ணங்கள் நிறைந்திருக்கும்
இவ்வீதியைக் கடக்கும் கணங்களில்
வண்ணத்துப்பூச்சி ஆகிறேன் 🦋🦋
அமர்ந்து பேசிக் கழித்த
பெருந்திண்ணைகளைத் தொலைத்த வீடுகள் இன்று
மின்சாரம் போன இரவுகளில் ஆடிய கண்ணாமூச்சியும்
கோடிட்ட எல்லைகளுக்குள்
கல்லா மண்ணா ஆடி
கண்டெடுத்த காயங்களும்
வீதிக்கு உயிர் கொடுத்த காலமது
அலைபேசிக்குள் முகம் புதைத்து
பால்யம் தொலைத்த குழந்தைகளும்
கொடூர ஒலியெழுப்பும் வாகனங்களின் போக்குவரத்துமாய்
வேற்று முகம் அணிந்து வெகுநாட்களாகியும்
கடந்து செல்லும் பொழுதுகளில்
பாதங்கள் உணரும் உயிர்ப்பும் சிலிர்ப்பும்
சற்றும் குறையவில்லை
இதோ!
வீதிக்குள் நுழையும் கணம்
படபடத்துச் சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சியொன்று 🦋🦋