Sunday 15 December 2019

முத்தங்களால்
இட்டு நிரப்பியதாய்ச் சொல்கிறாய் 
இன்னும் இருக்கிறது என் கன்னக்குழி ♥️

Tuesday 10 December 2019

சூல் கொண்ட மங்கையின் வயிற்றுமேடென
வெளிப்பட்டே விடுகிறது அன்பூ 🖤

Tuesday 19 November 2019

விலைப்பட்டியல்

முத்தங்களுக்கு விலையுண்டு
ஒரு பார்வை
சிறு புன்னகை
மென் கோபம்
துளி கண்ணீர்
நெஞ்சில் சோகமும்
கொஞ்சம் மிரட்டலுமாய்...
விலைப்பட்டியல் மாறுவதுண்டு

Wednesday 30 October 2019

இதழ்கள் கை கோர்த்துப் பயணிக்க
வார்த்தைகள் இங்கே ஓய்வெடுக்கின்றன

Thursday 1 August 2019

பசித் தீ


பொழுது கடந்துகொண்டிருக்கிறது. கடந்துவிட்ட பொழுதுக்குள்
ஆகவேண்டிய செயல்கள்
நடந்தேறவில்லை.
உடம்புக்குள் இயக்கம் நடைபெற்றுக்கொண்டேயிருப்பதற்கான
அறிகுறிகள் எச்சரிக்கின்றன.
கண்கள் சோர்ந்து
கால்கள் வலுவிழந்து
ஓய்வு தேவை என்ற எச்சரிக்கைக்கொடி ஏற்றுகிறது உடல்.
கவனம் சிதறுகிறது.
வயிற்றில் நினைவில் பசிகிளற
மெல்ல எழுந்து
எரியும் அடுப்பின் முன் வந்து நிற்கிறேன்.
கொழுந்துவிட்டெறிகிறது தீ.
விரல் கொண்டு கிளறி வெளித்தள்ளுகிறேன் கங்குகளை.
ஆரஞ்சுநிறத்தில் ஜொலிக்கின்றன நெருப்புத் துண்டங்கள்.
ஒன்று
இரண்டு
மூன்று
.
.
.
மென்று தின்று விழுங்குகிறேன்
கனன்ற நெருப்புத்துண்டுகளை.
ஆழ்பசி தீர விட்ட இடத்திலிருந்து
தொடங்குகிறேன் வேகமாய்.

பார்த்து நாளாச்சே
என்ற உன் வார்த்தைகள் தான் இன்றைய சந்திப்புக்கு அச்சாரம்.
அருகருகே அமர்ந்திருந்த தருணங்களில்
பயிற்சி மகளிரை வியந்தாய்
பணியாளரை விசாரித்தாய்
அன்பைப்பொழிந்தாய் அயல்மாநிலத்தவனிடம்.
உண்டுமுடித்துக் கிளம்புகையில்
அய்ம்பது ரூபாய் கொடுத்து
அப்பப்போ வருவேன் என அரவணைத்தாய் அவனை.
அசாம்காரனின் தமிழில் தொலைந்து
விடைபெற்ற வினாடி வரை நீ
என் முகம் பார்த்த நினைவில்லை.
ஆளுக்கொரு திசையில் பயணம் தொடர்கையில்
அலைபேசியில் சொன்னாய்
'நீ இன்று கூடுதல் அழகு' என்று.
வார்த்தைகளில் தொலையும் மனசில்
வாழுகிறது அன்பு குறையேதுமின்றி.

Monday 29 July 2019

நினைத்திருந்ததற்கு மாறாக ரயில் சீக்கிரமே வந்து சேர்ந்துவிட்டது. தாமதமாய் வந்து சேர்வோமோ என்றிருந்த பதைபதைப்பு மாறி இப்படிக் காக்கவேண்டியிருக்கிறதே என்று விசனம் வந்தது. பேசிவைத்திருந்த இடம் ரயிலடிக்கு அருகிலேயே இருந்தது. இறங்கி வெளியே வந்தவுடன் சூடான தேநீர் அருந்திமுடித்தாயிற்று. தனிமையைப் போக்க விரும்பும்வேளை சூடான தேநீர் சிறந்த துணையெனத் தோன்றும். சட்டென்று அருந்திவிடமுடியாத சூட்டில் உள்ள தேநீரை சிறு துளிகளாக உள்ளிறக்கும் போது அலாதி இன்பம் பிறக்கும். சூட்டோடு தொண்டைக்குழாயின்வழி உட்செல்கையில் அப்பொன்னிறத் திரவத்தைக் கொண்டாடத் தோன்றும். கொஞ்சம் சூடு குறைந்தபின் வாய்நிறைய உறிஞ்சி கன்னக்கதுப்பும் மேலண்ணமும் சூடுபடக் குடிக்கையில் கிடைக்கும் சுகானுபவத்தை வேறெந்த உணர்வும் தந்துவிட இயலாதெனத் தோன்றும். தேநீரோடு காதல் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட வேறெந்தத் துணையும் தேவைப்படவில்லை.

காலையும் மாலையும் கிட்டத்தட்ட இரண்டு அரைமணிநேரங்கள் இப்படிக் கழிந்துவிட அந்த அனுபவத்தை அசைபோடுவதில் மேலும் சில மணிநேரம் தீர்ந்துபோகிறது. தேநீர் அருந்தவென்றே சற்றுத்தள்ளியிருக்கும் கடைக்குச் செல்வது வாடிக்கையாக நடப்பது. அதற்குக்காரணம் கடைக்காரர் தரும் கிளாஸ் டீ. இந்த ஒன்றே பிடித்துப்போக வேறுகாரணங்கள் ஏதும் தேவைப்படவில்லை அங்கு வருவதற்கு. கண்ணாடித்தம்ளரை ஒருமுறைக்கு இருமுறை கழுவி வரிசையாக வைத்து க்ளிங் க்ளிங் என ஒலியெழும்ப சர்க்கரை போட்டு பாலை ஊற்றி, மேலாக வலைதொங்கும் வடிகட்டியால் பொன்னிற டீ டிகாக்ஷனைப் பொழிந்து ஒரு சிற்பியின் நேர்த்தியோடு அத்தேநீரைக் கலந்து தருவார். அவரிடத்தில் பேப்பர்கப் இல்லை என்பதும் ஒரு சிறப்பம்சமே. அதிசயமாக இந்த ரயிலடிக் கடையிலும் கிளாஸ் டீ கிடைத்தது நினைவுகளைக் கிளறிவிட்டது. குடித்து முடித்தவுடன் மெதுவாக நடைபோட்டு சந்திக்கத் தேர்ந்தெடுத்திருந்த பூங்காவில் நுழைந்து உள்நுழையும்போதே பார்வையில் படும்படி மரத்தடி ஒன்றில் அமர்ந்தாயிற்று.

எதற்காக இந்த சந்திப்பு? இப்போது நினைக்கையில் ஆசுவாசமாக இருந்தது. தேவையற்றதோ என்று தோன்றியது. திடீரென வந்த தொலைபேசி அழைப்பும் அந்த நேரத்து மனநிலையில் தோன்றிய ஆர்வமுமே இன்று இங்கு வந்து நிறுத்தியுள்ளது. ஒரு வாரம் காத்திருந்து, இன்று கிட்டத்தட்ட 120 கிமீ பயணித்துவந்து இங்கு சேர்வதற்குள் உற்சாகம் வடிந்தததுபோலவும் அவசியமற்றதோ இந்த சந்திப்பு என்றும் முடிந்நதைக் கிளறுவதில் பயனென்ன என்றெல்லாம் ஏதேதோ தோன்ற ஆரம்பித்து விட்டது.

நிழல் பின்னகர்ந்து குறைந்து கொண்டே வந்தது. வெயில் மாறி மாலை மங்கத் துவங்கும் முன்னேற்பாடுகள் வானில். பக்கத்தில் சுருண்டு படுத்திருந்த நாய் சோம்பல் முறித்து எழுந்து சென்றுவிட்டது. சுண்டல் விற்கும் பெரியவர் வந்து நின்று பார்த்துவிட்டு ஏதும் கேட்காமலே அகன்றுவிட இப்படியாக கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் கழிந்துபோனது. இதற்குமேலும் மனதை இருத்திவைத்து அமரமுடியாமல் ஏதேதோ அலைக்கழிக்க கேள்விகள் ஒன்றின்மேல் ஒன்றாக மனதை நிறைத்தன.

நிகழவிருக்கும் சந்திப்பின் பலன் எதுவாக இருக்குமென நினைத்துப்பார்க்க, ஏதுமற்ற தன் வெளியில் ஏதோ ஒரு குறுக்கீடாகவே தோன்றியது. மனம் ஒப்ப மறுத்தது. கால்கள் தாமாகவே தேநீர்க்கடை நோக்கி நடந்தன. கடைக்காரர் முதலில் பேப்பர்கப்பை எடுத்துப் பின் மனம் மாறியவராக கண்ணாடித்தம்ளரில் தேநீர் நிரப்பி நீட்டினார். கொதிக்கும் சூட்டில் சிறுசிறுதுளிகளாக உள்ளிறங்க மெல்லக் கரைந்தது மனது. பல ஆண்டுகளுக்கு முந்தைய சந்திப்பில் பெண்கள் கடைக்கு வந்து தேநீர் அருந்தக்கூடாததற்கான காரணங்களையும் இன்னும் பெண்கள்  கூடாத பலவற்றையும் தேன்தடவிய வார்த்தைகளால் போதித்த நினைவு வந்து அலையலையாய் நினைவைக் கிளறிவிட  இத்தேநீர்த்தவத்தை எதன்பொருட்டும் இழக்கத்துணியாத மனநிலையோடு ரயிலடியை நெருங்க, கை அனிச்சையாய் அலைபேசியை எடுத்து அணைத்து வைத்தது.

இருவர் எழுதிய கவிதையில் எது யாருடைய சொல்?
வெள்ளைத்தாளெனக் கிடந்த பொழுதொன்றில்
வார்த்தைகள் ஏதுமற்றா இருந்தோம்?
ஒரு சொல்லென்பதென்ன?
உயிரும் மெய்யும் சேர்ந்ததுதானே.
துவங்கும் அக்கணத்தில்
உயிர் நீயென ஓரெழுத்தைத் தருகிறாய்
மெய் கொண்டு நானிணைய
சொல்லொன்று சிலிர்த்தெழ
ஆயுத எழுத்தை அங்கங்கே வீசிச்
சமரொன்றைத் தொடங்குகிறாய் சடுதியில்.
ஈறுபோதலென உடை களைகிறேன்
இடையுகரம் எதுவென இடையளக்கிறாய்.
ஆதி நீடலென முதல் முத்தமொன்றை
முடிக்காமல் தொடருகிறோம்.
தன்னொற்றென ஒட்டிக்கொண்டு
முன்நின்ற நின் மெய் தழுவுகிறேன்.
இணையவும்  இயல்பே என
இணைந்த நாம் பிரிந்திலோம்.
தழுவலும் தழுவல் நிமித்தமுமாய்
ஈருயிர் ஓர் மெய்யான
பொழுதொன்றில் பிறந்த இக்கவிதையில்
எது யாருடைய சொல்?

இறுக்கமான பொழுதுகளில்
எனக்குள் எளிதில் நுழைந்துவிடும் லாவகம்
இதுவரை கைவரப்பெறவில்லை உன்னையன்றி மற்றவர்க்கு.
ஏதேதோ புலம்பித் திரியும் மனதுக்கு
புன்னகையால் ஒரு கடிவாளம் போடுகிறாய்.
தனிமை தேடி அமரும்வேளை
ஓயாத உன் பேச்சுக்களால் திசைதிருப்பும் உன் வன்முறை
மன்னிக்கத்தக்கதல்ல.
பசி மரத்துப்போனவேளையில்
பார்வையில் எனை உயிர்ப்பித்துப் பரிமாறும் உன் அன்பைப் புறக்கணிக்கும்
என் சினத்தையும் சேர்த்தே செரிக்கிறாய் நீ.
எத்தொலைவு போனாலென்ன
அருகில் உன் ஆரவார அன்பின் மழை பெய்துகொண்டே இருக்குமென்ற நம்பிக்கையில்
உன்னை உதறிச்செல்லவும் எத்தனிக்கும் என் பிடிவாதம்
உன் ஒருதுளி மௌனத்தில் தளர்ந்துபோகிறது.
எதுவாயினும்
எப்பொழுதாயினும்
எதற்காகவேனும்
உன்னோடு பொழுதைக் கழிக்கவியலா ஆற்றாமையில்
வெந்து தவிக்கும் இதயத்தின்
வெற்றுக் கூச்சலை
வழமைபோல
உன் புன்னகையால் துடைத்தெறிந்து
பார்வையில் மடிசாய்த்து
பிரியத்தால் தலைகோதுவாய் என்ற
நம்பிக்கை இற்றுப்போய்விடவில்லை என்னுள் இன்னமும்.

உன் வருகை நிகழும் அக்கணம்
என் இறுதிமூச்சு வெளியேறும் தருணமாயிருக்கக்கூடும்.
உனக்கான என் வார்த்தைகள்
ஒலியிழந்து போயிருக்கலாம்.
என் விழிப்படலத்தில் ஒளியின் ரேகைகள் அழிந்திருக்கலாம்.
செவித்திறனும் மங்கி
நடை மறந்த பாதங்களும்
தொடு உணர்ச்சியிழந்த தோலுமாய்
உயிர்த்திருந்த கணங்களில்
அன்றொரு நாள்
என் உள்ளங்கையில் நீ உருட்டித் தந்த
உயிரில் கலந்துவிட்ட
அவ்வொரு கவளம் சோற்றின் வாசனையில்
சாத்தியப்பட்டது என் காத்திருத்தல்.

Wednesday 5 June 2019

சொல்லொன்று சிரிக்கிறது
சொல்லொன்று குளிர்கிறது
சொல்லொன்று மலர்கிறது
சொல்லொன்று உயிர்க்கிறது
உன் பெயராகும் போது ❤️

Saturday 11 May 2019

நேர்த்தியான வட்ட அலைகளை வரைகிறது
குழப்பத்தில் குளத்தில் எறிந்த கல்

Wednesday 8 May 2019

அரவமேதுமற்றுச் செல்லும் அரவமென
விடியலை நோக்கி
ஊர்ந்து செல்கிறது இவ்விரவு

பேசிக் தீர்க்கப்
பொழுதுகள் கிடைக்காத காதல்
காணும்போதில் முரண்களிலும்
காணாப்பொழுதில்
பெருந்தேடலிலும்
வளர்கிறது 💜

Tuesday 7 May 2019

பகலெங்கும் ஒளிந்திருந்து
இரவில் ஒலிக்கும்
இக்கூகையின் மொழிக்கு
மொழிதொலைத்த பெண்ணொருத்தி
சுமந்தலையும்
மௌனத்தின் சாயல்.

Friday 19 April 2019

பொங்கி வரும் காட்டாறென
நுரைத்துப் பொங்கி
ஆர்ப்பரித்துக்
கரைபுரண்டோடுது
வெள்ளை வெயில்நதி

Sunday 14 April 2019

ஆதியிலிருந்து இன்று வரை
ஆரியத்திடம் அதே உத்தி
மண்ணின் மாந்தரைத் துரத்தியடிக்க
அவர்கள் சொன்னார்கள
நாம் குரங்கானோம்
அவர்கள் சொன்னார்கள்
நாம் அரக்கர்களானோம்
அவர்களின்
மேனி நிறத்தில்
நாத் திறத்தில் மயங்கி
நம் சோதரியின் மூக்கறுத்தவனுக்காய்
விபீடணர்களானோம்.
இன்று ஆசிஃபா வரை
ஆதிகுடிகளை விரட்டியடிக்க
அவர்கள் சொல்வதைச் செய்கிறோம்
ஒவ்வொன்றாய்ச் செய்தபின்
அவர்கள் சொல்கிறார்கள்
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது

#மீள்

எழுதலாமென்று எண்ணியவேளை
எழுதுகோலைப் பறித்துச் சென்றான் சாத்தான்.
கடவுளிடம் முறையிடச் சென்றேன்
அவனோ வார்த்தைகளைப் பறித்துக்கொண்டான்.

Friday 12 April 2019

கருவறைக் கதவு பூட்டப்பட்டபின்
தெய்வம் இளைப்பாற நினைத்தது
நாளெல்லாம் நின்றபடி
காட்சி தந்த அசதியில்.
மீண்டும் காலை பூட்டுத் திறக்கும்வரை
ஆயாசமாய்ச் சுவரில் சாயந்து கால்நீட்ட
எத்தனித்ததொரு கணத்தில்
பாரத்மாதாகி ஜே என்ற முழக்கம் செவியில் அறைந்தது.
நாக்கைத் துருத்தி
நான்கு கைகள் அணிந்து
எழுந்து நின்ற தெய்வம்
பதறித் துடித்தபடி
கலைந்த உடையைத் திருத்திக்
கல்லுடல் முழுதாய் மூடி
காட்சிதரத் துவங்கியது

Thursday 28 March 2019

என் விழி அசத்திய சிறுதுயிலென
நிகழ்ந்தது உன் வரவு 🖤

Monday 25 March 2019

நீ வந்து தேடும் ஏதோவோர் பொழுதொன்றில்
நானிருக்கப்போவதில்லை என்பதைச் சொல்வதற்காகவேனும் உயிர் வாழ்ந்தாக வேண்டும் இன்று.

Monday 11 March 2019

கடல் பார்க்க வந்த என்னைப்
பார்க்க வந்ததோர் பேரலை.

Monday 11 February 2019

பசி குடைகிறது
நொடியொன்றைச் சுவைத்துப் பார்க்கிறேன்
நிமிடத்தைத் தின்று தீர்க்கிறேன்
மணிநேரங்கள் உண்டு முடிக்கிறேன்
மாதங்கள்
ஆண்டுகளென
விழுங்கியும்
ஆறாப் பசியடங்க
காலப் பெட்டகத்தைக்
கைக்கொள்ளத் தேடுகின்றேன்

Friday 8 February 2019

ஏதுமற்றிருக்கிறேன் நான்.
என் கண்ணீராய்
என் புன்னகையாய்
என் வாய்மொழியாய்
என் மௌனமாய்
யாதுமாகி நிற்கிறாய் நீ.

Monday 28 January 2019

எதிரெதிர் அமர்ந்திருக்கும்
வார்த்தைகளற்ற நம்மிடையே
ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது மௌனத்தின் பேரிரைச்சல் 🖤

Sunday 27 January 2019

நினைவுகள் கொன்றது என்னை.
அதற்கு சற்றுமுன்வரை
தீராப்பசி தீர
நினைவுகளை மென்று
தின்று கொண்டிருந்தேன்.
விக்கித்தபோது கண்ணீர் அருந்திக் கடந்தேன்
தீரா தாகத்தை உமிழ்நீர் கொண்டு தணித்தேன்
கொஞ்சம் புரைக்கேறி தடுமாறும் பொழுது
கடந்த கொடும்பொழுதுகளைக் கொண்டு தட்டிக் களைந்தேன்
ஊன் செத்த பொழுதொன்றில்
குருதியின் சூட்டில்
உயிர் தப்பிக் கிடந்தபோது
கனவுகள் கடைந்து
நினைவுகளை உயிர்ப்பித்து
உண்டு
தின்று
செரித்த பொழுதொன்றில்
நெரிபடும் குரல்வளை திமிற விழித்துப் பார்க்க
நினைவுகள் கொன்றது என்னை.

நத்தையென ஊர்ந்து நகர்கிறது இரவின் தனிமை
நினைவென்னும் எச்சிலால் உயிர் நனைத்தவாறே.

Saturday 26 January 2019

ஆந்தைகள் அலறும் இந்நிசியில்
அணங்கொருத்தியின் அழுகுரல்
இணைந்து ஒலிக்கிறது
கூகைக்குக் கிடைத்திடுமோர் இகல்பொழுது
பகல் பார்த்து வெல்லும் காக்கையின் தந்திரமும் அறிந்தாளில்லை.
காலிலோ
கழுத்திலோ
சிறுகயிற்றுக்கு அஞ்சிய பிடிதானே இவளும்
இவளொத்த பலரும்.

Thursday 17 January 2019

என் விழிவீச்சின் எல்லையில்
நிற்கும் நீ
வழிந்தோடும் விழிநீரில்
கரைந்து விடாமலிரு 🖤

Sunday 13 January 2019

அன்பென்று சொல்லி
திரைகளிடுகிறாய்
பார்வையால் கோடுகள் கிழிக்கிறாய்
வார்த்தைகளில் எல்லை வரையறுக்கிறாய்
திரைகள் விலக்கி நான் வெளிச்சம் பார்க்க
சுட்டெரிக்கும் உன் பார்வையால்
விழிநீர் கோர்க்கிறது
கோடுகள் தாண்டுகையில்
உன் வார்த்தைகளின் வன்மத்தில்
குருதி வழிகிறது விழிகளில்
நீ வரையறுத்த எல்லைகள் மீறும்போது
உன் அதிகார வரம்பின் வன்முறைத் தாண்டவங்கள் அரங்கேறும்வேளை
வழிந்த குருதி உறைந்து
கனலென மாறிப் பொசுக்கவும்கூடும்
ஆணென்ற உன் ஆணவத்தை.