15.07.1996
காலை பத்துமணியளவில் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது இதுதான் நாம் இருக்கப்போகும் ஊரா? என திகைத்து மலைத்து நின்றது இன்னும் நினைவிலாடுகிறது. அசல் கிராமத்து மக்களை அவ்வப்போது பார்த்திருந்தாலும் அவர்களோடே வாழவேண்டிய நிர்ப்பந்தம் வந்திருந்தது எல்.ஐ.சி. பணிநியமன வடிவில். சினிமாவில் பார்க்கிற பசுமையான வயல்களும் வரப்புகளும் காதல் கொஞ்சும் மரத்தடிகளும் கயிற்றுக்கட்டிலும் காணப்படவில்லை அங்கு. பிழைப்புக்காகப் போராடும் வாழ்க்கையும் கூலி வேலை கிடைக்காதா எனத் தவித்த அன்றாடங்காய்ச்சிகளும், பாசனத்தேவையின் போது வறண்டு கிடந்து தேவையற்ற அறுவடை நாளில் நீர்கொண்டு பயிரை மூழ்கடிக்கும் ஆறுகளுமாய் மக்களின் போராட்டமான வாழ்க்கை. இவ்வூரில்தான் நான்காண்டுகள் எல்.ஐ.சி பணியைத் தொடர்ந்தேன்.
தடுக்கிவிழுந்தால் ஒரு கவிஞர் இருப்பார் என்பது அந்த மண்ணின் சிறப்பு.. அங்கு கற்ற வாழ்க்கை என்னை சற்றே சுயமாக சிந்திக்க வைத்தது. நூலகங்கள் சென்று படிக்கும் வாய்ப்பும் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சினிமா பார்த்ததும் அங்கே தான். எனக்குள்ளே நான் யார் என்பதை அடையாளம் காட்டியதும் அங்கு வாழ்ந்த வாழ்க்கைதான். நட்பின் பெருந்தக்க நண்பர்கள் பலரின் அறிமுகமும் அங்கேதான். இன்று ஏதோ கொஞ்சம் எழுதத்தெரிகிறது என்றால் அதற்கான வாசலைத் திறந்துவிட்டதும் அங்கு வாழ்ந்த சூழல்தான்.
மூன்றாண்டுகள் பணி முடித்தநிலையில் திருமணம் முடிவானபோது தன்வீட்டுப் பெண்ணுக்குத் திருமணம் என்பதுபோல் கொண்டாடிய மக்களும் நண்பர்களும் முகவர்களும் என்றென்றும் என் நினைவில்.
நான்கு ஆண்டுகள் முடியுமுன்னரே திருச்சிக்கு மாற்றலாகி வந்து இன்று இருபது ஆண்டுகள் பணிமுடித்த நிறைவிலேயே இப்பதிவு.
இந்தியாவின் தன்னிகரற்ற ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெருமையும் பொறுப்பும் உண்டு எங்களுக்கு. ஒரு கடைக்கோடியிலிருக்கும் படிப்பறிவற்ற பாமரனுக்கும்கூட காப்பீடு வழங்குவதும் முதிர்வுத் தொகை வழங்கும் பொருட்டு அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வழங்குவதும் எங்களின் பெருமைமிகு பணியில் தலையானது.
நிறுவனத்தில் பணிசேர்ந்த பின் இணைந்த AIIEA எங்களின் தொழிற்சங்கம் நான் கேள்விப்பட்டிருந்த labour union என்ற வார்த்தைகட்குப் புதிய அர்த்தத்தைச் சொல்லியது. உறுப்பினரின் பணிப்பாதுகாப்பும் பெண் ஊழியர்களின் கண்ணியமும் காப்பதில் முன்நிற்கும் சங்கம் வெறும் ஊதிய உயர்வுக்காக மட்டும் போராடாமல் சமூகப் பிரச்சினைகளையும் முன்னிறுத்திப் போராடக் கற்றுத்தந்தது.
இத்தகைய ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலிலும் நிறுவனத்தின் அரவணைப்பிலும் இன்று (15.07.2016) 21வது ஆண்டில் பணியைத் தொடர்கின்றேன்.
எங்கள் நிறுவனத்தோடு நாங்கள் வளர்கிறோம். எங்கள் வாழ்க்கைநிலை உயருகிறது. எனக்கான ஓய்வூதியக்காலத்தின் நிறைவான சூழலும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.
அதற்காக எங்களின் எல்.ஐ.சி. நினுவனத்துக்கும் எங்களை வழிநடத்திப் பாதுகாக்கும் AIIEAவுக்கும் நன்றி.
என்னோடு இணைந்து பணியாற்றும், என் பணிச்சூழலை இலகுவாக்கும் நண்பர்களுக்கு நன்றி.
அனைத்துக்கும் மேலாக பெண்களுக்குக் கல்வி எதற்கு என்று கேட்கும் சுற்றங்கள் நிறைந்த குடும்பச்சூழலில், அதைமீறி என்னைப் படிக்கவைத்து இந்த நிறைவான வாழ்க்கைக்கு வித்திட்ட எனது பெற்றோர்க்கு ஏது கைம்மாறு?