Friday 16 December 2022

மேலே
மேலே
என்று 
உச்சிக்கு வந்தவுடன் 
கீழே பார்ப்பது
இயல்பாகிறது

Wednesday 9 November 2022

அமைதியாக இருக்கச் சொல்லி பதற்றப்படுது மனசு.
ஏதோ சில தருணங்களில்
ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பாள்
இரண்டு நாளாக நசநசக்கும் இந்த மழைபோல

Saturday 24 September 2022



காலையில் இருந்து அழைப்புகள் ஏற்கப்படாமல் இருக்கின்றன
அண்மையில் பிறந்த பூனைக்குட்டியென கண் திறவாமல் கிடக்கிறேன்
யாரோ தேடியிருக்கிறார்கள்
யாரோ வருவதற்கு இருக்கிறார்கள்
யாரோ விட்டுச் செல்ல விழைகிறார்கள்
எந்தத் தகவலையும் ஏற்க இயலா மனநிலை
பல்லாங்குழிச் சோழிகளென
தொண்டைக்குழியில் நெருடுகின்றன
வண்ண வண்ண மாத்திரைகள்
திறவாத இமைகளை இன்னும் இறுக மூடிக் கொள்கிறேன்
அன்பின் நிமித்தம் யார் வந்தாலும்
வலி குடையும் என் கால் பாதங்களை
போர்வையால் மூடிவிட்டுச் செல்லுங்கள்
நம் இத்தனை நாள் பழக்கத்திற்கு இந்தச் சகாயம் போதுமெனக்கு

Tuesday 14 June 2022

வெடித்துக் கிளம்பும் அழுகையின் கண்ணீரில் 
உன் உயிர்ச்சூடு ♥️
எதுவென்று புரியாமல் தவித்தலையும் நினைவுகளைக் குழைத்துத் தீட்டுகிறேன்
உயிர் பெறுகிறாய் நீ
ஓவியமாய் ♡

Wednesday 4 May 2022

கத்தரி வெயிலைக் 
கத்தரித்துத் துண்டு துண்டாக்கி  
விளையாடித் தீர்க்கிறார்கள்
குழந்தைகள் 🌟🌟

Sunday 1 May 2022

ஆளசிந்தையில் யாதொரு தெளிவுமில்லை
ஏதுமற்றவன் பாடுகள் குறித்த அக்கறையில்லை
எல்லாமிருப்பவனிடம் அவனுக்கு சொல்வதற்கேதுமில்லை
அரிதாரம் பூசி
அரியணை ஏறிய நாள்முதலாய்
கஞ்சிக்குத் தவிப்பவனின்
கழனியில் நிற்பவனின்
சாய்க்கடை மலத்திலுழல்பவனின்
மதச்சார்புகள் அற்றவனின்
குரல்களேதும் அவன்காதில் விழவில்லை
நித்தமொரு ஊர்வலம்
உலகம் சுற்றும் வாலிபனாய்
ஒய்யார உடையணிந்து தர்பார்கள் நிகழ்த்துவதோ வாய்ச்சவடாலில்.
மானுட தர்மங்கள் யாவும் மாறி
மாட்டுக்கொரு நீதி
மனிதருக்கொரு நீதி
மனிதரிலும் சிலருக்கோ அநீதியென்றே
மனுதர்ம சாத்திரங்களாயின. 
மனுவும் சாணக்கியனும் நாவில் நடமாட சொற்பொழிவுகளின் தரவுக்கோ புராண ஏடுகள்தானே.
எதையேனும் சொல்லி
எதையெதையோ புளுகி
வரலாற்றின் ஏட்டைத் திரிப்பதற்குக்
#குறிப்புகள்_ஏதும்_தேவையா?
சொல்லுங்கள்.

Wednesday 20 April 2022

வெயில் சுமந்தலைந்து
வீடு நுழைகிறேன்
இறக்கி வைக்கும் ஒவ்வொன்றிலும் வெயில் வாசம்.

Sunday 3 April 2022

இப்போது
நுரைத்துப் பொங்கி வழிகிற என்னுலகம்
எப்போது நிறைந்ததெனத் தெரியவில்லை
எல்லோரும் கொஞ்சமாய் 
எடுத்துக்கொண்டதாய் நினைவு
ஏதுமற்றதாய் வறண்டு கிடந்த பொழுதுகளும் உண்டு
எடுத்தவர் 
கொடுத்துச் சென்றனரா
எடுத்ததையே மீண்டும் தந்தனரா
கேள்விகள் குடையும் மனதோடு
உறைந்த நினைவுகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
நுரைத்துப் புளித்து கொப்பளித்து வழிந்து கொண்டிருந்தது என்னுலகம் அப்போதும்.

Saturday 12 February 2022

பிள்ளைகள் பள்ளிக்கும்
அப்பா வேலைக்கும்
சென்றுவிட்ட நாட்களில்
தனித்திருக்கும் அம்மாவோடு
பேசிக்கொண்டிருக்கிறது
முற்றத்து வெயில்

Thursday 10 February 2022

அணிலோடிய மரங்களையும்
களிறாடிய வனங்களையும்
சிதைத்தழித்தோம்.
மனிதர்களே!
சிறகுகள் அணியாதீர்
புட்களின் வானத்தையாவது விட்டுவைப்போம் .
நாம் பேசிக்கொள்ளாத வார்த்தைகள்தான்
இக்கடற்கரை மணலென 🖤