Sunday 30 December 2018

கட்டு என்ன வெல பாட்டீ?

ஆங்! பாஞ்சு ரூவா?

அட! போன மாசம் பத்துரூபான்னு தானே குடுத்தீங்க? இப்ப என்ன பதினைஞ்சு?

( பொதுவாக காய்கறி கீரை விற்பவர்களிடம் பேரம் பேசுவதில்லை. பாட்டியின் முகபாவம் பேச்சை வளர்க்க வைக்கும். அதற்காகவே)

அதெல்லாம் வெல ஏறிப்போச்சு ஆயா.

க்கும். என்ன கொல்லையில விளைய வக்கிறீங்களா, வேலில வெளஞ்சு கெடக்குறது தானே.

ஆங்! அப்டீனா கல்லு முள்ளு கிளிக்க நீயே போய் பறிச்சுக்க‌. டெப்பார்ட் கடைல ( departmental store) இந்த கேள்விய கேட்ருவியா? முளுசா முன்னூறு ரூவா சொன்னாலும் வாங்குவிய. இங்க வந்தா சட்டநாயம் பேசுவீங்க.

முறுக்கிக் கொண்டு முகம் திருப்பிக்கொண்ட பாட்டியின் கோவத்தை ரசித்தவாறே ஆறு கட்டு 90 ரூபாய் கொடுத்து வாங்கியவளுக்கு ஒரு பத்து ரூபாய் கட்டு வல்லாரையை சேர்த்து திணித்து அனுப்பினார்.

ஆறு கட்டு ஆவாரம்பூ கீரை. மாலை அமர்ந்து ஆய்ந்து முடித்தாயிற்று. ஆனால் கீரைக்கார பாட்டியின் வார்த்தைகள் மனதை இன்னும் ஆய்ந்து கொண்டே இருக்கிறது.

எப்போதும் தனித்திருப்பதேயில்லை.
உன் சொல்லொன்று செவியோரத்தில்.
உன் பார்வையொன்று
விழியோரத்தில்.
உன் விரலொன்று பிணைத்தபடி.
உன் கோபமொன்றில் அஞ்சியபடி
உன் தொடுகையில் கரைந்தபடி
உன் அழுகையில் கலங்கியபடி.
எப்போதும் எப்போதும்.
தனித்திருப்பதேயில்லை
ஒருபோதும். 💜

எங்கள் வீட்டில் எப்பவுமே பிள்ளையாரெல்லாம் கிடையாது. அப்போதெல்லாம் மனைப்பலகை எடுத்துட்டுப்போய் பிள்ளையார் உருவத்தை களிமண் அச்சில் வார்த்து வாங்கிவந்ததைப் பார்த்திருக்கேன். அக்கம்பக்கத்திலிருந்து இனிப்பு பூரணமும் கார உளுந்து பூரணமும் வைத்து செஞ்ச கொழுக்கட்டை வரும்.
பிள்ளையாரை இந்த அளவிற்கு தான் தெரியும். திருவிளையாடல் படத்தின் மூலம் கொஞ்சம் கூடுதலாக.

இன்று அலுவலகம் போய்ச் சேருவதற்குள்‌ பிரம்மாண்ட பிள்ளையார் ஏழெட்டு பேர் முக்குக்கு முக்கு உட்கார்ந்து இருக்கார். அவர்களுக்கு முன் மூஞ்சூறு சைசிலும் நிறத்திலும் நாலைந்து பொடியன்கள் துண்ணூறு பூசிக்கொண்டு. மனதைத் தைத்த விஷயம் ஒருவன் கூட வெளுப்பா இல்லை. திருத்தமான உடையோடும் இல்லை.

அப்பொடியன்களின் பெற்றோரிடம் சொல்ல விரும்புவது

" போங்கடா! போய் புள்ளகுட்டிகளைப் படிக்க வைங்க"

பேரறிஞர் அண்ணா..

அவர் பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு, அவர் முன்னெடுத்த மாநில சுயாட்சியை முற்றிலும் கைவிட்டு, மாநில உரிமைகளை தம் சுயநலத்துக்காக நடுவன்(?) அரசிடம் அடகு வைக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு, அண்ணாவின் சிலைக்கு மாலையணிவிப்பது மட்டுமே இன்றைய அதிகபட்ச செயல்பாடாக இருக்கிறது.

தேர்தலில் நிற்பது என்று கொள்கையளவில் முரண்பட்ட போதும் அய்யாவின் கொள்கைவழி நின்று ஆட்சி நடத்தியவர்.

தந்தைபெரியாரோடு தாம் பயணித்த நாட்களை  " எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது"  என்றே அண்ணா குறிப்பிடுவார்.

ஆம்.
தமிழகத்துக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது.
அக்காலத்தில்தான் சென்னைமாகாணம்     "தமிழ்நாடு" என்ற பெயர்சூட்டப்பெற்றது.

பேரறிஞரின் பிறந்தநாளில் அவர் முன்னெடுத்த கொள்கைகளை சிறிதேனும் நினைவு கூர்வோம்.

பொதுவில் பேசியதையே இல்லையென்று சொன்னவர்கள் புராணங்களில் எவ்வளவு புளுகியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

#பெரியார்_140

எந்த ஆண்டையும் விட தந்தை பெரியாரை நினைவு கூர்வதும் அவர்தம் கொள்கைகளை முன்னெடுப்பதும் இன்று கூடுதல் தேவை பெறுகிறது.

பிள்ளையாரை வைத்துக் கலகம் செய்பவனை விட அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடும் பாமரனுக்குப் புரியவைக்க, நம்மை கோவிலுக்குள் புக அனுமதிக்காதவன் தெருப்பிள்ளையாருக்குக் காவலிருக்க வைக்கிறானே அதன் சூட்சுமம் என்ன என்று அந்த ஏழைச் சிறுவர்களுக்கு உணரவைக்க பெரியாரை அவனுக்கு அறிமுகப்படுத்துதல் அவசியமாகிறது.

அந்தப் பிரம்மாண்ட பிள்ளையாரை தொட்டு தூக்கி நீரில் கரைய வைக்க பிரயத்தனப்படும் இளைஞர்களிடம் 
" உங்களை இதேபோல் தொடுவதற்கோ, தொழுவதற்கோ கோயில் கருவறைக்குள் அனுமதிப்பதில்லையே ஏனென்று எப்போதேனும் சிந்தித்தீர்களா?" என்று கேட்டு அவர்களை சுயமரியாதையோடு வாழவேண்டும் என்ற அடிப்படைச் சிந்தனையை ஊட்டுவதற்காக பெரியாரை முன்னிறுத்துவது இன்றியமையாததாகிறது.

ஒரு அரசியல் தலைவரை, முன்னாள் முதல்வரை, வயதில் முதிர்ந்தவரை நள்ளிரவில் குண்டுக்கட்டாகத் தூக்கி தாக்கி கைது செய்யும் வல்லமை பெற்ற காவல்துறை கைது செய்யவேண்டிய ஒரு கயவனுக்குத் காவல் நின்ற அவலத்தின் பின்னுள்ள காரணங்களைக் கண்டுணர நாம் பெரியாரைத் தூக்கிப் பிடிக்க வேண்டியது தேவையாகிறது.

தமிழகத்தின் ஒப்புயர்வற்ற அரசியல் தலைவனொருவனின் மரணத்தை எதிர்பார்த்துக் குதூகலித்துக் காத்திருந்த ஈனத்தனத்தினை உணர்ந்து சுதாரிக்க நாம் பெரியாரைப் பரப்புதல் தேவையாகிறது.

அத்தலைவனின் உடலைப் புதைத்துத் திரும்புவதற்குள் மெரீனா தீட்டுப்பட்டதாகக் கவலைப்பட்ட வன்மத்தை எதிர்கொள்ள வேறெப்போதையும் விட பெரியாரைத் துணைக்கோடல் இன்றைய காலத்தின் புறக்கணிக்கவியலா அரசியல் தேவையாகிறது.

இன்று "ஹைகோர்ட்டாவது.. மயிராவது..?
போலீஸ் டிபார்ட்மெண்ட் கரெப்ட் ஆயிடுத்து.. நான் தரேன்யா லஞ்சம்.." என்று பொதுவெளியில் எக்காளமிடும் திமிர்த்தனத்தின் பின்னணியை அம்பலப்படுத்த பெரியார் என்றைக்கும் தேவையாகிறார்.

#பெரியாரைப்_படிப்போம்
#பெரியாரைப்_பின்பற்றுவோம்
#பெரியாரைக்_கொண்டாடுவோம்
#பெரியாரைப்_பரப்புவோம்

உங்களைத் தூண்டி உணர்வுபூர்வமாக உசுப்பேத்தி விடுபவன் எவனும் இந்தத் தரங்கெட்ட வேலையைச் செய்ய முன்வருவதில்லை என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?

#பெரியார்_சிலை_மீது_ஷூ_வீச்சு

ஈர வானத்தோடு
நனைந்த பாடலொன்றையும்
கிளையில் உலர்த்தி விட்டு
கூட்டுக்குள் நுழைந்தது
தூக்கணாங்குருவி

தொலைத்த என்னைத்
தேடியவிடத்தில்
கிடைத்ததுன்  உயிர் 💜

வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயிலில் போர்வெல்ஸ் நிறுவனத்திலிருந்து வந்து ஆழ்துளைக் குழாய்க் கிணறு அமைக்கும் பணி நடந்து கொண்டி இக்ருந்தது.

சேறும் ஈரமும் அப்பிக்கிடந்த உடலோடு தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் இருந்தனர்.

இனி இந்தக் கோவிலின் நீர்த்தேவை இதிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரால் தீரும்.

ஆக,  இவ்வாலயத்தின் மடி, சுத்தம் ஆச்சாரம் எல்லாம் பேணப்படுவதே கருவறைக்குள் அண்டவிடாத எம் மக்களின் வியர்வையால் தான்.

வேலை முடிந்ததும் அந்தத் குழாய்க்கும் ஒரு பூசை செஞ்சாலும் செய்வாங்க. ஆனாலும் நித்தம் நனைக்கும் அந்த ஈரம் எம் சகோதரனின் ஈகை அல்லவா?

நீ கிள்ளிப்போட்ட
வெற்றிலைக் காம்பில்
உன் நகப்பிறைப் பிம்பம்

உச்சிக்கிளையொன்றிலிருந்து
கீழிறங்கும் விழுதொன்று
நிலம் தொட்டு
மண்கீறி
ஊடுருவி
வேரூன்றும் கணமதில்
ஆலின் ஆணிவேரும்
மலர்ந்து சிலிர்க்குமன்றோ?! 💜

நிலைமாறும் உலகு.
நிலைக்காதென்பது தெளிவு.

கிளிஞ்சல்கள் பொறுக்கித் திரியும் சிறுவனின் கால்களில் அப்பிக் கிடந்தது
சிறுதுளிக் கடலும்
மலையொன்றின் மென்துகளும்.

விதைபோடாமலே முளைத்த
மழைக்காளான் சொல்கிறது
உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்க விழையும்
மண்ணின் ஆசையை.

ஒற்றைத் தேநீர் அருந்தும்
காலம் மட்டுமே
வார்த்தைகளற்ற நம் பொழுதுகளுக்குப் போதுமானதாக இருக்கிறது.
இதழ் பொறுக்காத சூட்டில்
கிடைத்த தேநீர்
ஏற்கிற சூட்டுக்கு இளகும் வரை
உரையாடும் மௌனத்தின் சாட்சிதானே
சிந்திய தேநீரில்
உன் விரலெழுதிய என் பெயராய்
மேசைமேல் காய்ந்துகிடக்கிறது 💜

கீச்சிட்டு
அன்றைய பொழுதினை அளவளாவி
அந்தியில் கூடடைகின்றன
அரசமரச் சிட்டுகள் 🕊️🕊️

இன்றுவரை
திறந்தேயிராத ஒரு கதவைத் தட்டி
நீக்க முடியாத ஒரு தாழை நீக்கி
உடைக்கவியலா ஒரு விலங்கினை உடைத்து
சிறகசைக்க விரும்பும் ஒரு புள்ளிற்கு
அதன் வாசல் காட்டி
என்றேனும்
வானளக்கச் செய்யுமோ என் வரிகள்?

பாதையைத் தவறவிட்ட
பாதையொன்றில்
எனக்காகக் காத்திருந்தது என் பட்டாம்பூச்சி 🦋

ஆமையெனக் கூட்டுக்குள்
ஒடுங்குகின்றேன்
அலையெனவே வந்து
இழுத்துச் செல்கிறாய் 💜

கிசுகிசுக்கும்
மழைத்துளியின் மொழி
வாழ்வின் ரகசியத்தை இயம்புகிறது காதோரம்..

பொழிந்து நனைத்த
மழையில்
மலர்ந்து துளிர்க்குது
அடர்வனமொன்று 💜

அடர்ந்து வான்மறைத்த
தருக்களின் கிளைகளூடே
ஊடுருவிச் சென்று
தண்ணொளிக் கீற்றால்
தளிரிலை தீண்டுகிறான் கதிரவன்.

மழையில் நனைந்திருந்த
சிக்கிமுக்கிக் கல்லின்
உள்ளே
பதுங்கிக்கிடந்தது
என் மூதாதையள் மூட்டிய தீ 💥

மொழியற்ற
என் மௌனத்தின் சொற்களைத் தான்
பெய்யெனப் பெய்கிறது
இந்த மழை.

இருக்குமா என்றான் சாத்தான்
இருக்கிறது என்றான் கடவுள்.
இருக்கட்டும் என்றான் புத்தன்.

நனைதற் பொருட்டு மழைக்குள் நுழைகிறேன்
நனையாதிருக்க
குடைக்குள் ஒளிகிறார்கள்.
குடையையும் என்னையும்
நனைத்தபடி
பெய்யெனப் பெய்கிறது மழை.

மேற்பரப்பில்
சலனங்கள் ஏற்படுத்தி விட்டே
ஆழத்தில் அமர்கிறது
குளத்தில் எறிந்த கல்.

உள்ளுறைந்த கூழாங்கற்களின்
மேற்பார்வையில்
ஓடிக்கொண்டிருந்தது நதி

சாத்தானிடம் இருப்பது
குத்திக்கிழிக்கும் கோரைப்பற்கள் என்பது தெரிந்தே இருக்கிறது.
புத்தனின் மென்புன்னகையில்
நறுவிசாய்த் தெரிந்து மறைகின்றன
நச்சுப்பற்கள்.

தட்டப்படும் கதவைச்
சடுதியில் திறவுங்கள்
நெடுநாள்
தேவையாக இருக்கலாம்
உங்களாலோ
உங்களுக்கோ

நெஞ்சைக் கீறிவரும் வார்த்தைகளே கவிதையெனில்
நெஞ்சைப் பிளந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
ஆகச் சிறந்த கவிதை.

ஆணவத்துடனும் அதிகாரத் தோரணையிலும்
உங்கள் தொடுகைகள் எம்மீது எழுதும் மொழியறிந்திருக்கிறோம்.
நீங்கள் இச்சையுடன் நெருங்கும்
எந்தப்பெண்ணின் விழியிலிருந்தும்
வழியும்
கடைசி நம்பிக்கையின்
மொழியறியும் திறனிருந்திருந்தால்
நாங்கள் வெற்று வார்த்தைகள் கொண்டு
வேள்வி நடத்தத் தேவையில்லை.

தருக்கள் அடர்ந்த வனமதின் வாசம் அறிகிறேன்
உன் அருகாமையில் 💜

நிலம் நோக்கி மலரும் பன்னீர்ப்பூவென
வாசம் நிறைந்தது
உன் புன்னகைப் பார்வை💜

நம் உரையாடலில்
சொற்களுக்கிடையே நீ வரைந்த கோடு
நம் மௌனங்களுக்கு இடையில்
சுவராய் வளர்ந்து நிற்கிறது

உறக்கம் வராத இவ்விரவை மடித்து
விடியலெனும் உறைக்குள் வைக்கிறேன்.
விடியப் போகும் பொழுதினை
இரவைக்கொண்டு மூடுவேன்
இரவைத் தேடும் நிலவைக்
கையில் எடுத்துச் செல்கிறேன்
விரலிடுக்கில்
வழியும் நிலவின் ஒளியை
விழியில் ஏந்திக் கொள்ளுவேன்.
காரிருள் தேடும் கதிரவனைக்
ஆழ்கடல் சென்று கரைத்திடுவேன்
வெள்ளி அலைகளாய்த் துள்ளும் கடலை
மனதுக்குள்ளே அடைத்தெடுத்து
இரவும்
பகலும்
கடலும்
கதிரும்
நானே என்று கூத்திடுவேன்.

உறக்கம் வராத
இவ்விரவினை மடித்து
விடியல் உறைக்குள் வைக்கிறேன்.

விழி மூடிய தருணம் துளிர்த்த கனவினூடே பயணித்திருக்கிறேன்
விடைபெறுகையில் நீ
இதழ்களுக்குள் மறைத்துக்கொண்ட சொல்லொன்றைத் தேடுகிறேன்.
வந்த பாதையெங்கும் பார்த்துவிட்டேன்
எங்கும் சிந்திவிடவில்லையது.
கனவுப் பாதையிலும்
காணவில்லை அந்தச் சொல்
சாக்குபோக்கு ஏதுமின்றி சட்டென்று சொல்லிவிடு
விடியல் பொழுதில்
இமைக்கதவுகள் திறந்தென்னை
இரக்கமின்றி வெளித் தள்ளுமுன்.

முற்றம் தாண்டி
வீட்டை நனைக்கிறது மழை
கட்டுக்கள் மீறி
மனம் நனைக்கும் காதல் போல 💜

வெள்ளைத்தாளின் மேலிட்ட
நுண்புள்ளியென
பெருங்கவனம் ஈர்க்கும்
உன் நினைவுகள்💜

மழைத்துளிகளை
சேகரித்தேன்
நிறைந்தது என் கவிதை 💜

வயலில் திரிந்த
மயிலைக் கண்டேன்
நினைவில் திரியத் துவங்கியது
கவிதையொன்று

பெய்யெனப் பெய்துப்
பின் தூறலென நசநசத்து
உறங்கச் சென்ற மழையை
ஓயாமல் அழைக்கின்றன
குளத்துத் தவளைகள்

நதி போகும் போக்கில்
உருண்டோடும்
கூழாங்கல்
எதிர்ப்புகள் ஏதுமற்று.

அழைப்பு மணி அழுத்து

ஒற்றை விரல் முட்டியில்
மென்மையாய்த் தட்டு

முன்விரல்களால்
மெதுவாய்த் தட்டு

உள்ளங்கை பதியக்
கொஞ்சம் அழுத்தித் தட்டு

விரல்கள் அழுந்தப்
படபடவெனத்தட்டு

இன்னும் வேகமாய்
ஒலியெழும்பத்  தட்டு

திறக்கும்.
திறக்கவேண்டும்.

அன்றேல்
அடித்து
உடைத்தெடுத்து முன்னேறு

கதவாயினும்
தடையாயினும்.

நேற்றுவரை
செய்யாமல் விட்டதற்கும்
நாளை செய்தாக வேண்டியதற்குமிடையே
காலத்தின் பெருஞ்சுவரென
ஆயாசம் வளர்ந்து நிற்கிறது

ஒரு மென்னிறகு இத்தனை கனம் கொண்டதா?
மயிற்தோகையின் சிறுமயிர் கீறி
குருதி வழிந்ததுண்டா?
மொழியற்ற பொதுப்பார்வையின் வீரியம் நெஞ்சு துளைத்ததுண்டா
பொருள் பொதிந்த சிறப்பு நோக்கில்
இதயம் சுக்கு நூறாய்ச் சிதையுமா?
பார்வை வீசிய வார்த்தைகள் உயிர் பிளக்குமா?
போய் வா எனக் கையசைத்து விடைதருதலினால்
காலடியில் நிலம் நழுவுமா?
கணப்பொழுதில் உயிர் பிரியுமா?

Friday 28 December 2018

எழுத்துப்பிழைகள் நிரம்பிய
என் வார்த்தைகளுக்குள் சிக்கிக்கிடக்கிறது
உன் மீதான
பிழையற்ற காதல் 🖤

சிறுதானிய அரிசி

பாரம்பரியம்:

உடல் வலிமை பெற மூங்கில் அரிசி
பல நோய்களுக்கு அருமருந்து என பேசப்படுகிறது. தவிர, தினை, சாமை, குதிரைவாலி ஆகிய அரிசி வகைகளில் உள்ள விசேட மருத்துவகுணம் யாது? ஆயுர்வேதத்தில் இவ்வகை அரிசிகளைப் பற்றி குறிப்பு உள்ளதா?

மூங்கில் அரிசி

மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் ஓர் அரிய நிகழ்வு. மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும். மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம்.

மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது.

ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். அவர்கள் சாப்பிட்ட மூங்கில் அரிசிக் கஞ்சியின் விவரம் - மூங்கில் அரிசி, நொய் அரிசி -  வகைக்கு 150 கிராம், சீரகம், ஓமம் - வகைக்கு அரைத் தேக்கரண்டி, பல்பூண்டு - 6, சுக்கு - ஒரு துண்டம், நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.

மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில், 
நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

தினை

உடலிற்கு வலிவு தரும். சிறுநீரை அதிகம் வெளியேற்றி தசைகளை இறுகச் செய்யும். கொழுப்பு - ஊளைச்சதை சேரவிடாது. நல்ல பசியை உண்டாக்கும். விந்தணுக்களை வளரச்செய்யும். வீக்கம், நாட்பட்ட காய்ச்சல், கபம், வாதநோய் இவற்றில் ஏற்ற உணவு.
இதனை சாதமாக்கிச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிச் சாப்பிட வீக்கம், நீர்த்தேக்கம் வடியும். கூழை பிரசவித்த மாதர் சாப்பிடுவது வழக்கம். இதனை லேசாக வறுத்து மாவாக்கி தேனுடன் சாப்பிட களைப்பு நீங்கும்.

சாமை

எளிய உணவுப்பொருள். இனிப்பும், குளிர்ச்சியும் தரும். எளிதில் செரிக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். உள்ளெரிச்சல் காய்ச்சல் நிற்கும். உடல்வளர்ச்சிக்கும், தாதுவிருத்திக்கும், புஷ்டிக்கும் ஏற்றது. இதன் கஞ்சி பேதியை நிறுத்தும்.

குதிரைவாலி

குதிரைவாலியில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுவதால் உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. உடலில் கபத்தினுடைய ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.
குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து  6.2கிராம், கொழுப்பு சத்து  2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் என அடங்கியிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இதனுடைய மருத்துவ பயன்கள் - உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்க வல்லது, ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது, இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

துறவின் மேல் ஆசைவந்த இளவரசனின் மனைவிக்குத்தானே உண்மையான துறவறம்?

15 மூலிகைகள்

ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும்.

துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி

1. துளசி:-

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

2. தூதுவளை:-

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.

3. சோற்றுக்கற்றாழை:-

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.

4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி:-

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

5. பொன்னாங்கண்ணி:-

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.

6. நேத்திரப்பூண்டு:-

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.

7. நிலவேம்பு:-

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு:-

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.

9. ஓமவள்ளி:-

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

10. அருகம்புல்:-

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

11. ஆடாதொடை:-

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி:-

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.

13. நொச்சி:-

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.

14. தழுதாழை:-

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.

15. கழற்ச்சி:-

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்.