சமையலறை முழுவதும் சாக்லேட்டும் ஐஸ்கிரீமும் நிறைந்திருக்க
கூடமும் தாழ்வாரமும்
குதூகலம் நிறைந்திருக்க
தோட்டமெங்கும் அவன் சிரிப்பூ மலர்ந்திருக்க
நிலாவோடு பேச இருக்கையொன்றும் ஆங்கே.
ஆடிப்பாடிக்களித்த களைப்பில்
படுக்கையறையில் நாய் பூனை கரடி சிறுத்தையோடு ஐவராகிறான்.
பாடப்புத்தகங்களுக்கு இடமில்லாத வீட்டுக்குள்
கூத்தும் கும்மாளமும் பொங்கி வழியுது.
இன்னும் நாலுபேர் வந்தால் என்ன செய்வதென்ற கேள்வியொன்றின் வினையாய்
அட்டைகளை இடமாற்றி
பெரிய வீடொன்றைக் கட்டுகிறான் சடுதியில்.
தொகுப்பு வீட்டின் நெரிசலுக்கு நடுவே
ஏக்கப் பெருமூச்சோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.