Wednesday 31 May 2017

பெண்ணென்னும் குளிர்நெருப்பு

புவிக்கு ஆதாரம் அவளே.
பொறுமையில் பூமாதேவி
யெனச் சொல்லிப் பொத்திவைத்தார்.
சிறுதுளை வெளிச்சம் போதுமவளுக்கு.
சீறிப்பாய்ந்திடும் திறன்கொண்டவள்தான்.
பெரியாரும்
காந்தியும்
பாரதியும்
பாவேந்தனும்
விரல்பிடித்து அழைத்து வந்தனர் அவளை.
நாகம்மை
மணியம்மை
மணலூர் மணியம்மா
ராமாமிருதம் அம்மை
லீலாவதியாய்
போராட்டங்கள் வென்று காலூன்றினாள்.
அம்பையாய்
இளம்பிறையாய்
இலக்கியம் பூண்டாள்.
வர்த்தினியாய் அன்பை விதைக்கிறாள்.
கலையாய்
அவர்களின் அடியொற்றி
முன்செல்ல விழைகிறாள்.
யாதுமவளே.
ஞாலத்தில் இனி அவளைப்
பூட்டிவைப்பவர் இல்லை எவரும்.
அன்பெனும் கண்கொண்டு
அகிலம் நோக்கும் அவளோடு
கரம்கோருங்கள்.
கனவுகளில் மட்டுமே
சிரிக்கும் அவளை சேர்த்தணைத்து
சகமனிதியாய் தோள்கொடுங்கள்.
வானம் வசப்படும்
அவளுக்கும்
அனைவருக்கும்.
ஏனெனில்
பெண்ணின்றி அமையாது இவ்வுலகு.
------------------------------------------------------

சர்வதேச மகளிர்தின புரட்சிகர நல்வாழ்த்துகள்,
என்னொத்த மகளிர்க்கும்
தோள்கொடுக்கும் அன்புநிறைத் தோழர்கட்கும்.

08/03/2017
------------------------------------------------------

அவளும் நானும்

இன்முகம்
புன்சிரிப்பு
மென்பார்வை
பூந்தென்றல்
குளிர்சாரல்
வர்த்தினியும் நானுமாய்
பொன்மாலைப்பொழுது

Varthini Parvatha
07/03/2017

Monday 29 May 2017

இருக்கிறோம் உயிரோடு...
வாழ்கிறோமா?

நானும் உன்னை.

தேர்வு அறையில் நான்.
தலைப்பென்னவோ
"நான் உன்னைக் காதலிக்கிறேன்"

தேர்வில் வெற்றியா தோல்வியா
எதுவென்பதில் அய்யமில்லை.
காதலில் வெற்றியா தோல்வியா
என்ற அச்சமுண்டு.

அழகான கையெழுத்து
கவித்துவ சொல்லாடல்
கொண்டு வென்று
வெற்றிக்கோப்பையை ஏந்தி வருகிறேன்
தோல்வியை எதிர்கொள்ளும் திராணியின்றி.

சொல்லவா நான்?
சொல்வாயா நீ?

என் நெஞ்சு துடிக்க
விழிகள் படபடக்க
கரங்கள் நடுங்க
கால்கள் துவள
வந்தடைகிறேன் உன்னை.

நெஞ்சாங்கூட்டில் உயிர்பிழைக்க
அந்த மருந்தென்னும் சொல்லைச் சொல்லிவிடு.
"நானும் உன்னை"

Thursday 25 May 2017

21/12/2017

அடிபட்ட இடத்தில்
PAIN இருக்கா என்று கேட்டார்கள்.
இன்னும் கூடுதலாய் வலி.

#உலகத்_தாய்மொழி_தினம்_இன்று

18/02/17

எங்கள் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் ஈடு இணையற்ற தோழரும், தொழிற்சங்க வழிகாட்டியுமான தோழர். R.G. என்று அழைக்கப்படும்
தோழர். R.GOVINDARAJAN அவர்கள் மறைவுக்கு செவ்வஞ்சலி.

தோழர்.ஆர்.ஜி. அவர்களை சந்திக்கும்போதெல்லாம் ஒரு அன்புநிறைத் தோழராகவே உணர்ந்திருக்கிறேன். வயதில் சிறியவர்கள் தானே என்ற எண்ணமேதுமின்றி என் போன்றோரை வாங்க தோழர் என உபசரிக்கும் அவரது அன்பையும், மதித்து உரையாடும் பாங்கினையும் நம் அய்யங்களைத் தீர்க்கும் அக்கறையினையும் வியந்து நோக்கியுள்ளேன்.

ஒரு மாலையில் திருச்சி தொடர்வண்டி சந்திப்பில் அவரோடு உரையாடிய அனுபவம் மறக்கவியலாது. காணும்போதெல்லாம் தம் அனுபவஅறிவால் நம்மில் ஒன்றை நிறைத்துவிடும் கனிவு அவரிடமிருந்தது.

தொழிற்சங்கம் பற்றிய தெளிவான புரிதலை என்னுள் உருவாக்கிய தோழர். ஆர்.ஜி. அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பாகவே உணர்கிறேன்.

AIIEA விற்கும் அன்னாரின் மறைவு ஈடுசெய்யவியலாத ஒன்றே.

தோழருக்கு செவ்வணக்கங்கள்.

குமாரசாமிக்கு ஒரு குட்டு கூடக் கிடையாதா?
வாய்ப்பாடையாவது imposition எழுதச் சொல்லுங்க..

15/02/17


உன் முத்தத்துக்கும்
என் முத்தத்துக்குமிடையே
காது தூரம்தான்
முகத்தைத் திருப்பு என் பக்கம்.

நமக்கான தனிமையில் நிகழும் 
உரையாடலினூடே
உனது
முதல் "ம்"ல் மரித்துப்போகிற உயிர்
நீ தரும் 
முதல் "இச் " ல்
உயிர்த்தெழுகிறது.

Tuesday 23 May 2017

மூன்று வயதுப் பிஞ்சு, 

ஏழு வயதுக் குருத்து, 

பதின்வயதுப் பாவையர், மூத்தகுடிப் பெண்மணிகள்... 

எவரையும் விட்டுவைக்க மனதில்லை உங்கள் காமத்திற்கு... எனில் தீர்வு ஒன்றையொன்று தான் சகோதரர்களே. 

#இனி_பெண்_என்றோரினம்_பிறப்பற்றுப்_போவதுதான்_ஒரு_நூற்றாண்டுக்காவது

ஆமைபோல் ஒடுங்கு

உள்ளே இரு

பத்திரமாய் இரு

கவனமாயிரு

எச்சரிக்கையாய் இரு

எட்டிப்பார்க்காதே

முகம் காட்டாதே

சிரித்து சிலிர்க்காதே

உரத்துப் பேசாதே

கோபம் கொள்ளாதே

குரலுயர்த்தாதே

அடங்கிக்கிட

சுண்டுவிரல் தெரிய உடையணியாதே

இழுத்து மூடு உடலை...

இளமை ததும்பும் பருவப்பெண்ணுக்குச் சொல்லவில்லை இதெல்லாம்...

பால்குடிக்கும் பச்சிளம் பெண்சிசுக்களுக்கே சொல்கிறேன் இன்று.

பேராண்மைகளுக்கு ஒரு செய்தி

பெண்ணெனப்

பிறந்துவிட்டோம் என்பதாலேயே

பிய்த்தெறிகிறீர்கள் சிறகுகளை.

அணிந்திருக்கும் ஆடைகளை

அவிழ்த்தெறிந்த உங்கள் அராஜகம்

குழந்தையென்றும் பாராமல் 

குருதி சுவைக்கிறது.

இளித்தபடி நெருங்கும் உங்கள்  வாயோரங்களில்

நீண்டிருக்கும் பற்களில்

சிக்கிக் கொண்டிருக்கும் சதைத் துண்டுகளில்

உங்கள் தாயின் வாசனை

நுகர மறந்தீரோ?

அண்ணாவென்றோ

மாமாவென்றோ

அன்போடழைத்த மழலையின்

அடிவயிறு தடவும் உங்கள் பேராண்மை

குறித்து

சிலாகித்து சிரித்திடுங்கள் உங்களுக்குள்ளாகவே.

சிதைக்கப்படும் பெண்ணினம் 

பிறப்பின்றிப் போகட்டும் இனியும்.

உங்கள் இச்சைக்குப் பெண்ணுரு தேடி

காடுகளில் திரிந்தலையத் தயாராகுங்கள்

பேராண்மைகளே.

வெங்காயம்
வெள்ளைப்பூண்டு
தக்காளி
கத்தரிக்கா...

போன்றவற்றை வெட்டுவதற்கு மட்டுமே
பெண்கள்
இதுவரை கையிலெடுத்த கத்தியின்
உச்சபட்ச பயன்பாட்டினை
உலகிற்குப் பறைசாற்றினாள்
என் தோழியொருத்தி.

Monday 15 May 2017

சமர்

நிராயுதபாணியாய்தானே
நிற்கிறேன்.
ஆயுதங்கள் தரித்து வென்றதாய் குற்றஞ்சாட்டுகிறாய் நீ.

Sunday 14 May 2017

நேசத்தின் வாசம்

விரல் கோர்த்த நேசம்
விடைபெற்றுப் போனபின்னும்
விரலிடுக்கில் நேசத்தின் வாசம்.

தீண்டாய்...

பற்றியெரியும் பரபரப்புகளினூடே
ஆறுதலாய்..
தீண்டும் உன் விரல்களின் முத்தம்.

கோப்பைத் தேனீர் ஆறட்டுமே,
சுடச்சுட பார்வைகளைப் பரிமாறிக்கொள்வோம்.

வெற்றிடம் நிரப்புமாம் காற்று.
நீ என்னை நிறைத்தபின்தான்
புரிந்தது.

நடந்து செல்லும் பாதையில்
இடறும் சிறுகல்லகற்றக் குனிந்து நோக்குங்கால்
உன் விழியெனத் தெரிய
வலி மறந்தேனடா.

விழித்திருக்கும் பொழுதில்
நினைவுகளால் நிறைக்கிறாய்.
பிரிந்திருக்கும் கணங்களில்
துயரங்களால் நனைக்கிறாய்.
சேர்ந்திருக்கும் பொழுதினை
மௌனங்களால் கரைக்கிறாய்.
இமைசேர விடாமல் இரவுகளில்
கனவுகளால் துளைக்கிறாய்
நினைத்திருக்கும் பொழுதுகளில்...
நானாகவே இருக்கிறாய்.

வருவாயென எண்ணும்போது
வாராமலே போகிறாய் நீ்.
அழைக்காமலே வந்து ஆக்ரமிக்கும் உன் நினைவு.

விடியல்
பறவைக்கு ஒரு
சிறகசைவையும்
குழந்தைக்கு
மென்சிரிப்பையும் தந்து
பூமியை அழகாக்குகிறது.

ஒற்றைரோஜா தேவையில்லை எனக்கு.
எந்நாளும் எனைப் பார்த்து சிரிக்கும்
உன விழிகளின் புன்னகையில் ரோஜாவாசம்.

நீ என்னைவிட்டு விலகுவதுமில்லை
என்னைக் கைவிடுவதுமில்லை
என்பதறிவேன்.

விழிகளும் விரல்களும் கலந்துபேச
இதயங்களிரண்டு
கூடுவிட்டுக் கூடுபாய்ந்தன.

கரம் நீட்டினான்
விரல் பற்றினேன்
கைப்பற்றிக் கொண்டான் எனை.

உன் "ம்" என்ற ஒற்றைச்சொல்லில்
ஒலிக்கும் ஸ்வரத்தை
உள்வாங்கும் என் காதல்.

Sunday 7 May 2017

நீ இல்லாத கணங்களில்வெட்கங்களற்று
சுழன்றடித்துப் பிரவாகமாய் பொங்கிவரும் வெள்ளமெனத் துள்ளும் காதல்,
ஆடுதாண்டும் காவிரியாய்
உன்னருகில் இருக்கும்போது.


முன்பின்நவீனத்துவம்
எதுவாயிருந்தாலென்ன.
சில பல வளைவுகளும்
மூன்றே புள்ளிகளும் போதுமென நினைக்கிறான்
பெண்ணை வரையும் ஓவியன்.
ன் விகுதியால்
ஆணெனக் கருதிக்கொள்ளலாம்
அவ்வோவியனை.
நவீன பெண் ஓவியர்களும்
வெற்று நேர்க்கோடுகளில்
ஆண் உருவம் வரையலாம்தான்.
பெண்ணால் இயலுவதில்லை அது.
ஏனெனில்
பெண்ணின் பார்வையில்
ஆண் ஒரு உயிர்.
பொருளல்ல போகிக்க.

Saturday 6 May 2017

பால் குவளையை வாங்கும்போது குழந்தையாய் இருப்பவன்
அருந்தி முடித்தபின்
நரைமீசைக்  கிழவனாகிறான்.
2/5/17

மழை நனைத்த இரவொன்றின் விளிம்பில் நிற்கிறேன்.
ஒளிக்கீற்றை அனுப்பி
இருள் திறக்கப்பார்க்கிறான் கதிரவன்.
இலைதோறும் சொட்டும் நீர்த்திவலை பறித்துச்
சரமொன்று கோர்க்கலாம் விரைந்துவா.

26/4/17

சொல்லிவிட்டுப்போ
உயிர் நனைக்கும் சொல்லொன்றை.

25/4/17

நிலத்தின் வெம்மை தணித்து
உட்செல்லும் மழைநீரென
உள்ளுறையும் உன் நினைவுகள்.

23/4/17

வாதையின் பெருஞ்சுமை
அழுத்தும்வேளை
தலைகோதும் சிறுவிரலின் பிரியங்கள்
வலி தீர்க்கும்.

22/4/!7

வெற்றுப்பொழுதெனக் கடக்கவில்லை.
வீணில் ஒரு கணம் இழக்கவில்லை.
நேற்றைப்பொழுது போதாமல்
இன்றில் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்
நேற்றைய நாளையிலிருந்து.
இன்று போதுமா தெரியவில்லை.
நாளை கிடைக்குமா
நம்பிக்கையோடு எட்டிப்பார்க்கிறேன்.
அருகேயிருந்தது அண்மைவிட்டுக்
கொஞ்சம் தூரம் தள்ளி...
அடடா!
நாளை என்பது என்றுமில்லையாம்.

17/4/!7

வெய்யில் என்னைச் சுட்டெரிக்கவில்லை
தலைக்குமேலே வானம் ஏந்தி நடக்கிறேன்.
மேகங்களால் மூச்சுத்திணறலில்லை
கைகள் வீசி முன்னேறுகிறேன்.
காற்று என்னைக் கட்டுப்படுத்தவில்லை.
இடியிடித்து மழைபொழிவதற்கான
அறிகுறிகள் ஏதுமில்லை.
வெள்ளை வானம்
கந்தக பூமி
கனல்காற்று
எதுவும் இடையூறில்லை.
கதிரவன் கக்கும் ஒளியினின்றும்
ஒருபிடியளவு சேகரிக்கிறேன்.
செல்லும் பாதையில் இருள்வரலாம்
என் சந்ததிக்கு பாதையில் ஒளியேற்றும் பொருட்டும்.
வழித்தடத்தில் பிள்ளைகட்கு
உணவு சமைக்கவும்.
எதன்பொருட்டும் என் பயணம்
தடைபடாத முன்னேற்பாட்டில்
முன்வைத்த அடியை
முன்வைத்தே செல்கின்றேன்.
பின்தொடரும் என் பிள்ளைகட்கு
ஒளியாய், உணவாய்,
வழித்தடமாய் நானே.
என் பயணம் முடிவுறும் பாதையில்
என் மக்கள்  ஏந்துவர்
ஒளியையும் நெருப்பையும்.
பயணங்கள் முடிவுறத் தேவையில்லை
புவியுள்ள மட்டிலும்.

7/4/17

புலியொன்றைப் புறந்தள்ளி
சிறுத்தையின் வால்பிடித்து வீசியெறிந்து
குரங்கின் கழுத்தை நெரித்து
கரடியின் காதினைக் கிள்ளியவாறே
உறங்கிக்கொண்டிருக்கிறான்
வீரமகன் வெற்றிமாறன்.
விலங்குகளனைத்தும்
சுற்றிக் காவல் நிற்க
ஐவருக்குமாய் பால் குவளையை
நிரப்புகிறேன் நான்.

3/4/17

என்னிடம் கொட்டிக்கின்றன மௌனங்கள்.
கேட்கும் செவியுளதா உன்னிடம்?

03/04/2017