மெல்லப் பொழுதுகள் சுமையாகும்
மூக்கின் நுனியில் செம்பொறியொன்று வலிதந்து சுடர்விடும்
அங்கங்களெங்கும் நோக
அடிவயிற்றில் தசையொன்று இழுத்துச் சுருட்டும்
தொடையிரண்டும் துவண்டு விழ
பாதங்கள் அடிவைக்க மறுக்கும்
உடுத்திய ஆடை மார்புக்காம்பின் நுனி தொட
நோகுதென்றே துடித்துப்போகும்
அன்பின் தீண்டலைக்கூட ஏற்காது அரற்றும்
முன்னேழு நாட்களில்
இப்போதா
இனிதானா
சதா
எச்சரிக்கையில் எப்போதும் உழலும் மனம்
முதல்சொட்டு மாதவிடாயின்போது
மரித்துப் போகும் பெண்ணுடல்
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம் நாளில் உயிர்த்தெழுகிறது
அகவை நாற்பது கடந்த பின்னாலே.
வலி : பெண்ணிடத்தில்