Sunday 15 September 2024

ஒரு மென்னிறகு இத்தனை கனம் கொண்டதா?
மயிற்தோகையின் சிறுமயிர் கீறி
குருதி வழிந்ததுண்டா?
மொழியற்ற பொதுப்பார்வையின் வீரியம் நெஞ்சு துளைத்ததுண்டா
பொருள் பொதிந்த சிறப்பு நோக்கில்
இதயம் சுக்கு நூறாய்ச் சிதையுமா?
பார்வை வீசிய வார்த்தைகள் உயிர் பிளக்குமா?
போய் வா எனக் கையசைத்து விடைதருதலினால்
காலடியில் நிலம் நழுவுமா?
எல்லாம் நேர்ந்த பின்
உலவும் ஒரு உருவு தன்னைப்
பிண்டமென்று கொளல் மட்டும் தானே தீர்வு

Saturday 14 September 2024

ஒவ்வொரு முறையும் 
உன் கையளிக்காமலே
அந்தச் சொற்களை
திரும்பக் 
கொண்டு வந்துவிடுகிறேன்

Tuesday 23 July 2024

நனைந்து தீர்க்காத மிச்ச மழையின் வாசமோ

பேசித் தீர்க்காத நட்பின் சாரலோ

நிறைவேறாத காதல் நினைவுகளோ

வயோதிகத் தாய்க்கு
நிறைவேற்றவேண்டிய பொறுப்புகளோ

இன்று வரை தீர்க்கப்படாத கடனோ

வளர்ந்து நிற்கும் பிள்ளைக்கு
செய்து முடிக்காத கடமையோ

ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு
எழுந்து விட்டது
நோக்காட்டில் விழுந்து தவித்த உயிர்

வாழ்ந்தே ஆகத்தான் வேண்டும் போல

23.07.2023
கடுங்காபியில்
மிகச் சரியான அளவில் பால் சேர்த்து சுவை கூட்டுது
உன்னுடனான உரையாடல்

Sunday 23 June 2024

பிடிமண் எடுத்துச் செல்லக் கூட 
வக்கில்லாத இறுதி யாத்திரைதான்
ஒவ்வொருவர்க்கும்.
.
உணவுச் சங்கிலியில் கோர்த்தது தானே
உயிர்கள் எல்லாமே.
பிணந்தின்னும் அகோரிகளைப் போற்றிவாழும் மதந்தானே உமது.
.
உணவுக்கும் உயிருக்கும் 
விலங்கிற்கும் மனிதர்க்கும்
வாழ்வுக்கும் வீம்புக்கும்
வேறுபாடறியா உங்களின் 
மதங்கொண்ட மதவெறி மாயாதோ?
.
மதநீர் ஒழுகும் யானைகூட
மனதடங்கும் சில மணித்துளியில்.
.
மதவெறி கொண்ட உங்களின்
கோரப்பசி தீர இன்னும்
எத்தனை உயிர்கள் வேண்டும்?
.
அவன் போலொரு பிள்ளை 
உங்கள் வீட்டிலும் இருக்கலாம்.
அவன் உங்கள் பிள்ளையின் 
பள்ளித் தோழனாகவும் இருக்கலாம்.
.
அடித்துக் கொன்ற 
இரத்தக்கறை படிந்த
அந்தக் கரங்களோடு உம்மகனை அணைப்பீரோ?
.
அடித்த வெறி தீர
ஆசுவாசம் கொள்ள
அப்பிஞ்சின் குருதி குடித்து
உம் மதத்தாகம் தணிப்பீரோ?

Tuesday 18 June 2024

பெண்...
குறில் தான்.
நெடில்களின் 
நீண்ட நெடிய கனவுகளுக்கும்
ஆசைகளுக்கும்
அற்ப கவுரவத்திற்கும்
குனிந்து நிமிர்ந்து
'ங' போல் வளைந்து.