வக்கில்லாத இறுதி யாத்திரைதான்
ஒவ்வொருவர்க்கும்.
.
உணவுச் சங்கிலியில் கோர்த்தது தானே
உயிர்கள் எல்லாமே.
பிணந்தின்னும் அகோரிகளைப் போற்றிவாழும் மதந்தானே உமது.
.
உணவுக்கும் உயிருக்கும்
விலங்கிற்கும் மனிதர்க்கும்
வாழ்வுக்கும் வீம்புக்கும்
வேறுபாடறியா உங்களின்
மதங்கொண்ட மதவெறி மாயாதோ?
.
மதநீர் ஒழுகும் யானைகூட
மனதடங்கும் சில மணித்துளியில்.
.
மதவெறி கொண்ட உங்களின்
கோரப்பசி தீர இன்னும்
எத்தனை உயிர்கள் வேண்டும்?
.
அவன் போலொரு பிள்ளை
உங்கள் வீட்டிலும் இருக்கலாம்.
அவன் உங்கள் பிள்ளையின்
பள்ளித் தோழனாகவும் இருக்கலாம்.
.
அடித்துக் கொன்ற
இரத்தக்கறை படிந்த
அந்தக் கரங்களோடு உம்மகனை அணைப்பீரோ?
.
அடித்த வெறி தீர
ஆசுவாசம் கொள்ள
அப்பிஞ்சின் குருதி குடித்து
உம் மதத்தாகம் தணிப்பீரோ?