Monday 21 March 2016

சிந்தை குடைந்த சொற்களைக் குவித்து
கருப்பொருள் கொஞ்சம் அளவாய்ச் சேர்த்துக்
கனிந்த வரிகளைக் கவிதையெனவே
கைவிரல் மாற்றும் நேரந்தனில்
கொதிக்கும் ரசத்தின் மணம் வந்து
தாளிக்க அழைத்தது.

நட்பின் பெருவலி

தனித்துச் சென்றுகொண்டிருந்த
நட்பின் இழைகள்
மெல்ல மெல்ல பின்னத் துவங்கிய
துவக்கத்தின் மென்வலியது.

வெளிச்சக்கீற்று

இருள்கீறி உள்நுழையும் வெளிச்சமென
மெல்ல மெல்ல ஊடுருவிப்
பரவும் விடியலாய்
உன் நட்பு.

Wednesday 16 March 2016

புத்தன் கணக்கு

சாவறியா வீட்டில்
கடுகு வாங்கி வரச்சொன்ன
புத்தனின் கணக்கில்
என் வீடும் இருந்தது.
இதையறியாதவளாய்
இருந்திருந்தபோதுதான்
அழைப்புமணியொலிக்க
ஆங்கே ஓர் யுவதி நின்றிருந்தாள்.
மடியேந்திப் பிச்சைகேட்டாள்.
என்ன உன் தேவையென்றேன்
புத்தன் கேட்ட கடுகென்றாள்.
வீடெங்கும் தேடித்தேடிப் பின்
வாசல் விரைந்தேன்.
வந்திருந்த தோழியோடு
மடியேந்தி நின்றேன்  
மற்றோர் வாசலில்.

                                 17/3/16

ஏனம்மா? ஏன்?

விரைந்தே முடிக்கின்றேன் வேலைகளை.
நடையைக் கொஞ்சம் எட்டிப்போட்டு
வீடுபோய்ச் சேர நினைக்கிறேன் விரைவாய்.
நேற்று அவள் வரவில்லை.
நான் போவதற்குள் சென்றுவிட்டாளோ?
இன்றேனும் பார்த்துவிடவேண்டும்.
கடைசியாய்ப் பார்த்ததெப்போது?
கடைசி நாளன்று தானே.
நினைவோட்டம் சுழன்றாலும்
நடைவேகம் குறையவில்லை.
வீட்டின் கதவைத் திறக்கின்றேன்.
யாருமற்ற வீடு.
எங்கேனும் எங்கேனும் அவள் வந்த சுவடு இருக்கிறதா?
வேறு எவர் வருகைக்கும் முன்பாக
வந்துவிடமாட்டாளா அவள்?
எனக்கும் அவளுக்குமான பேச்சுகள் எத்தனை
இன்னும் பேசப்படாமலே.
வீடெங்கும் தேடிச் சோர்ந்தபின்னரே உறைக்கிறது புத்தியில்
வீடே அவள்தானே.
தாயாய்  மடியில் அவளை ஏந்தாமல்
அவள் மடியில் தவழ்கிறேனே நான்?
விசித்திரமான வேதனை இது.
வேறொன்றும் கேட்பதற்கில்லயம்மா.
அடி யாழினி!
நீ வந்ததும் சென்றதும் ஏன்?

Thursday 10 March 2016

உயிர்ப்பேன்

விரல்களில் வழிந்துவிழும் வார்த்தைகள் கவிதைகளாய்
உனக்கு மட்டும் எப்போதும்.
அடுத்து வரிசையில் நான்
உன் விரல்வழிப் பாதை மீண்டு
கவிதையாய் உருப்பெற.

Tuesday 1 March 2016

பயணம்

வழிநெடுகிலும்
பூத்தூவிய பாதை
கண்ணெதிரே தெரிந்தாலும்
குறுக்கு வழியில்
இலக்கு நோக்கி
அழைத்துச்செல்வதாய்
சேற்றிலும் சகதியிலுமே
நம் பயணம்.
இலக்கு என்பது உன் தாய்வீடுதான்
உன்னைப் பொறுத்தவரை.
தனிக்குடித்தனமிருக்கும்
உன் சகோதரிகளின் நியாயத்தில்
உருகிப்போகும் உன் மனது
அதே நிலையிலிருக்கும்
என் அராஜகத்தை கண்டிக்கும்
நீதிபதி ஆகிறது.
உன் வீட்டுப் பெண்களின்
சோகங்களனைத்தும்
எனது கண்ணீருக்கு  காரணமாகின்றன.
காலையிலிருந்து இரவுவரை
ஓய்வின்றி உழைத்தாலும்
உடல் நலுங்கிக் களைத்தாலும்
உதவிக்கு வராத உன் விரல்கள்
ஊர் உறங்கும்வேளை
என் உதவிதேடிச் சுரண்டுவதும்
ஓய்வதில்லை.
அனைத்தையும் பொறுத்தாலும்
நம்மிடையே வாக்குவாதங்கள்
முற்றும் வேளை
உன் குழந்தைகளை விட்டுவிட்டு
வெளியேறச் சொல்லும்
உன் கயமையை மட்டும்
பொறுப்பதற்கில்லை கணவனே.
ஒருமுழம் கயிற்றுக்கு அஞ்சிய
பெண்மகள் நேற்றோடு
தொலைந்தொழிந்தாள் என்பதறியாத
உன் அறியாமையின்மீது
கொஞ்சம் இரக்கத்துடனே
ஒன்றை நினைவூட்டுகிறேன்.
உன் வீட்டுப் பெண்களைப்போல்
நானும் உதிரம் கொட்டித்தான்
நீ பெருமிதம் கொண்டு போற்றும்
உன் வாரிசைப் பெற்றேன்.