Sunday 15 September 2024

ஒரு மென்னிறகு இத்தனை கனம் கொண்டதா?
மயிற்தோகையின் சிறுமயிர் கீறி
குருதி வழிந்ததுண்டா?
மொழியற்ற பொதுப்பார்வையின் வீரியம் நெஞ்சு துளைத்ததுண்டா
பொருள் பொதிந்த சிறப்பு நோக்கில்
இதயம் சுக்கு நூறாய்ச் சிதையுமா?
பார்வை வீசிய வார்த்தைகள் உயிர் பிளக்குமா?
போய் வா எனக் கையசைத்து விடைதருதலினால்
காலடியில் நிலம் நழுவுமா?
எல்லாம் நேர்ந்த பின்
உலவும் ஒரு உருவு தன்னைப்
பிண்டமென்று கொளல் மட்டும் தானே தீர்வு

Saturday 14 September 2024

ஒவ்வொரு முறையும் 
உன் கையளிக்காமலே
அந்தச் சொற்களை
திரும்பக் 
கொண்டு வந்துவிடுகிறேன்

Tuesday 23 July 2024

நனைந்து தீர்க்காத மிச்ச மழையின் வாசமோ

பேசித் தீர்க்காத நட்பின் சாரலோ

நிறைவேறாத காதல் நினைவுகளோ

வயோதிகத் தாய்க்கு
நிறைவேற்றவேண்டிய பொறுப்புகளோ

இன்று வரை தீர்க்கப்படாத கடனோ

வளர்ந்து நிற்கும் பிள்ளைக்கு
செய்து முடிக்காத கடமையோ

ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு
எழுந்து விட்டது
நோக்காட்டில் விழுந்து தவித்த உயிர்

வாழ்ந்தே ஆகத்தான் வேண்டும் போல

23.07.2023
கடுங்காபியில்
மிகச் சரியான அளவில் பால் சேர்த்து சுவை கூட்டுது
உன்னுடனான உரையாடல்

Sunday 23 June 2024

பிடிமண் எடுத்துச் செல்லக் கூட 
வக்கில்லாத இறுதி யாத்திரைதான்
ஒவ்வொருவர்க்கும்.
.
உணவுச் சங்கிலியில் கோர்த்தது தானே
உயிர்கள் எல்லாமே.
பிணந்தின்னும் அகோரிகளைப் போற்றிவாழும் மதந்தானே உமது.
.
உணவுக்கும் உயிருக்கும் 
விலங்கிற்கும் மனிதர்க்கும்
வாழ்வுக்கும் வீம்புக்கும்
வேறுபாடறியா உங்களின் 
மதங்கொண்ட மதவெறி மாயாதோ?
.
மதநீர் ஒழுகும் யானைகூட
மனதடங்கும் சில மணித்துளியில்.
.
மதவெறி கொண்ட உங்களின்
கோரப்பசி தீர இன்னும்
எத்தனை உயிர்கள் வேண்டும்?
.
அவன் போலொரு பிள்ளை 
உங்கள் வீட்டிலும் இருக்கலாம்.
அவன் உங்கள் பிள்ளையின் 
பள்ளித் தோழனாகவும் இருக்கலாம்.
.
அடித்துக் கொன்ற 
இரத்தக்கறை படிந்த
அந்தக் கரங்களோடு உம்மகனை அணைப்பீரோ?
.
அடித்த வெறி தீர
ஆசுவாசம் கொள்ள
அப்பிஞ்சின் குருதி குடித்து
உம் மதத்தாகம் தணிப்பீரோ?

Tuesday 18 June 2024

பெண்...
குறில் தான்.
நெடில்களின் 
நீண்ட நெடிய கனவுகளுக்கும்
ஆசைகளுக்கும்
அற்ப கவுரவத்திற்கும்
குனிந்து நிமிர்ந்து
'ங' போல் வளைந்து.

Tuesday 11 June 2024

மரணித்தவனின் தொடர்பு எண்ணை நீக்குகிறேன்
என் வாழ்நாளில்  
சில நொடிகள் குறைகிறது 😔

படம்: இணையத்தில் எடுத்தது

Sunday 9 June 2024

சாத்தானுக்கானதை
அவனிடமே சேர்ப்பித்ததில்
கடவுளுக்கென்ன ஆற்றாமை?
நிறைந்து வழியும் எனதன்பில்
சிறிதே அள்ளிக்கொடுப்பதி்ல்
தடையேதுமில்லை
முகம் திருப்பிப்போகும் 
உன் கோபத்தைத் தவிர 🖤

Tuesday 30 April 2024

கேளாச் செவிகளோடு 
போராடித் தோற்ற வேளை
மௌனத்தின் தேவை புரிந்தது

Sunday 28 April 2024

மெல்லப் பொழுதுகள் சுமையாகும்
மூக்கின் நுனியில் செம்பொறியொன்று வலிதந்து சுடர்விடும்
அங்கங்களெங்கும் நோக
அடிவயிற்றில் தசையொன்று இழுத்துச் சுருட்டும்
தொடையிரண்டும் துவண்டு விழ
பாதங்கள் அடிவைக்க மறுக்கும்
உடுத்திய ஆடை மார்புக்காம்பின் நுனி தொட
நோகுதென்றே துடித்துப்போகும்
அன்பின் தீண்டலைக்கூட ஏற்காது அரற்றும்
முன்னேழு நாட்களில்
இப்போதா
இனிதானா
சதா
எச்சரிக்கையில் எப்போதும் உழலும் மனம்
முதல்சொட்டு மாதவிடாயின்போது
மரித்துப் போகும் பெண்ணுடல்
மூன்றாம் 
நான்காம்
ஐந்தாம் நாளில் உயிர்த்தெழுகிறது
அகவை நாற்பது கடந்த பின்னாலே.

படம்: இணையத்தில்
வலி : பெண்ணிடத்தில்

Monday 11 March 2024

இன்னமும் முடிவுறாத
இந்த நாளின் இறுதிக்குள்
சந்தித்து விடவேண்டும் உன்னை


Sunday 25 February 2024

முடிவுறாதென
நான் மட்டும் பயணித்துக் கொண்டிருந்த அந்தச் சாலை முடிந்து விட்டது 

Saturday 24 February 2024

உனக்கான கண்ணீரும்
உன்னைப் பற்றிய கவலையும்
கொஞ்சம் மிச்சமிருந்தது

Friday 23 February 2024

எதிர்பாராமல் வீசிச் சுழன்றடித்த காற்று
ஒரு தலைமுறை காலத்தைப் பின்கடந்து
எனை வீசிச் சென்று விட்டது. புதைந்து போன நினைவுகளுக்குள் இருந்து மீள்வழி ஏதுமில்லை. காற்றின் போக்கில் காலத்தின் செய்தியை கேட்டுக்கொண்டிருக்கிறேன்

ஒரு செய்தி

ஏதோ ஒன்றைக் குறைத்து விட்டிருக்கிறது எந்தன் உயிருக்குள்

ஏதோ ஒன்றைத் திணித்து விட்டிருக்கிறது இந்த இதயத்தில்

ஏதுமற்றதாய் விலகியிருந்த உணர்வொன்று
எல்லாமுமாய் ஆக்கிரமிக்கிறதென்னை



கண்ணீர் மொத்தமும் வறண்டு போன பிறகு வந்து சேர்ந்த துக்க செய்திக்கு 
எப்படி அழ?

Wednesday 21 February 2024

நீ இல்லை
இனி எப்போதும் இல்லை
உன்னிடம் சொல்லாத
உனக்கான இந்த வார்த்தைகளை வைத்துக்கொண்டு 
என்ன செய்ய?
ஒரு காதல் செத்துப் போவது எப்போது?

பலமுறை வாய்ப்பிருந்தும் சொல்லிவிடாத காதலைச் 
சுமந்து பயணித்து வரும் உயிரின் வலி
எத்தனை காலம் தொடரும்?

கால இடைவெளிகளில் சந்தித்துக் கொண்ட போது
கனக்கும் நெஞ்சோடு புன்னகை பரிமாறி
கடந்து விட்ட சோகம் எப்போது தீரும்?

இணையவே முடியாது என்றாகிப்போனபின்னும்
எந்த நம்பிக்கையில் நெஞ்சில் உறைந்துகிடக்கிறது இன்னும்?

காதலாகிப் போனவன் காலத்தில் கரைந்த பின்னும்
ஏன் இன்னும் உயிர்த்துக்கிடக்கிறது
முளைவிட்டபோதே மரித்துப்போன இந்தக்காதல்?

Thursday 15 February 2024

இறந்த பின்பு
அலைக்கழிப்பு ஏதுமின்றி துயிலிடம் பெறுகிறார்
இடுகாட்டுக்கு அருகில் குடியிருப்பு வாய்த்தவர்

Friday 9 February 2024

இந்த அறை நிரம்பியிருக்கிறது
நம் மூச்சுக்காற்றும்
முத்தச் சத்தமுமாய்🖤

பிப் 10,2019

Monday 22 January 2024

எடையற்றுப் போகிறேன்
இறகெனவே 🖤

Wednesday 17 January 2024

விடைபெறும் வேளை
ஒரு மலரென கையளித்துச் செல்கிறாய் உன் புன்சிரிப்பை ☺️

Saturday 13 January 2024

மழைத்துளி விழுந்தாலே
சட்டென்று வரும் தும்மலைப் போல 
உன் நினைவும் வந்துவிடுகிறது

ஆனால்

மழையோ
சளியோ
தும்மலோ 
ஒரு கட்டத்தில் நின்றுவிடுவதைப்போலல்ல
உன் நினைவு ❤️