இன்று அதிகாலை சந்திக்க நேர்ந்த அந்தப் பறவை
யாதென அறியவில்லை.
வலசைநிமித்தம் வந்து சேர்ந்த விடத்து
ஓய்வாய் அமர்ந்த அழகில்
ஓர் திமிர் தென்பட்டது.
பல ஊர்கள் பார்த்த பறவைக்குச்
சொந்தமென பிடிமண் இல்லையென்பது
மனித மனதிற்கு விநோதம் தான்.
வானமே தனதென்ற அதன்
மனப்பாங்கு சற்றே எரிச்சல் தந்தது.
எதைத் தேடி என் சன்னல் வந்ததென்ற கேள்வி பொங்க
முகம் பார்த்த எனக்கு பதிலேதும் தரவில்லை.
பிறந்த வீட்டு சீதனத்தில்
தாய்வாசம் நுகரும் பெண்பிள்ளைபோல
சாளரக் கதவில் அலகினைத் தேய்த்துக்
கண்மூடிக் கிடந்த கணத்தில்
சொல்லாமல் சொன்ன செய்தியொன்றில்
நழுவிப் போன மனதை
இருத்தி வைப்பதென்பது எளிதாயில்லை.