தேடியது கிடைத்ததா
தெரியவில்லை.
காத்திருந்து தோற்றதில்
கவலையேதுமில்லையோ?
நேற்றைய பொழுதுன்
சிறுவயிறு நிறைந்ததா?
நாளைய பொழுதிற்கு நம்பிக்கை மிச்சமா?
இன்றைப்பாடு
இக்கதியானாலும்
என்றைக்கும் விரிப்பாய் சிறகை.
27/6/2016
விசும்பின் பெருவெளியில்
இலக்கற்று உலவும் சிறுதூசினைப் போல்
பிரபஞ்சமெங்கும் பயணிக்கும் பொருளற்ற மன எண்ணங்கள்.
சிறுபுள்ளின் நினைவொன்றில்
வானளக்கும் கனவுகள் சிதைக்கப்பெற்றுக்
கூடடையும் பொழுதொன்றிலாசை துளிர்க்கும்
நாளையேனும் வானளக்க.
இரைதேடும் நீண்ட பயணத்தில் நினைவில் வந்துபோகும்
நேற்றுத் தவறவிட்ட
தாமரைக்குளத்து மீன்.
இறக்கை விரிக்கும் ஆசை குறுக்கி
சிறகு மடக்கி
சேற்றுக் குளத்தில் இறங்கித் தேடும்
சிறு புள் நானே.
06.06.2016
மழையடித்து ஓய்ந்த பொழுதொன்றில்
ஆசுவாசமாய் அமர்ந்து
வேடிக்கை பார்த்த கருங்கல் திண்ணை.
நீண்ட திண்ணையின்
ஒருமுனையில் நீயும்
மறுமுனையில் நானுமாய்.
நம் மவுனமொழி உரையாடலின்
தூதாய்
வரிசைகட்டிய எறும்புகளின் ஊர்வலம் நமக்கிடையே.
எறும்பு சுமந்த ஒற்றைக்கடலையை
பிடுங்கி எறிந்த அம்மாவின் பார்வை
பறித்து எறிந்தது நமக்கான மொழிகளையும்.