Tuesday 31 July 2018

ஆடையில் மறையாத நிர்வாணம்

நேற்றோ?
இன்றோ?
நிர்வாணம் ஒரு பிரச்சினையில்லை
எப்போதுமே.
உடையின்றித் தானே பிறந்தோம்?
உடல் முழுக்கப் புழுத்துக்கிடக்கும் நாட்டில்
சீழ்பிடித்த ஆட்சியாளர்களின் மனசாட்சியாய்
தேசமே நிர்வாணமாய் நிற்கிறது.
பத்துலட்ச ரூபாய் உடை
அதை மறைக்கவில்லை.

1/8/2017

Sunday 22 July 2018

ஆதி ஆப்பிள் புளிப்பென்று
அகலுகிறாள் கரம் உதறி
உவர்ப்பும் இனிப்பும் கொண்ட
தேனைத் தரும்
பூவொன்றைத் தேடி
செடிகள் தோறும் துழாவி
வெண்ணிறத்தொரு தும்பைப்பூவின்
நுண்துளை தள்ளிய கள்ளுண்ண
பட்டாம்பூச்சியாகும் உபாயமறியாது
முகம் சுணங்கிப் போகிறாள்
வாடிய வதனத்தின்மீது
வானுலவும் மஞ்சுதிர்த்த
ஒருதுளி நீர் பட்டு
உயிர் மலர்ந்த கணமொன்றின்பின்
வான்மழையின் காதலியாய்
முகடுகளில் சுற்றித் திரிபவளைக்
கண்டால் உரைத்திடுங்கள்
புளிப்பும் சிவப்புமற்ற
பச்சைநிற ஆப்பிளொன்று
நலம் உசாவிச் சென்றதென.

சென்ற முறை பார்த்த
கடலொன்றைப் பார்த்தேன்
கால் நனைத்த அலையினில்
பழகிய சாயல்
ஈரம் கூட அவ்வாறே
இதயம் வரை வருடிற்று
அலை காலடி மணல் பறித்தபின்
சென்ற முறை போலவே
சறுக்கி விழுந்தேன்
இம்முறை
சிரித்தபடி எழுந்தேன்

ஒவ்வொரு நாளும் உள்நுழையும் இருள்
வாழ்வின் இறுதிக்கணங்களை கண்முன்னே காட்சிக்குத் தருகிறது
இரவு கவிந்து சாமம் தொடங்கும் பொழுதில்
விழித்திருக்கும் உயிருணரும் தனிமை
மரணமன்றி வேறேது?
உடல் பிரிந்த உயிர் நினைவுகள்தோறும் தாவி
கனவொன்றின் மேல் இளைப்பாறுகையில்
மீண்டு வரும் நினைவலைகள் தருவது சிறகாயின் காலை உயிர்த்தெழுதலும்
விலங்காயின் மரணித்தலும்
புலர் காலையில் நியதியாகிறது.
மீண்டும் வாழ்வா மரணமா
என்பதை நிர்ணயிக்க இருள் கவ்வும்
மாலை வரை உயிர்த்திருக்கும் உயிர்

Sunday 8 July 2018

அன்பின்வெள்ளம்
வடிந்து ஓடிவிடாமல்
மணல்மூட்டையாய் அடுக்குகிறேன்
அன்பின் வார்த்தைகள் கொண்டு.

Saturday 7 July 2018

புத்தன் மறுத்த ஆசையையும்
சாத்தான் றந்துவிட்ட அன்பையும்
யார்தலையில் விதிப்பது?
குழப்பத்தில் கடவுள்.

Tuesday 3 July 2018

அந்த மரத்தினடியில் அமர்ந்திருந்தேன்
பறவையொன்று இறங்கிவந்து
சிறகுகளைத் தந்தது
உறங்கிவரும்வரை வைத்துக்கொள் என்றது
உறங்கிவிழித்து வந்த பறவை
எங்கே சென்றாய் என் சிறகு விரித்து என்று வினவியபோது
எங்குமில்லையென்றே
மடியிலிருந்த சிறகை நீட்டினேன்
சிறகிருந்தென்ன
பறக்கத்தெரியாதவளுக்கு
காற்றில் கரைந்தது பறவையின் குரல்.

Monday 2 July 2018

வனம் தொலைத்த பறவையொன்று
கோடைமழையில் நனைந்து சற்றே ஆசுவாசிக்கிறது

குளிர்ச்சாரலோடு மழை வந்து விட்டது
நீயென்பதும் மழையென்பதும் ஒன்றுதானே எனக்கு?!