Tuesday, 29 August 2017

மாதவிடாய்...

ஆசிரியரின் தவறான அணுகுமுறை என்பதுதான் காரணமா?

எத்தனை பெண்களுக்கு இதுபற்றிய தெளிவான பார்வை, அணுகுமுறை இருக்கிறது? குடும்பத்தில் உயர்கல்வி படித்த பெண்கள், அதிகாரியாக பணியாற்றுபவர்கள், பணிநிமித்தம் பல இடங்களுக்கும் செல்ல வேண்டிய பெண்கள், மருத்துவப்பணியில் இருக்கும் பெண்கள் எனப் பலதரப்பட்ட  பெண்களுக்கும் மாதவிடாய் என்பது உடற்கழிவுதான் என்பதும் அதைத்தாண்டி அதில் மூடிமறைக்கவோ, வெளியில் கறை தெரிந்துவிட்டால் அவமானப்படவோ ஏதுமில்லை என்ற புரிதலும் இல்லை என்பதுதான் இங்கு சொல்லவந்தது.

இன்றும்கூட, மாதத்தில் மூன்று நாட்கள் ஓய்வு  என்பதைத்தாண்டி வேறெதையும் தொடக்கூடாது, குடும்ப ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்குபெறக்கூடாது, இறந்துவிட்டவர்களின் சடலத்தைத் தொடுவதோ, நீரூற்றுவது போன்ற சடங்குகள் செய்வதோ கூடாது போன்ற கட்டுப்பாடுகள் 90% குடும்பங்களில் நிலவுகிறது.

குடும்பப் பாரம்பர்யத்தையும், உயர்வையும் புனிதத்தன்மையையும் கட்டிக்காப்பதற்காக படித்த விவரமறிந்த பெண்களும் இதைக் கடைப்பிடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். சிலர் அத்தகைய கட்டுப்பாட்டை குலப்பெருமை, புனிதம் என விரும்பியே ஏற்கிறார்கள்.

ஒரு பள்ளிமாணவியின் மரணமும், ஆசிரியரின் நடவடிக்கையும் தாண்டி உளவியல் பூர்வமாக அணுகவேண்டிய விஷயமிது. அந்த ஆசிரியருக்கும் இதுபற்றிய புரிதல் இல்லாமலிருந்திருக்கலாம்.

அணுகுமுறையில் கனிவாக இருந்திருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு பெண்ணாக அந்த ஆசிரியரையும் உளவியல் ரீதியாக பயிற்றுவிக்கவேண்டும். இச்சமூகத்தில் அவரும் ஒரு குடும்பப்பெண்ணாக இருக்கிறார் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

இதற்கான தீர்வு என்ன என்று சிந்திக்கும்போது, பெண் குழந்தைகளுக்கு பத்து, பதினோரு வயதிலிருந்தே உடற்கூறு, வளரும்போது உடலமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பருவமடைவது, மாதவிடாய், அது நிகழுவதற்கான காரணம். நிகழவேண்டிய அவசியம் ஆகியவற்றைப் பள்ளியில் பயிற்றுவித்தலும்,
ஆசிரியர்களுக்கும் அதுபற்றிய முழுமையான புரிதலும், தாயன்போடும், உளவியல் மற்றும் மருத்துவரீதியாக அந்நாட்களில் பெண்குழந்தைகளை அணுகவும் பயிற்றுவிக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். இது வெளியில் தெரிவது அவமானகரமான விஷயமல்ல என்ற ஏற்புத்தன்மையும் கொள்ள பெண்குழந்தைகளைத் தயார்செய்தல் இன்றியமையாதது.

இனியாவது இதுபோன்ற துயர நிகழ்வுகள் நிகழாமலிருக்க அரசு தரப்பும், பெண்கள் அமைப்புகளும், பள்ளி நிர்வாகங்களும் விழித்துக்கொள்ளவேண்டும்.
விரைந்து செயல்படவேண்டும்.

Thursday, 17 August 2017

ஒரு பெண்ணின் கருமுட்டையும் ஆணின் வீரியமான விந்தணுவும் இணைந்த - அது இயல்பாய் நிகழ்ந்ததோ, ஒருவரின் விருப்பத்தினால் மட்டுமோ, பாலியல் வல்லுறவினாலோ, இருமனமும் மூழ்கி முக்குளித்த காதலினாலோ -  ஒரு தருணத்தில் உருவான கருவினை பெண் சுமக்கும் காலம் கிட்டத்தட்ட 280 நாட்கள். 280 நாட்களுமே தவக்காலம்தான் பெண்ணுக்கு.

உணவுண்ணும்போதும், நடக்கும்போதும், உட்காரும்போதும், படுத்துறங்கும்போதும் நொடிப்பொழுதுகூட அகலாத நினைவுடன், அக்கறையுடன், கவனத்துடன், பேரன்புடன் இந்தத் தவக்காலத்தைக் கடக்கிறாள் பெண்.

பெற்றெடுத்தபின்னும் முதல் மூன்று மாதங்கள் கருவில் சுமந்ததைப்போன்ற உணர்வுடனே கையிலும் மடியிலும் ஏந்திக்கிடப்பவள் தானே பெண்?

இதெல்லாம் தெரியாதா எங்களுக்கு, இப்ப எதுக்கு புதுசா என்று கேட்கிறீர்கள்.

இந்த நாட்டில் கர்ப்பவதியாகும் பெண்கள் இனி குழந்தைப்பேறு காலத்தில் தாய்ப்பாலோடு, தேவைப்படும் ஆக்சிஜனையும் சுரக்கும் மார்பகங்களைப் பெற்றவளாய் இருப்பது மட்டுமே நலம் பயக்கும்.

பெற்றவர்களுக்கு மட்டுமேதான் குழந்தைகள் மீதான பொறுப்பு. அரசுக்கு இல்லை. மூளை வீங்கி பாதிக்கப்பட்டதோ, ஆக்சிஜன் பற்றாக்குறையோ, அரசு வழக்குகள், அறிக்கைகள், விசாரணைக் கமிஷன்களோடு தன் கடமையை முடித்துக்கொள்ளலாம்.

இறந்த குழந்தைகளின் உயிர் மட்டும்தானா இழப்பு? சுமந்துநின்ற அந்தத் தவக்காலங்களை எதைக்கொண்டு நிறைப்பது?

60 குழந்தைகள், 60 தாய்மார்கள், 60 பேர் சுமந்துநின்ற 280 நாட்களின் இழப்பை, அந்நாளில் நெஞ்சில் ஏந்திய அன்பு, ஆசை, ஏக்கம், எதிர்பார்ப்பு, கனவு எல்லாவற்றையும் எதைக்கொண்டு சமன் செய்வீர்கள்? எந்த நஷ்டத்துக்கு எது ஈடாகும்?

பச்சிளங்குழந்தைகளின் தொடர் உயிரிழப்புக்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் அறவுணர்வு,  சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கும், மாநில, மைய அரசுகளுக்கும் இல்லை.

நமக்கு நாமே எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு ஜி.எஸ்.டி முதலான வரிகளை பொறுப்பாக செலுத்திக்கொண்டு, அறிவிக்கப்படாத அவசர நிலையில் வாழ்வதற்கு நம்மை தயார்படுத்திக்கொள்வோம்.

வாருங்கள்..
ஜென்மாஷ்டமியில் கோகுலகிருஷ்ணனின் பாதம் வரைந்து வரவேற்கத் திரளுவோம்.

14/08/17

ஆக்சிஜன் பற்றாக்குறையை பிறிதொரு நாளில் சாவகாசமாக  விவாதித்துக்கொள்ளலாம்.

Tuesday, 8 August 2017

அலைந்து திரிகிறது பெருங்காற்று
வனமதைக் காணாமல்.

Monday, 7 August 2017

எனது மௌனத்துக்கு மிக அருகில்
அடர்த்தியான சொல்லொன்று அமர்ந்திருக்கிறது.

பொறுப்பற்றுக் கிளம்பிவிட்ட புத்தன்
ஒரு கோப்பைத் தேநீருக்காக அலைகிறான்.
சாத்தானோ சுடச்சுடத் தயாரித்து
புத்தனோடு பகிர்ந்து மகிழ்கிறான்.
போதனைகள் பசிக்குதவா.

புள்ளியெனத் தேய்ந்து
சுவடற்றுப் போகவும்
வனாந்திரத்தில் கரைந்து போகவும்
விரிந்து பரந்த விசும்பினால் இயலுவதில்லை.

உன்..

சில்லென்ற மழையும்
தலைகோதும் தென்றலும்
சிலிர்க்கவைக்கும் சாரலும்
மட்டுமல்ல.
சுள்ளென்று சுட்டெரிக்கும் வெயிலும்..
உன் நினைவுகள்.

Sunday, 6 August 2017

அக்கினிக்குஞ்சு என்றானபின்
சிறகுகள் சிதைத்தாலும்
கனல் கனன்றுகொண்டுதானே இருக்கும்!

Wednesday, 2 August 2017

தண்மை

நீண்டு செல்லும் சாலையில்
வெயிலின் உக்கிரத்தைக்
குறைக்கின்றன
பிணைத்திருக்கும் விரல்கள்.