Sunday 18 October 2020

உணர்வுகள் அழுத்த உறைந்திருக்கிறேன்.
முன்னதாக
ஒரு சோகம் எனைக் கவ்வியது.
மெல்ல மெல்ல உள்நுழைந்து
உயிரைத் தொட்டது.
தொடுதலின் முதல் கணத்தில்
மென்வலியொன்று ஊடுருவ
தரை சிந்திய நீர் விரவுதல் போல
மனமெங்கும் வியாபித்து
அடுத்தடுத்த கணங்களில்
பெருவலியாய் உருமாறி
உயிரெங்கும் நிறைந்து வழிய..
வலியைப் பருகிச் சுவைக்கின்றேன்.
சுவைத்துப் பருகுகின்றேன்.
தீராவலியொன்றைம் தேடத் துவங்குகிறேன்.
எங்கெங்கு வலியுளதோ
அங்கங்கு உறைகிறேன்.
வலியின் சுவையுணரா மனங்களை
எண்ணி நகைத்தே
மேலும் கொஞ்சம் வலியை தேடி
உணர்வுகள் அழுத்த
உறைந்திருக்கிறேன்

Tuesday 13 October 2020

நான் வருவதற்குள்ளாக பெய்து முடித்திருந்தது.
சாலையெங்கும் மழை நீர்
என்னில் உன் நினைவுகளைப் போல
வியாபித்து நனைத்திருந்தது.
நான் வருவதற்கு முன்பான மழையின் பிரவாகம்
உன் வருகையை எதிர்பார்த்து நிற்கும்
இதயத்தின் தவிப்பை ஒத்ததாயிருந்திருக்குமோ?! 🖤

Monday 12 October 2020

கடலும் காடும் ஒன்றா எனத்தெரியவில்லை
கடலுக்குள் முங்கும்போது
காட்டின் மடியில் தவழுகிறேன்
காடொன்றை நினைக்கையில்
கடலலையினைத் தழுவுகிறேன்❤️
ஒரு கவிதை...
கேள்வி கேட்கும்
விடையிறுக்கும்
தலைகோதும்
விழிநீர் துடைக்கும்
காதலிக்கும்
நட்பைக் கொண்டாடும்
துரோகத்தை மன்னிக்கும்
வெறுப்பை வேரறுக்கும்
வேடிக்கை பார்த்துக் கொண்டே
வாளாவிருக்கவும் செய்யும்
கூடி நின்று
விளக்குகள் ஒளிர்ந்தோம்
கைதட்டி ஆரவாரித்தோம்
விளக்கின் ஒளியிலும்
கைதட்டல் ஒலியிலும்
பாதை தெளிவாய் புலப்பட
கூட்டத்தை நோக்கி
கொரோனா தடையின்றி முன்னேறிக்கொண்டிருக்கிறது
ஒரு அரிசியில் என் பெயரெழுதிக் கொடுத்தவனின் பெயர்
அன்று முழுவதும்
எந்த அரிசியிலும் எழுதப்படவேயில்லை