பெண்...
குறில் தான்.
நெடில்களின்
நீண்ட நெடிய கனவுகளுக்கும்
ஆசைகளுக்கும்
அற்ப கவுரவத்திற்கும்
குனிந்து நிமிர்ந்து
'ங' போல் வளைந்து.
#On_this_day
பெண்...
குறில் தான்.
நெடில்களின்
நீண்ட நெடிய கனவுகளுக்கும்
ஆசைகளுக்கும்
அற்ப கவுரவத்திற்கும்
குனிந்து நிமிர்ந்து
'ங' போல் வளைந்து.
#On_this_day
மௌனத்தின் பேரிரைச்சல் மனமெங்கும்.
ஏதுமற்றதன் கனம்
இயங்குதிறனைக் குறைக்கிறது.
யாருமற்ற தனிமையின் நெரிசல்
புழுக்கம் கூட்டுகிறது.
இதழுக்குள் சிறைப்பட்ட வார்த்தைகளின் உக்கிரம் எரிக்கிறது.
தேடியது எதுவென்றறியாமல்
இல்லை என்ற விடையைச்
சுமக்கவியலாமல் சுமந்து திரிகிறேன்
உண்டென்பது எதுவோ?
விழி காண்பதும்
செவி கேட்பதும்
மனம் உணர்ந்ததும் மாயையோ?
இக்கரையில் எக்குறையுமில்லையெனினும்
அக்கரையில் இருக்கும்
சிறுதுண்டுக் கருவாடுக்கென
எப்போதும் மதில்மேல் பூனையாய்
காத்திருக்கும் மனசு.
ஒரு கோப்பை பார்வை
ஒரு கோப்பை காதல்
மௌனங்களை உறிஞ்சி
சுவைக்கிறோம் மெல்ல.
மிதமான சூடு
இதமான சுகம்
பற்றிப் பரவுகிறது இதயமெங்கும்.
இதுவரை பேசாத வார்த்தைகளைக்
கொட்டி வைத்திருந்த
கிண்ணமொன்று நிறைந்திருக்கிறது
இடையிடை கொரிக்க.
விரல்களால் வார்த்தையெடுத்து மெல்கிறேன்.
ருசியுணர்ந்து புன்னகைக்கிறாய்.
உன் புன்னகையை எடுத்து
கைப்பைக்குள் பத்திரப்படுத்துகிறேன்.
பை நிறைகிறது.
எழுந்து போக யத்தனிக்கிறாய் நீ்
என் பாதம் அணிந்து.
உன் கையசைத்து விடைபெறுகிறேன்.
வானமெங்கும் வியாபித்து நிற்கும் நம் காதலை
பூமியில் பயிரிடும் வேளை இது.
கூடுகிழித்துக் கிளம்பும் ஒரு பட்டாம்பூச்சி
ஈரச் சிறகுகளைக் காற்றில் உலர்த்திப்
படபடத்துக் கிளம்பும்.
பூக்கள் அருகாமையா
வெகுதூரமா அறிவதில்லை.
தேனுறிஞ்சிச் சிறுவயிறு நிரப்பும்
பட்டாம்பூச்சியின் போராட்டம் அறியாது
வண்ணங்கள் பார்த்துச் சிலிர்த்துப் போகும் நாம்
தன் சிறகின் வனப்பறியா சிறுபூச்சியின்
பசி தீர்க்கும்
சிறுமலர்பூக்கும் செடியொன்றை
வளர்த்தல் நலம்.
செவியில் விழும் சலசலப்புகள்
ஆனந்த தாண்டவமாயிருக்கலாம்.
தூரத்தில் தெரியும் கூட்டம்
திருவிழாத் திரளாக வாய்ப்புண்டு.
கருமேகங்கள் மேலும் அடர்ந்தாலும்
வெள்ளாமைக்கான பெருமழையே.
இதயம் லேசாக்கி
மென்புன்னகை முகத்தில் தேக்கு.
எரிமலை நெருப்பில்
இரவுணவு சமைக்கலாம் வா.
வெற்றுக்கோப்பையில்
நீர் நிரப்பி அருந்தலாம்.
பசும்பால் நிரப்பிச் சுவைக்கலாம்.
ஆவி பறக்கும் தேநீரோடு
அளவளாவும் நட்பிருந்தால்
அழகான மாலைப்பொழுதை
அர்த்தமுள்ளதாக்கலாம்.
நஞ்சினை நிரப்பி
கசப்பினை அருந்தி
தேமதுரச் சுவையெனச் சிலாகித்து மகிழுவதேன் கவிஞர்களே?
இழப்பு உங்கள் உறவுகளுக்கு மட்டுமல்ல
கவியுலகுக்கும் தானே.
க.சீ.சிவகுமாரின் மறைவு தந்த வலியில்.
Crocodile க்கு முத்தம் கொடுக்கும் டைனோசார்
பாலைவனப் பாம்பின் நச்சுமுத்தம் சுவைக்கும் அலிகேட்டர்.
ஷேடோ ஃபைட் -2வின் ஆயுதம் தாங்கி
அநீதி அழிக்கக் கிளம்பும் கதாநாயகன்.
இன்னும் மான்ஸ்டர்கள் வாழுதா
என்ற கேள்விக்கான விடைகாண
ரெப்டைல்ஸ் என கூகிள்பண்ணும் சிறுவன்.
இதுதான் அவன் உலகமென நாம் நினைக்க
சிறுபிள்ளை வெற்றிமாறனோ
வாழ்க்கைனா இன்பதுன்பம் கஸ்டம் நஸ்டம்
எல்லாம் உண்டு
அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் நாமதான்
என்று அண்ணனை ஆற்றுப்படுத்தி
தலையணை அணைத்து உறங்கச்செல்கிறான் நம் விழிகளை
நிறையச்செய்து.
இன்று உலகக் கவிதைகள் தினமாமே.
நாங்களும் களத்துல இறங்குவோம்ல.
சபையோர் அவையோரெல்லாம் இந்த ஒருநாள் பொறுத்து அருளுக.
--------------------------------------------------------
சுவரேறும் பல்லியென
ஆசைகள் மனமேறும்.
இலக்கைத் தவறவிட்ட பல்லியாய்
"சொத்" என கீழேவிழும் மனது
ஆசைகளறுந்து
துடித்துக் கிடக்கும்.
வாலறுந்த பல்லிக்குப் பின்னரும்
ஓர் இரை கிடைக்கலாம்.
அறுந்துபோன ஆசையோ
தூக்குக் கயிறென
இறுக்கத்
துடித்தடங்கும் மனசு.
------------------------------------------------------
அப்பாடா!
திருப்தியாச்சு மனசு.
'ம்' என்பது ஒரு துவக்கம்
மௌனம் கனக்கும்போது
'ம்' என்பது ஒரு தொடர்ச்சி
மொழி தடைபடும்போது
'ம்' என்பது ஒர் இணைப்பு
உரையாடல் அறுபடும்போது
'ம்' என்பது ஒரு திருப்பம்
எத்திசை தொடர்வதென அறியாதபோது
'ம்' என்பது ஒரு முடிவு
ஒத்திசைந்து ஏற்கும்போது
'ம்' என்பது உயிர்ப்பு
பேச நா எழாமல் தத்தளிக்கும் போது
'ம்' என்பது பெருமூச்சு
யாருமற்ற தனிமையில்
'ம்' என்பது உயிரின் ஒலி
அன்பின் பரிமாற்றத்தை உணருகையில்.
ம்ம்ம்...
அன்று
உண்ணாவிரதப் போராட்டம் என்னும் அகிம்சையைக் கடைப்பிடித்த காந்தியை சுட்டுக்கொன்றோம்.
நேற்று
வாழ்நாளெல்லாம் நம் உயர்வுக்கெனத் தம்மை அர்ப்பணித்த பெரியாரை செருப்பால் அடிக்கும் செருக்கு கொண்டோம்.
இன்று
இரோம் ஷர்மிளாவை வாக்கு எண்ணிக்கையால் வீழ்த்தினோம்.
போராட்டங்கள் முடிவதுமில்லை.
போராளிகள் ஓய்வதுமில்லை.
வாக்காளர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருக்க
வேட்பாளர்கள் வாக்குகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
தனக்கான ஆதரவை 1,2,3 என எண்ணிக்கொண்டே வந்து 90 க்கு மேல் எண்ண ஆளில்லாமல் முடிக்கிறது சனநாயகம்.
11/03/2017