Wednesday 26 September 2018

கிளிஞ்சல்கள் பொறுக்கித் திரியும் சிறுவனின் கால்களில் அப்பிக் கிடந்தது
சிறுதுளிக் கடலும்
மலையொன்றின் மென்துகளும்.

Sunday 23 September 2018

காபியின் கசப்பில்
ஒரு கவிதை இருக்கிறது.
கசப்பை ருசிப்பதென்பது வேறு.
கசப்பின் ருசியை ரசிப்பதென்பது வேறு.
கசப்பல்லால் இனிப்பை தேடும் மனது
கசப்பின் உள்ளிருக்கும் ருசியறியாது.
ஆக மொத்தம்
காபியின் கசப்பு என்பது
கோப்பை
உனதெனில் நானும்
எனதெனில் நீயும்.

Friday 21 September 2018

தொலைத்த என்னைத்
தேடியவிடத்தில்
கிடைத்ததுன்  உயிர் 💜

Tuesday 18 September 2018

ஈர வானத்தோடு
நனைந்த பாடலொன்றையும்
கிளையில் உலர்த்தி விட்டு
கூட்டுக்குள் நுழைந்தது
தூக்கணாங்குருவி

Sunday 9 September 2018

சுர வேகத்தில்
கழுத்தோடு மாலை கோர்க்கும் குழந்தையின் அருகாமையில் அடைகாக்கப்படும் உணர்வு அம்மாவுக்கு.

எப்போதும் தனித்திருப்பதேயில்லை.
உன் சொல்லொன்று செவியோரத்தில்.
உன் பார்வையொன்று
விழியோரத்தில்.
உன் விரலொன்று பிணைத்தபடி.
உன் கோபமொன்றில் அஞ்சியபடி
உன் தொடுகையில் கரைந்தபடி
உன் அழுகையில் கலங்கியபடி.
எப்போதும் எப்போதும்.
தனித்திருப்பதேயில்லை
ஒருபோதும்.

Wednesday 5 September 2018

அன்பெனும் ஆழிப்பேரலையில் மூழ்கித் தவிக்கிறேன்
சிப்பிகள் காலில் இடற
இருகை கொண்டு சேகரம் செய்கிறேன்
முத்தினை மறந்து.
மூழ்கியபின் முத்தென்ன சிப்பியென்ன
கடலலையின் தாலாட்டில்
கண்மயங்கிக் கிடக்கிறேன்
அலை தழுவுது உடலை அரவமென
பிரபஞ்ச வெளியின் பேரழகெல்லாம்
கடல் கொண்டது போக மீதமே.

Monday 3 September 2018

செய்வாயா என்றேன்
செய்து விட்டால்...? என்றாய்.
செய்தே விட்டாய்.
இனியும்
செய்யாமல் விடமுடியுமா என்ன?

Sunday 2 September 2018

உடலெங்கும் காமத்தின் வாசனை பூசி
உயிர் மணக்க வைக்கிறாய்.
மருதாணிச் சொப்பென
வெட்கமணிந்து சிவக்கிறேன்