Monday 28 September 2020

இதழ்களினின்றும் வெளிவரத்துடிக்கும் வார்த்தைகளை
கருணைக்கொலை செய்துவிட்டு
மௌனமெனும் அங்கியை போர்த்திக்கொள்கிறேன்
இன்று அதிகாலை சந்திக்க நேர்ந்த அந்தப் பறவை
யாதென அறியவில்லை.
வலசைநிமித்தம் வந்து சேர்ந்த விடத்து
ஓய்வாய் அமர்ந்த அழகில்
ஓர் திமிர் தென்பட்டது.
பல ஊர்கள் பார்த்த பறவைக்குச்
சொந்தமென பிடிமண் இல்லையென்பது
மனித மனதிற்கு விநோதம் தான்.
வானமே தனதென்ற அதன்
மனப்பாங்கு சற்றே எரிச்சல் தந்தது.
எதைத் தேடி என் சன்னல் வந்ததென்ற கேள்வி பொங்க 
முகம் பார்த்த எனக்கு பதிலேதும் தரவில்லை.
பிறந்த வீட்டு சீதனத்தில்
தாய்வாசம் நுகரும் பெண்பிள்ளைபோல
சாளரக் கதவில் அலகினைத் தேய்த்துக்
கண்மூடிக் கிடந்த கணத்தில் 
சொல்லாமல் சொன்ன செய்தியொன்றில் 
நழுவிப் போன மனதை
இருத்தி வைப்பதென்பது எளிதாயில்லை.
ஏதுமில்லை என்றே சொல்கிறாய்.
எல்லாம் புரிந்தே புன்னகைக்கிறேன் 🖤
சின்னஞ்சிறு கீறலுமற்ற
புன்னகையொன்றை பொத்தி வைக்கிறேன்
உன் முகம் பார்க்கும் பொழுதில் கையளிக்க🖤

Sunday 27 September 2020

நிழல்தரும் வழித்தருக்கள் 
ஏதுமற்ற பயணத்தில்
உன் வார்த்தைகளில் கொஞ்சம்
இளைப்பாறினேன்🖤

Saturday 26 September 2020

நிழல்தரும் வழித்தருக்கள் 
ஏதுமற்ற பயணத்தில்
உன் வார்த்தைகளில் கொஞ்சம்
இளைப்பாறினேன்🖤

Monday 14 September 2020

பயணத்தின்போது இடைவிடாது செவியில் கிசுகிசுக்கும் காற்று போல
தொடரும் 
உன் அன்பின் மொழி

Friday 11 September 2020

உன் மௌனத்தை எங்ஙனம் மொழிபெயர்க்க?
கோபத்தில் வரும் உன் வார்த்தைகளாகவா?
கொஞ்சலெனப் பார்க்கும் உன் பார்வையாகவா?
அலட்சியமாய் திருப்பிப் போகும் உன் பாவனையாகவா?
முதுகு காட்டி அழும் உன் விசும்பலாகவா?
முதன்முறை சந்திப்பில் விரிந்த உன் விழிகளின் ஒளியாகவா?
இதழ் பிரிக்காமல் கொல்லும் உன் மௌனமாகவேவா?

Tuesday 8 September 2020

இன்னமும் கண்திறவாத பூனைக்குட்டி
தத்தித் தத்தி வாசம் பிடித்து
தாய்மடி சேர்வது போல
சொற்களைத் திறவாமலேயே
உன் மனவாசம் உணர்ந்து
உனைச் சேர்ந்தேன்🖤
உன்னோடு அழைத்துச் செல்ல மறுக்கிறாய்
உன் கனவில் வருமென்னை
என்ன செய்வாய்?
இமைகளைத் திறந்த பின்பும்
வீழ்ந்து விடாதிருக்கிறது
என் கனவு
நேர்கோடொன்றே வசப்படுகிறது
அலை பொங்கும் கடலொன்றை
எப்படி வரைய?

நிகழ்வுகள் பலநேரம் நம்மை நகர்த்திச் செல்லுகின்றன.
சில நம்மை நகர்த்திவிட்டுச் செல்கின்றன.
மற்றும் சில புறக்கணித்துப் போகின்றன.
நமக்கானதுக்கும் நமக்கேற்றதுக்குமான
இடைவெளி உணருமுன்
நிகழ்ந்தே விடுகிறது அந்நிகழ்வு.