Monday 29 July 2019

நினைத்திருந்ததற்கு மாறாக ரயில் சீக்கிரமே வந்து சேர்ந்துவிட்டது. தாமதமாய் வந்து சேர்வோமோ என்றிருந்த பதைபதைப்பு மாறி இப்படிக் காக்கவேண்டியிருக்கிறதே என்று விசனம் வந்தது. பேசிவைத்திருந்த இடம் ரயிலடிக்கு அருகிலேயே இருந்தது. இறங்கி வெளியே வந்தவுடன் சூடான தேநீர் அருந்திமுடித்தாயிற்று. தனிமையைப் போக்க விரும்பும்வேளை சூடான தேநீர் சிறந்த துணையெனத் தோன்றும். சட்டென்று அருந்திவிடமுடியாத சூட்டில் உள்ள தேநீரை சிறு துளிகளாக உள்ளிறக்கும் போது அலாதி இன்பம் பிறக்கும். சூட்டோடு தொண்டைக்குழாயின்வழி உட்செல்கையில் அப்பொன்னிறத் திரவத்தைக் கொண்டாடத் தோன்றும். கொஞ்சம் சூடு குறைந்தபின் வாய்நிறைய உறிஞ்சி கன்னக்கதுப்பும் மேலண்ணமும் சூடுபடக் குடிக்கையில் கிடைக்கும் சுகானுபவத்தை வேறெந்த உணர்வும் தந்துவிட இயலாதெனத் தோன்றும். தேநீரோடு காதல் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட வேறெந்தத் துணையும் தேவைப்படவில்லை.

காலையும் மாலையும் கிட்டத்தட்ட இரண்டு அரைமணிநேரங்கள் இப்படிக் கழிந்துவிட அந்த அனுபவத்தை அசைபோடுவதில் மேலும் சில மணிநேரம் தீர்ந்துபோகிறது. தேநீர் அருந்தவென்றே சற்றுத்தள்ளியிருக்கும் கடைக்குச் செல்வது வாடிக்கையாக நடப்பது. அதற்குக்காரணம் கடைக்காரர் தரும் கிளாஸ் டீ. இந்த ஒன்றே பிடித்துப்போக வேறுகாரணங்கள் ஏதும் தேவைப்படவில்லை அங்கு வருவதற்கு. கண்ணாடித்தம்ளரை ஒருமுறைக்கு இருமுறை கழுவி வரிசையாக வைத்து க்ளிங் க்ளிங் என ஒலியெழும்ப சர்க்கரை போட்டு பாலை ஊற்றி, மேலாக வலைதொங்கும் வடிகட்டியால் பொன்னிற டீ டிகாக்ஷனைப் பொழிந்து ஒரு சிற்பியின் நேர்த்தியோடு அத்தேநீரைக் கலந்து தருவார். அவரிடத்தில் பேப்பர்கப் இல்லை என்பதும் ஒரு சிறப்பம்சமே. அதிசயமாக இந்த ரயிலடிக் கடையிலும் கிளாஸ் டீ கிடைத்தது நினைவுகளைக் கிளறிவிட்டது. குடித்து முடித்தவுடன் மெதுவாக நடைபோட்டு சந்திக்கத் தேர்ந்தெடுத்திருந்த பூங்காவில் நுழைந்து உள்நுழையும்போதே பார்வையில் படும்படி மரத்தடி ஒன்றில் அமர்ந்தாயிற்று.

எதற்காக இந்த சந்திப்பு? இப்போது நினைக்கையில் ஆசுவாசமாக இருந்தது. தேவையற்றதோ என்று தோன்றியது. திடீரென வந்த தொலைபேசி அழைப்பும் அந்த நேரத்து மனநிலையில் தோன்றிய ஆர்வமுமே இன்று இங்கு வந்து நிறுத்தியுள்ளது. ஒரு வாரம் காத்திருந்து, இன்று கிட்டத்தட்ட 120 கிமீ பயணித்துவந்து இங்கு சேர்வதற்குள் உற்சாகம் வடிந்தததுபோலவும் அவசியமற்றதோ இந்த சந்திப்பு என்றும் முடிந்நதைக் கிளறுவதில் பயனென்ன என்றெல்லாம் ஏதேதோ தோன்ற ஆரம்பித்து விட்டது.

நிழல் பின்னகர்ந்து குறைந்து கொண்டே வந்தது. வெயில் மாறி மாலை மங்கத் துவங்கும் முன்னேற்பாடுகள் வானில். பக்கத்தில் சுருண்டு படுத்திருந்த நாய் சோம்பல் முறித்து எழுந்து சென்றுவிட்டது. சுண்டல் விற்கும் பெரியவர் வந்து நின்று பார்த்துவிட்டு ஏதும் கேட்காமலே அகன்றுவிட இப்படியாக கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் கழிந்துபோனது. இதற்குமேலும் மனதை இருத்திவைத்து அமரமுடியாமல் ஏதேதோ அலைக்கழிக்க கேள்விகள் ஒன்றின்மேல் ஒன்றாக மனதை நிறைத்தன.

நிகழவிருக்கும் சந்திப்பின் பலன் எதுவாக இருக்குமென நினைத்துப்பார்க்க, ஏதுமற்ற தன் வெளியில் ஏதோ ஒரு குறுக்கீடாகவே தோன்றியது. மனம் ஒப்ப மறுத்தது. கால்கள் தாமாகவே தேநீர்க்கடை நோக்கி நடந்தன. கடைக்காரர் முதலில் பேப்பர்கப்பை எடுத்துப் பின் மனம் மாறியவராக கண்ணாடித்தம்ளரில் தேநீர் நிரப்பி நீட்டினார். கொதிக்கும் சூட்டில் சிறுசிறுதுளிகளாக உள்ளிறங்க மெல்லக் கரைந்தது மனது. பல ஆண்டுகளுக்கு முந்தைய சந்திப்பில் பெண்கள் கடைக்கு வந்து தேநீர் அருந்தக்கூடாததற்கான காரணங்களையும் இன்னும் பெண்கள்  கூடாத பலவற்றையும் தேன்தடவிய வார்த்தைகளால் போதித்த நினைவு வந்து அலையலையாய் நினைவைக் கிளறிவிட  இத்தேநீர்த்தவத்தை எதன்பொருட்டும் இழக்கத்துணியாத மனநிலையோடு ரயிலடியை நெருங்க, கை அனிச்சையாய் அலைபேசியை எடுத்து அணைத்து வைத்தது.

இருவர் எழுதிய கவிதையில் எது யாருடைய சொல்?
வெள்ளைத்தாளெனக் கிடந்த பொழுதொன்றில்
வார்த்தைகள் ஏதுமற்றா இருந்தோம்?
ஒரு சொல்லென்பதென்ன?
உயிரும் மெய்யும் சேர்ந்ததுதானே.
துவங்கும் அக்கணத்தில்
உயிர் நீயென ஓரெழுத்தைத் தருகிறாய்
மெய் கொண்டு நானிணைய
சொல்லொன்று சிலிர்த்தெழ
ஆயுத எழுத்தை அங்கங்கே வீசிச்
சமரொன்றைத் தொடங்குகிறாய் சடுதியில்.
ஈறுபோதலென உடை களைகிறேன்
இடையுகரம் எதுவென இடையளக்கிறாய்.
ஆதி நீடலென முதல் முத்தமொன்றை
முடிக்காமல் தொடருகிறோம்.
தன்னொற்றென ஒட்டிக்கொண்டு
முன்நின்ற நின் மெய் தழுவுகிறேன்.
இணையவும்  இயல்பே என
இணைந்த நாம் பிரிந்திலோம்.
தழுவலும் தழுவல் நிமித்தமுமாய்
ஈருயிர் ஓர் மெய்யான
பொழுதொன்றில் பிறந்த இக்கவிதையில்
எது யாருடைய சொல்?

இறுக்கமான பொழுதுகளில்
எனக்குள் எளிதில் நுழைந்துவிடும் லாவகம்
இதுவரை கைவரப்பெறவில்லை உன்னையன்றி மற்றவர்க்கு.
ஏதேதோ புலம்பித் திரியும் மனதுக்கு
புன்னகையால் ஒரு கடிவாளம் போடுகிறாய்.
தனிமை தேடி அமரும்வேளை
ஓயாத உன் பேச்சுக்களால் திசைதிருப்பும் உன் வன்முறை
மன்னிக்கத்தக்கதல்ல.
பசி மரத்துப்போனவேளையில்
பார்வையில் எனை உயிர்ப்பித்துப் பரிமாறும் உன் அன்பைப் புறக்கணிக்கும்
என் சினத்தையும் சேர்த்தே செரிக்கிறாய் நீ.
எத்தொலைவு போனாலென்ன
அருகில் உன் ஆரவார அன்பின் மழை பெய்துகொண்டே இருக்குமென்ற நம்பிக்கையில்
உன்னை உதறிச்செல்லவும் எத்தனிக்கும் என் பிடிவாதம்
உன் ஒருதுளி மௌனத்தில் தளர்ந்துபோகிறது.
எதுவாயினும்
எப்பொழுதாயினும்
எதற்காகவேனும்
உன்னோடு பொழுதைக் கழிக்கவியலா ஆற்றாமையில்
வெந்து தவிக்கும் இதயத்தின்
வெற்றுக் கூச்சலை
வழமைபோல
உன் புன்னகையால் துடைத்தெறிந்து
பார்வையில் மடிசாய்த்து
பிரியத்தால் தலைகோதுவாய் என்ற
நம்பிக்கை இற்றுப்போய்விடவில்லை என்னுள் இன்னமும்.

உன் வருகை நிகழும் அக்கணம்
என் இறுதிமூச்சு வெளியேறும் தருணமாயிருக்கக்கூடும்.
உனக்கான என் வார்த்தைகள்
ஒலியிழந்து போயிருக்கலாம்.
என் விழிப்படலத்தில் ஒளியின் ரேகைகள் அழிந்திருக்கலாம்.
செவித்திறனும் மங்கி
நடை மறந்த பாதங்களும்
தொடு உணர்ச்சியிழந்த தோலுமாய்
உயிர்த்திருந்த கணங்களில்
அன்றொரு நாள்
என் உள்ளங்கையில் நீ உருட்டித் தந்த
உயிரில் கலந்துவிட்ட
அவ்வொரு கவளம் சோற்றின் வாசனையில்
சாத்தியப்பட்டது என் காத்திருத்தல்.