Friday 29 June 2018

நேற்றைய மாலை வெளிச்சமாய்த்தானிருந்தது
விளக்கொன்றும் ஏற்றவில்லை
பின்னைப்பொழுதில்
இருளின் விரல்கள் தீண்டத்துவங்கிய கணத்தில்
விளக்கினை ஏற்றித்திரியைத் தூண்டினேன்
நிறைந்த ஒளிவெள்ளத்தில்
நிழலெனச் சரிபாதி இருள் சூழ்ந்தது
விளக்கினை அணைக்காமல்
இருள் விரட்டத் தலைப்பட்டேன்
ஒளிப்பிரவாகம் எங்கும் வியாபித்த பொழுதில்
நித்திரை வந்து சுமையென அழுத்த
இமைமூடிய கணமொன்றில்
இருள் என் கண்களுக்குள் ஒளிர்ந்தது.

Wednesday 20 June 2018

தினவெடுத்த பெருங்காமத் தேடலின் நீட்சியாக
யாவரும் நிறைந்த பெருந்திரளின் தனிமையில்
தோளில் ஒற்றியெடுத்த இதழின் ஸ்பரிசத்தோடு
கிசுகிசுத்த மீசை தந்த குறுகுறுப்பில்
கரைந்துபோன காமத்தில்
முளைவிட்டது
காதலின் நான்காம் இலை.

பெருங்காமத் தினவெடுத்து
உன் பேருரைக்கும் நேரம்
அனிச்சையால் தளர்ந்து அகலும்
எப்போதும் மார்பில் கீறும் மாங்கல்யச் சங்கிலி.

Monday 18 June 2018

விழி மூடிய தருணம் துளிர்த்த கனவினூடே பயணித்திருக்கிறேன்
விடைபெறுகையில் நீ
இதழ்களுக்குள் மறைத்துக்கொண்ட சொல்லொன்றைக் கேட்க வேண்டி.
வந்த பாதையெங்கும் பார்த்துவிட்டேன்
எங்கும் சிந்திவிடவில்லையது.
சாக்குபோக்கு ஏதுமின்றி சட்டென்று சொல்லிவிடு
விடியல் பொழுதில்
இமைக்கதவுகள் திறந்தென்னை
இரக்கமின்றி வெளித் தள்ளுமுன்.

Saturday 16 June 2018

ஒற்றை வார்த்தை
ஒற்றைச் சொல்லில் பதிலிறுக்கிறாய்.
இருக்கிறாய் என்னோடென்றே கொள்கிறேன்

Sunday 10 June 2018

கனலேந்து கண்களில்

சட்டென்று மாறும் பார்வைகளின் பொருளுணராமல் தடுமாறுகிறாள்.
எப்போதும் அணியும் உடைகளில் அசௌகரியம் புரிய
அவ்வப்போது உடைகளை இழுத்துவிடுதல் இயல்பாகிறது
சக மாணவன் உறுத்துப் பார்ப்பதுபோல் தோணுவது பிரமைதானா?
பள்ளித்தோழனின் அண்மையை விட்டு தள்ளி அமர்வதேன் சில நாட்களாய்?
துப்பட்டாவைப் போட்டாலென்ன
பாட்டியின் கேள்விகள் அதிகமாகுது.
இதென்ன குழப்பம்?
மனசுக்குள் ஏனிந்த நடுக்கம்?
என்ன நடந்தது தனக்கென்று உணராத பொழுதொன்றில்
பேருந்து நெரிசலில்
வயசு தந்த சலுகையில்
வாகாய் நெஞ்சில் கைவைத்த பெருசொன்றின் வக்கிரப் பார்வையும் வழிந்த ஆசையில் நனைந்த மீசையும் சொல்லிற்று
மொட்டென மேடிட்ட மார்பின் வனப்பதில் விளைந்த வடிவின் மாற்றமே அதுவென்று.
விழிகள் மலர்த்திப் பார்க்க
எங்கும் ஆண்கள் தத்தம் இயல்பிலிருக்க
கூனிக்குறுகிய பெண்கள்
ஒளிந்து ஒடுங்கிய மகளிர்
ஆடை கொண்டு மூடி அடங்கிக்கிடக்கும் அன்னையர்.
ஏனிந்த வேற்றுமை?
துடைத்தெறிந்தாள்
தயக்கங்களை
குழப்பங்களை
அச்சங்களை
அறியாமைகளை.
என் உயிர்
என்னுடல்
யாருக்காக இந்த வாழ்க்கை?
ஏன் சுருண்டு கிடக்க நத்தையென?
நெருப்பை ஏந்தினாள் நெஞ்சினில்.
கனல் கக்கினாள் கண்களில்.
விலகிச் சென்றன விசனங்கள்.
பாதை விரிந்தது பளீரென.
ஆடவர்தம் அன்புப்பார்வைகள் ஏற்று
வக்கிரப் பார்வைகள் வீழ்த்திப் புறப்பட்டாள் புயலென.
கைத்தடியொன்றின் துணைகொண்டு.

Friday 8 June 2018

சிற்றெறும்பின் சிணுங்கலுக்கும் செவிமடுக்கும் ப்ரியம்
உனது.