Wednesday 30 June 2021

குழந்தைகள் வரையும் வீட்டில்
தவறாமல் முளைக்கிறது
கிளைபரப்பிய மரமொன்று
🏡
நேற்றைய மாலை வெளிச்சமாய்த்தானிருந்தது
விளக்கொன்றும் ஏற்றவில்லை
பின்னைப்பொழுதில்
இருளின் விரல்கள் தீண்டத்துவங்கிய கணத்தில்
விளக்கினை ஏற்றித்திரியைத் தூண்டினேன்
நிறைந்த ஒளிவெள்ளத்தில்
நிழலெனச் சரிபாதி இருள் சூழ்ந்தது
இருளில்லா ஒளியைத் தேடிய பொழுதில்
நித்திரை வந்து சுமையென அழுத்த 
இமைமூடிய கணமொன்றில்
இருள் என் கண்களுக்குள் ஒளிர்ந்தது.

Saturday 26 June 2021

லேட்டாகும்
என்ற ஒற்றைச் சொல்லில்
அவர்களுக்கு
முடிந்துவிடுவது போல்
அத்தனை எளிதில்லை பெண்ணுக்கு.
"சுண்டல் செய்து வச்சிருக்கேன்
காபி டிகாக்ஷன் தயாரா இருக்கு.
இரவுக்குக்கூட மாவிருக்கு.
முடிஞ்ச உடனே வந்துடுவேன்"
இப்படி 
அடுக்கடுக்காய்
சமாதானங்களை முன்வைத்தாலும்
மச மசன்னு நிக்காம
சீக்கிரம் வந்து சேரும் வழியப்பாரு
என்ற 
எச்சரிக்கையோடுதான்
எங்கள் ஒரு மணிநேரத் தாமதம் கூட.

Friday 25 June 2021

உன் இருத்தலைச் சொல்லும்
ஏதோ ஒரு சிறு குறிப்பில்
என்னுயிர் இளைப்பாறும் 🖤

Thursday 24 June 2021

மழைக்கான வேண்டலுக்கு
குடையோடு வந்த சிறுவனின் நம்பிக்கையையொத்தது
என் காத்திருப்பு

Sunday 13 June 2021

நினைவுகள் கூடப் பிணியில் துவளும் வலுவற்ற தருணமிதில்
விரல் பிணைக்க வருவாயா ♡
எதுவொன்றை இழந்தாலும் நட்டம்தான் என்றில்லை
உன்னில் எனைத் தொலைத்தபோது அறிந்தேன் ♡

Sunday 6 June 2021

பழுத்த இலையென உதிரத்தான் போகுது உயிர் என்றேனும்.
பறவையைப் போல் சிறகசைத்துப் பறக்க
தடையென்ன இன்று?