Saturday 6 May 2017

வெய்யில் என்னைச் சுட்டெரிக்கவில்லை
தலைக்குமேலே வானம் ஏந்தி நடக்கிறேன்.
மேகங்களால் மூச்சுத்திணறலில்லை
கைகள் வீசி முன்னேறுகிறேன்.
காற்று என்னைக் கட்டுப்படுத்தவில்லை.
இடியிடித்து மழைபொழிவதற்கான
அறிகுறிகள் ஏதுமில்லை.
வெள்ளை வானம்
கந்தக பூமி
கனல்காற்று
எதுவும் இடையூறில்லை.
கதிரவன் கக்கும் ஒளியினின்றும்
ஒருபிடியளவு சேகரிக்கிறேன்.
செல்லும் பாதையில் இருள்வரலாம்
என் சந்ததிக்கு பாதையில் ஒளியேற்றும் பொருட்டும்.
வழித்தடத்தில் பிள்ளைகட்கு
உணவு சமைக்கவும்.
எதன்பொருட்டும் என் பயணம்
தடைபடாத முன்னேற்பாட்டில்
முன்வைத்த அடியை
முன்வைத்தே செல்கின்றேன்.
பின்தொடரும் என் பிள்ளைகட்கு
ஒளியாய், உணவாய்,
வழித்தடமாய் நானே.
என் பயணம் முடிவுறும் பாதையில்
என் மக்கள்  ஏந்துவர்
ஒளியையும் நெருப்பையும்.
பயணங்கள் முடிவுறத் தேவையில்லை
புவியுள்ள மட்டிலும்.

7/4/17

No comments:

Post a Comment