விடமூறிய வலியொன்று விரல் வழி ஊடுருவ
விக்கித்து நிற்கின்றேன்.
எப்போது நிகழ்ந்ததென அறியாத பொழுதென்றில்
எதற்காகவென்ற அறிதலுமின்றியே
கால்கட்டை விரல் நகக்கண்ணில்
பாய்ந்ததொரு மின்னலாய்
நரம்புகள் வழிகடந்து
நாபிக்கமலமதில் நஞ்சினைப் பாய்ச்சி
நெஞ்சாங்கூட்டில் நெருப்பெனத் தகித்து
தொண்டைக் குழியினில் சொற்களைச் சிதைத்து
விழியிரண்டின் பார்வையைப் பறித்து
நடமாடவிட்டதெனை நடைப்பிணமாய்.
வலி என்பது வலிக்காமல்
விடமென்பது உயிர் பறிக்காமல்
வார்த்தைகளற்ற மௌனமாய்
நெருக்கமற்ற இடைவெளியாய்
உறக்கம் விழுங்கிய இரவுகளாய்
நினைவுகள் தின்று வாழும் நிர்க்கதியில் ஊசலாடும் உயிரொன்று.
No comments:
Post a Comment