மழையை
மழையென்றும் சொல்லலாம்
நீயென்றும் சொல்லலாம்.
மழையில்லா வாழ்வு
நீயில்லாப் பொழுதுபோல் கொடிது.
மழை நனைத்த மண்
உன் அண்மை போல்
குளிர்ந்தென்னை ஏந்திக்கொள்கிறது.
மழை சூடிய மரங்கள்
சாரல் சொரிந்து என்னை
சீராட்டும் வேளை
மழையில் தொலைந்த
கோடை வெம்மையென
உன்னில் என்னைத் தணிக்கிறேன்.
இப்போது
மழையென்றால் நானும்.
Wednesday, 15 August 2018
Thursday, 9 August 2018
ரெக்கையசைத்துச் செல்லும் பட்டாம்பூச்சியின் வழிகாட்டுதலில்
இன்றைய என் பயணம்.
படபடத்துத் திரிந்தாலும்
பாதையில் குழப்பமில்லை போல.
தற்செயலா அது?
என் வழியில் முன்னே சென்று
வழிகாட்டிச் செல்கிறது.
பாதை மாறினால்தான் என்ன?
பட்டாம்பூச்சி சேருமிடம் மலர்வனம்தானே.
மலர்தோறும் தேனருந்தி
மயங்கிச் சிறிதே இளைப்பாறப்போகிறோம்
நானும்
என்
பட்டாம்பூச்சியும்.
10.08.2016
Tuesday, 31 July 2018
ஆடையில் மறையாத நிர்வாணம்
நேற்றோ?
இன்றோ?
நிர்வாணம் ஒரு பிரச்சினையில்லை
எப்போதுமே.
உடையின்றித் தானே பிறந்தோம்?
உடல் முழுக்கப் புழுத்துக்கிடக்கும் நாட்டில்
சீழ்பிடித்த ஆட்சியாளர்களின் மனசாட்சியாய்
தேசமே நிர்வாணமாய் நிற்கிறது.
பத்துலட்ச ரூபாய் உடை
அதை மறைக்கவில்லை.
1/8/2017
Sunday, 22 July 2018
ஆதி ஆப்பிள் புளிப்பென்று
அகலுகிறாள் கரம் உதறி
உவர்ப்பும் இனிப்பும் கொண்ட
தேனைத் தரும்
பூவொன்றைத் தேடி
செடிகள் தோறும் துழாவி
வெண்ணிறத்தொரு தும்பைப்பூவின்
நுண்துளை தள்ளிய கள்ளுண்ண
பட்டாம்பூச்சியாகும் உபாயமறியாது
முகம் சுணங்கிப் போகிறாள்
வாடிய வதனத்தின்மீது
வானுலவும் மஞ்சுதிர்த்த
ஒருதுளி நீர் பட்டு
உயிர் மலர்ந்த கணமொன்றின்பின்
வான்மழையின் காதலியாய்
முகடுகளில் சுற்றித் திரிபவளைக்
கண்டால் உரைத்திடுங்கள்
புளிப்பும் சிவப்புமற்ற
பச்சைநிற ஆப்பிளொன்று
நலம் உசாவிச் சென்றதென.
ஒவ்வொரு நாளும் உள்நுழையும் இருள்
வாழ்வின் இறுதிக்கணங்களை கண்முன்னே காட்சிக்குத் தருகிறது
இரவு கவிந்து சாமம் தொடங்கும் பொழுதில்
விழித்திருக்கும் உயிருணரும் தனிமை
மரணமன்றி வேறேது?
உடல் பிரிந்த உயிர் நினைவுகள்தோறும் தாவி
கனவொன்றின் மேல் இளைப்பாறுகையில்
மீண்டு வரும் நினைவலைகள் தருவது சிறகாயின் காலை உயிர்த்தெழுதலும்
விலங்காயின் மரணித்தலும்
புலர் காலையில் நியதியாகிறது.
மீண்டும் வாழ்வா மரணமா
என்பதை நிர்ணயிக்க இருள் கவ்வும்
மாலை வரை உயிர்த்திருக்கும் உயிர்