ஆதி ஆப்பிள் புளிப்பென்று
அகலுகிறாள் கரம் உதறி
உவர்ப்பும் இனிப்பும் கொண்ட
தேனைத் தரும்
பூவொன்றைத் தேடி
செடிகள் தோறும் துழாவி
வெண்ணிறத்தொரு தும்பைப்பூவின்
நுண்துளை தள்ளிய கள்ளுண்ண
பட்டாம்பூச்சியாகும் உபாயமறியாது
முகம் சுணங்கிப் போகிறாள்
வாடிய வதனத்தின்மீது
வானுலவும் மஞ்சுதிர்த்த
ஒருதுளி நீர் பட்டு
உயிர் மலர்ந்த கணமொன்றின்பின்
வான்மழையின் காதலியாய்
முகடுகளில் சுற்றித் திரிபவளைக்
கண்டால் உரைத்திடுங்கள்
புளிப்பும் சிவப்புமற்ற
பச்சைநிற ஆப்பிளொன்று
நலம் உசாவிச் சென்றதென.
No comments:
Post a Comment