Friday, 2 June 2017

பெரிய மனுஷன்

Crocodile க்கு முத்தம் கொடுக்கும் டைனோசார்
பாலைவனப் பாம்பின் நச்சுமுத்தம் சுவைக்கும் அலிகேட்டர்.
ஷேடோ ஃபைட் -2வின் ஆயுதம் தாங்கி
அநீதி அழிக்கக் கிளம்பும் கதாநாயகன்.
இன்னும் மான்ஸ்டர்கள் வாழுதா
என்ற கேள்விக்கான விடைகாண
ரெப்டைல்ஸ் என கூகிள்பண்ணும் சிறுவன்.
இதுதான் அவன் உலகமென நாம் நினைக்க
சிறுபிள்ளை வெற்றிமாறனோ
வாழ்க்கைனா இன்பதுன்பம் கஸ்டம் நஸ்டம்
எல்லாம் உண்டு
அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் நாமதான்
என்று அண்ணனை ஆற்றுப்படுத்தி
தலையணை அணைத்து உறங்கச்செல்கிறான் நம் விழிகளை
நிறையச்செய்து.

இன்று உலகக் கவிதைகள் தினமாமே.
நாங்களும் களத்துல இறங்குவோம்ல.

சபையோர் அவையோரெல்லாம் இந்த ஒருநாள் பொறுத்து அருளுக.
--------------------------------------------------------

சுவரேறும் பல்லியென
ஆசைகள் மனமேறும்.
இலக்கைத் தவறவிட்ட பல்லியாய்
"சொத்" என கீழேவிழும் மனது
ஆசைகளறுந்து
துடித்துக் கிடக்கும்.
வாலறுந்த பல்லிக்குப் பின்னரும்
ஓர் இரை கிடைக்கலாம்.
அறுந்துபோன ஆசையோ
தூக்குக் கயிறென
இறுக்கத்
துடித்தடங்கும் மனசு.

------------------------------------------------------
அப்பாடா!
திருப்தியாச்சு மனசு.

ம்ம்ம்...

'ம்'   என்பது ஒரு துவக்கம்
மௌனம் கனக்கும்போது
'ம்'   என்பது ஒரு தொடர்ச்சி
மொழி தடைபடும்போது
'ம்'   என்பது ஒர் இணைப்பு
உரையாடல் அறுபடும்போது
'ம்'   என்பது ஒரு திருப்பம்
எத்திசை தொடர்வதென அறியாதபோது
'ம்'   என்பது ஒரு முடிவு
ஒத்திசைந்து ஏற்கும்போது
'ம்'   என்பது உயிர்ப்பு
பேச நா எழாமல் தத்தளிக்கும் போது
'ம்'   என்பது பெருமூச்சு
யாருமற்ற தனிமையில்
'ம்'   என்பது உயிரின் ஒலி
அன்பின் பரிமாற்றத்தை உணருகையில்.
ம்ம்ம்...

விரித்த குடைதரும் நிழலென நட்பு.

வனமாய் நீ.
பெருங்காற்றாய் நான்.

மனு இறக்கவில்லை.
அவன் கோரப்பசிக்கு சம்பூகன், ஏகலைவன் போதவில்லை.
ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன் என காவுப்பட்டியல் நீளுகிறது.

14/03/2017

90

அன்று
உண்ணாவிரதப் போராட்டம் என்னும் அகிம்சையைக் கடைப்பிடித்த காந்தியை சுட்டுக்கொன்றோம்.

நேற்று
வாழ்நாளெல்லாம் நம் உயர்வுக்கெனத் தம்மை அர்ப்பணித்த பெரியாரை செருப்பால் அடிக்கும் செருக்கு கொண்டோம்.

இன்று
இரோம் ஷர்மிளாவை வாக்கு எண்ணிக்கையால் வீழ்த்தினோம்.

போராட்டங்கள் முடிவதுமில்லை.
போராளிகள் ஓய்வதுமில்லை.

வாக்காளர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருக்க

வேட்பாளர்கள் வாக்குகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

தனக்கான ஆதரவை 1,2,3 என எண்ணிக்கொண்டே வந்து 90 க்கு மேல் எண்ண ஆளில்லாமல் முடிக்கிறது சனநாயகம்.

11/03/2017