Saturday, 6 May 2017

சொல்லிவிட்டுப்போ
உயிர் நனைக்கும் சொல்லொன்றை.

25/4/17

நிலத்தின் வெம்மை தணித்து
உட்செல்லும் மழைநீரென
உள்ளுறையும் உன் நினைவுகள்.

23/4/17

வாதையின் பெருஞ்சுமை
அழுத்தும்வேளை
தலைகோதும் சிறுவிரலின் பிரியங்கள்
வலி தீர்க்கும்.

22/4/!7

வெற்றுப்பொழுதெனக் கடக்கவில்லை.
வீணில் ஒரு கணம் இழக்கவில்லை.
நேற்றைப்பொழுது போதாமல்
இன்றில் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்
நேற்றைய நாளையிலிருந்து.
இன்று போதுமா தெரியவில்லை.
நாளை கிடைக்குமா
நம்பிக்கையோடு எட்டிப்பார்க்கிறேன்.
அருகேயிருந்தது அண்மைவிட்டுக்
கொஞ்சம் தூரம் தள்ளி...
அடடா!
நாளை என்பது என்றுமில்லையாம்.

17/4/!7

வெய்யில் என்னைச் சுட்டெரிக்கவில்லை
தலைக்குமேலே வானம் ஏந்தி நடக்கிறேன்.
மேகங்களால் மூச்சுத்திணறலில்லை
கைகள் வீசி முன்னேறுகிறேன்.
காற்று என்னைக் கட்டுப்படுத்தவில்லை.
இடியிடித்து மழைபொழிவதற்கான
அறிகுறிகள் ஏதுமில்லை.
வெள்ளை வானம்
கந்தக பூமி
கனல்காற்று
எதுவும் இடையூறில்லை.
கதிரவன் கக்கும் ஒளியினின்றும்
ஒருபிடியளவு சேகரிக்கிறேன்.
செல்லும் பாதையில் இருள்வரலாம்
என் சந்ததிக்கு பாதையில் ஒளியேற்றும் பொருட்டும்.
வழித்தடத்தில் பிள்ளைகட்கு
உணவு சமைக்கவும்.
எதன்பொருட்டும் என் பயணம்
தடைபடாத முன்னேற்பாட்டில்
முன்வைத்த அடியை
முன்வைத்தே செல்கின்றேன்.
பின்தொடரும் என் பிள்ளைகட்கு
ஒளியாய், உணவாய்,
வழித்தடமாய் நானே.
என் பயணம் முடிவுறும் பாதையில்
என் மக்கள்  ஏந்துவர்
ஒளியையும் நெருப்பையும்.
பயணங்கள் முடிவுறத் தேவையில்லை
புவியுள்ள மட்டிலும்.

7/4/17

புலியொன்றைப் புறந்தள்ளி
சிறுத்தையின் வால்பிடித்து வீசியெறிந்து
குரங்கின் கழுத்தை நெரித்து
கரடியின் காதினைக் கிள்ளியவாறே
உறங்கிக்கொண்டிருக்கிறான்
வீரமகன் வெற்றிமாறன்.
விலங்குகளனைத்தும்
சுற்றிக் காவல் நிற்க
ஐவருக்குமாய் பால் குவளையை
நிரப்புகிறேன் நான்.

3/4/17

என்னிடம் கொட்டிக்கின்றன மௌனங்கள்.
கேட்கும் செவியுளதா உன்னிடம்?

03/04/2017