ஆசிரியரின் தவறான அணுகுமுறை என்பதுதான் காரணமா?
எத்தனை பெண்களுக்கு இதுபற்றிய தெளிவான பார்வை, அணுகுமுறை இருக்கிறது? குடும்பத்தில் உயர்கல்வி படித்த பெண்கள், அதிகாரியாக பணியாற்றுபவர்கள், பணிநிமித்தம் பல இடங்களுக்கும் செல்ல வேண்டிய பெண்கள், மருத்துவப்பணியில் இருக்கும் பெண்கள் எனப் பலதரப்பட்ட பெண்களுக்கும் மாதவிடாய் என்பது உடற்கழிவுதான் என்பதும் அதைத்தாண்டி அதில் மூடிமறைக்கவோ, வெளியில் கறை தெரிந்துவிட்டால் அவமானப்படவோ ஏதுமில்லை என்ற புரிதலும் இல்லை என்பதுதான் இங்கு சொல்லவந்தது.
இன்றும்கூட, மாதத்தில் மூன்று நாட்கள் ஓய்வு என்பதைத்தாண்டி வேறெதையும் தொடக்கூடாது, குடும்ப ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்குபெறக்கூடாது, இறந்துவிட்டவர்களின் சடலத்தைத் தொடுவதோ, நீரூற்றுவது போன்ற சடங்குகள் செய்வதோ கூடாது போன்ற கட்டுப்பாடுகள் 90% குடும்பங்களில் நிலவுகிறது.
குடும்பப் பாரம்பர்யத்தையும், உயர்வையும் புனிதத்தன்மையையும் கட்டிக்காப்பதற்காக படித்த விவரமறிந்த பெண்களும் இதைக் கடைப்பிடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். சிலர் அத்தகைய கட்டுப்பாட்டை குலப்பெருமை, புனிதம் என விரும்பியே ஏற்கிறார்கள்.
ஒரு பள்ளிமாணவியின் மரணமும், ஆசிரியரின் நடவடிக்கையும் தாண்டி உளவியல் பூர்வமாக அணுகவேண்டிய விஷயமிது. அந்த ஆசிரியருக்கும் இதுபற்றிய புரிதல் இல்லாமலிருந்திருக்கலாம்.
அணுகுமுறையில் கனிவாக இருந்திருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு பெண்ணாக அந்த ஆசிரியரையும் உளவியல் ரீதியாக பயிற்றுவிக்கவேண்டும். இச்சமூகத்தில் அவரும் ஒரு குடும்பப்பெண்ணாக இருக்கிறார் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
இதற்கான தீர்வு என்ன என்று சிந்திக்கும்போது, பெண் குழந்தைகளுக்கு பத்து, பதினோரு வயதிலிருந்தே உடற்கூறு, வளரும்போது உடலமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பருவமடைவது, மாதவிடாய், அது நிகழுவதற்கான காரணம். நிகழவேண்டிய அவசியம் ஆகியவற்றைப் பள்ளியில் பயிற்றுவித்தலும்,
ஆசிரியர்களுக்கும் அதுபற்றிய முழுமையான புரிதலும், தாயன்போடும், உளவியல் மற்றும் மருத்துவரீதியாக அந்நாட்களில் பெண்குழந்தைகளை அணுகவும் பயிற்றுவிக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். இது வெளியில் தெரிவது அவமானகரமான விஷயமல்ல என்ற ஏற்புத்தன்மையும் கொள்ள பெண்குழந்தைகளைத் தயார்செய்தல் இன்றியமையாதது.
இனியாவது இதுபோன்ற துயர நிகழ்வுகள் நிகழாமலிருக்க அரசு தரப்பும், பெண்கள் அமைப்புகளும், பள்ளி நிர்வாகங்களும் விழித்துக்கொள்ளவேண்டும்.
விரைந்து செயல்படவேண்டும்.
No comments:
Post a Comment