Thursday, 17 August 2017

ஒரு பெண்ணின் கருமுட்டையும் ஆணின் வீரியமான விந்தணுவும் இணைந்த - அது இயல்பாய் நிகழ்ந்ததோ, ஒருவரின் விருப்பத்தினால் மட்டுமோ, பாலியல் வல்லுறவினாலோ, இருமனமும் மூழ்கி முக்குளித்த காதலினாலோ -  ஒரு தருணத்தில் உருவான கருவினை பெண் சுமக்கும் காலம் கிட்டத்தட்ட 280 நாட்கள். 280 நாட்களுமே தவக்காலம்தான் பெண்ணுக்கு.

உணவுண்ணும்போதும், நடக்கும்போதும், உட்காரும்போதும், படுத்துறங்கும்போதும் நொடிப்பொழுதுகூட அகலாத நினைவுடன், அக்கறையுடன், கவனத்துடன், பேரன்புடன் இந்தத் தவக்காலத்தைக் கடக்கிறாள் பெண்.

பெற்றெடுத்தபின்னும் முதல் மூன்று மாதங்கள் கருவில் சுமந்ததைப்போன்ற உணர்வுடனே கையிலும் மடியிலும் ஏந்திக்கிடப்பவள் தானே பெண்?

இதெல்லாம் தெரியாதா எங்களுக்கு, இப்ப எதுக்கு புதுசா என்று கேட்கிறீர்கள்.

இந்த நாட்டில் கர்ப்பவதியாகும் பெண்கள் இனி குழந்தைப்பேறு காலத்தில் தாய்ப்பாலோடு, தேவைப்படும் ஆக்சிஜனையும் சுரக்கும் மார்பகங்களைப் பெற்றவளாய் இருப்பது மட்டுமே நலம் பயக்கும்.

பெற்றவர்களுக்கு மட்டுமேதான் குழந்தைகள் மீதான பொறுப்பு. அரசுக்கு இல்லை. மூளை வீங்கி பாதிக்கப்பட்டதோ, ஆக்சிஜன் பற்றாக்குறையோ, அரசு வழக்குகள், அறிக்கைகள், விசாரணைக் கமிஷன்களோடு தன் கடமையை முடித்துக்கொள்ளலாம்.

இறந்த குழந்தைகளின் உயிர் மட்டும்தானா இழப்பு? சுமந்துநின்ற அந்தத் தவக்காலங்களை எதைக்கொண்டு நிறைப்பது?

60 குழந்தைகள், 60 தாய்மார்கள், 60 பேர் சுமந்துநின்ற 280 நாட்களின் இழப்பை, அந்நாளில் நெஞ்சில் ஏந்திய அன்பு, ஆசை, ஏக்கம், எதிர்பார்ப்பு, கனவு எல்லாவற்றையும் எதைக்கொண்டு சமன் செய்வீர்கள்? எந்த நஷ்டத்துக்கு எது ஈடாகும்?

பச்சிளங்குழந்தைகளின் தொடர் உயிரிழப்புக்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் அறவுணர்வு,  சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கும், மாநில, மைய அரசுகளுக்கும் இல்லை.

நமக்கு நாமே எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு ஜி.எஸ்.டி முதலான வரிகளை பொறுப்பாக செலுத்திக்கொண்டு, அறிவிக்கப்படாத அவசர நிலையில் வாழ்வதற்கு நம்மை தயார்படுத்திக்கொள்வோம்.

வாருங்கள்..
ஜென்மாஷ்டமியில் கோகுலகிருஷ்ணனின் பாதம் வரைந்து வரவேற்கத் திரளுவோம்.

14/08/17

ஆக்சிஜன் பற்றாக்குறையை பிறிதொரு நாளில் சாவகாசமாக  விவாதித்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment