Thursday, 27 December 2018

எனக்கு முன்னே செல்லும்
நிழலொன்றைத் தொடர்கிறேன்
விரும்பியோ
அன்றியோ.
வேண்டாம் என்று விடுத்து
இடப்பக்கம் நடக்கிறேன்
நிழல் நடக்கிறது
என்னோடு இணைந்து.
வெறுத்துத் திரும்புகிறேன் வேறோர் பாதை
இப்போது
நிழலென்னைத் தொடர்கிறது.
நிழல் விழாப் பாதையொன்றைத்
தேடிய என் பயணத்தில்
நிழலற்ற நான் ஆக
இருளுக்குள் தொலைந்து போனேன்

நிலவைப் பேசவும்
நிலவோடு பேசவும்
இருக்கிறது ஏராளம்

எனது நச்சரிப்புகளைப்
பிரியமென உருமாற்றும்
வித்தையே உனதன்பு💜

பொட்டல்வெளியில்
பொடி சுடும் வெயில்தாங்கி
பாதையைக் கடக்கும் பாதங்களும்
அனல் கக்கும் சொற்களைக்
கடக்கமுடியா மனதும்
உடலொன்றோடு உறைந்தவையே.

நான் பேசிக்கொண்டிருக்கும் வார்த்தைகள்
இந்த அறையின் சுவர்களுக்குப் பிடிக்குமா என்று தெரியவில்லை
சுவர்களுக்குப் பிடித்தமாதிரி
எனக்குப் பேசத் தெரியுமா
என்பதும்
தெரியவில்லை.

Tuesday, 25 December 2018

காதலென்பது

அழகும் ரசனையும் நாணமும் கலந்ததே காதலெனக் காலமெல்லாம் கதைகள் சொன்னார்.
சுண்டியிழுக்கும் தோலின் நிறமும்
அளவுகளுக்குள் அடங்கும் வனப்பும் தேடும் மனங்கள்தானே இங்கு.
சாமுத்ரிகா வரையறைக்குள் அடங்காத பெண்ணொருத்தியிடம்
எதை ரசித்துவிடப்போகிறது
இந்தக்காதல்.
இதயமெங்கும் பொங்கும் அன்பையும்
குறைகளோடு நேசிக்கும் பக்குவத்தையும்
அழுக்கையும் அயர்ச்சியையும்
அரவணைக்கும் பாங்கினையும்
துயருறும் பொழுதில் தோள்சாய்க்கும் கனிவையும்
கோபத்தில் ஒளிந்திருக்கும் குணத்தைத் தேடுவதிலுமன்றி
வேறெங்கே உறைந்திருக்கும் இந்தக்காதல்?

Saturday, 24 November 2018

எனது நச்சரிப்புகளைப்
பிரியமென உருமாற்றும்
அன்பு உனது 💜