Friday 28 April 2023

இதோ இங்கே அலை விளையாடும் கடலினிலே எனக்கோர் பங்குண்டு
நுரைத்துப் பொங்கிச் சீறி
கால் நனைக்கும் அலையினிலே
எனக்கோர் பங்குண்டு
பிரபஞ்சத்தின் புரிந்தறியா ரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும்
அதன் ஆழத்தில் 
எனக்கோர் பங்குண்டு
ஆர்ப்பரிக்கும் அலையறியாத
அதன் ஆழ்கடல் பேரமைதியில்
எனக்குப் பெரும்பங்குண்டு.
நடக்க நடக்க உள்ளிழுக்கும்
கடற்கரை மணற்பரப்பில்
எந்தன் பங்கும் புதைந்தே இருக்கிறது.
ஒற்றை மணல்துகள் ஒட்டிக்கொள்ள
தட்டிவிட எத்தனிக்கும் விரல்களறியாது
மானுடப் பரப்பின் ஏதோ ஒர் புள்ளியில்
எந்தன் சக மனிதன் புரியும் செயலின் வினையாய்க் கிளர்ந்தெழும் சகல பாவங்களும் 
எந்தன் வாழ்வோடு ஒட்டாமல் உதறிச்செல்லுதல் எளிதல்ல என்று.

No comments:

Post a Comment