காலையில் இருந்து அழைப்புகள் ஏற்கப்படாமல் இருக்கின்றன
அண்மையில் பிறந்த பூனைக்குட்டியென கண் திறவாமல் கிடக்கிறேன்
யாரோ தேடியிருக்கிறார்கள்
யாரோ வருவதற்கு இருக்கிறார்கள்
யாரோ விட்டுச் செல்ல விழைகிறார்கள்
எந்தத் தகவலையும் ஏற்க இயலா மனநிலை
பல்லாங்குழிச் சோழிகளென
தொண்டைக்குழியில் நெருடுகின்றன
வண்ண வண்ண மாத்திரைகள்
திறவாத இமைகளை இன்னும் இறுக மூடிக் கொள்கிறேன்
அன்பின் நிமித்தம் யார் வந்தாலும்
வலி குடையும் என் கால் பாதங்களை
போர்வையால் மூடிவிட்டுச் செல்லுங்கள்
நம் இத்தனை நாள் பழக்கத்திற்கு இந்தச் சகாயம் போதுமெனக்கு
No comments:
Post a Comment