Friday, 3 March 2023

நிழலென உடன்வந்த 
பொழுதுகள் கழிந்து
நீயற்ற தனிமை
நீளும் கணங்களில்
நெரிக்கும் நினைவுகளூடே
உயிர் நழுவிப் போகுது  
அவ்வப்போது 💛

Friday, 16 December 2022

மேலே
மேலே
என்று 
உச்சிக்கு வந்தவுடன் 
கீழே பார்ப்பது
இயல்பாகிறது

Wednesday, 9 November 2022

அமைதியாக இருக்கச் சொல்லி பதற்றப்படுது மனசு.
ஏதோ சில தருணங்களில்
ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பாள்
இரண்டு நாளாக நசநசக்கும் இந்த மழைபோல

Saturday, 24 September 2022



காலையில் இருந்து அழைப்புகள் ஏற்கப்படாமல் இருக்கின்றன
அண்மையில் பிறந்த பூனைக்குட்டியென கண் திறவாமல் கிடக்கிறேன்
யாரோ தேடியிருக்கிறார்கள்
யாரோ வருவதற்கு இருக்கிறார்கள்
யாரோ விட்டுச் செல்ல விழைகிறார்கள்
எந்தத் தகவலையும் ஏற்க இயலா மனநிலை
பல்லாங்குழிச் சோழிகளென
தொண்டைக்குழியில் நெருடுகின்றன
வண்ண வண்ண மாத்திரைகள்
திறவாத இமைகளை இன்னும் இறுக மூடிக் கொள்கிறேன்
அன்பின் நிமித்தம் யார் வந்தாலும்
வலி குடையும் என் கால் பாதங்களை
போர்வையால் மூடிவிட்டுச் செல்லுங்கள்
நம் இத்தனை நாள் பழக்கத்திற்கு இந்தச் சகாயம் போதுமெனக்கு

Tuesday, 14 June 2022

வெடித்துக் கிளம்பும் அழுகையின் கண்ணீரில் 
உன் உயிர்ச்சூடு ♥️
எதுவென்று புரியாமல் தவித்தலையும் நினைவுகளைக் குழைத்துத் தீட்டுகிறேன்
உயிர் பெறுகிறாய் நீ
ஓவியமாய் ♡