Friday, 12 February 2021

ஒவ்வாத உணவு மிகும்போது 
உன் உணவுத்தட்டைப் பிடுங்கிச்செல்லும்
என் அடாவடியன்றி
காதல் என்பது வேறேது ❤️
தாமதத்திற்குக் கோபிக்காமல்
பசியோடு வந்ததற்குச் சினந்துகொள்ளும் உன் பரிவன்றிக்
காதல் என்பது வேறேது ❤️
பார்த்தால் சரியாகும் என்கிறாய்.
பார்த்துத் தொலைச்சா மட்டும்? என்கிறேன் 
பார்ப்பதற்கும்
பார்த்துத் தொலைவதற்குமிடையிலான
காத்திருத்தலன்றிக்
காதல் என்பது வேறேது ❤️
இலைமறைவில் பூப்போல...
இதயத்துள் ஒளிவு மறைவாய்... 
காதல் 🖤


Thursday, 11 February 2021

பசி குடைகிறது
நொடியொன்றைச் சுவைத்துப் பார்க்கிறேன்
நிமிடத்தைத் தின்று தீர்க்கிறேன்
மணிநேரங்கள் உண்டு முடிக்கிறேன்
மாதங்கள்
ஆண்டுகளென
விழுங்கியும்
ஆறாப் பசியடங்க
காலப் பெட்டகத்தைக்
கைக்கொள்ளத் தேடுகின்றேன்

Tuesday, 2 February 2021

சொல்லொன்று தொக்கி நிற்கிறது எதனோடும் சேராமலே
வேறு வார்த்தைகளோடு இணையவில்லை
எந்த வாய்மொழியோடும் இணக்கமில்லை
ஏதுமற்ற ஒன்றாய் நிற்பதுபோன்ற தொனியில்
எதையோ சொல்லத்துடிக்கிறது
ஒரு அணுக்கமான இதயம் தேடி
அனுசரனையான வாக்கியம்தேடி
பொருள்பொதிந்த இலக்கியம்தேடி
இலக்கண வரம்புகள் மீறாத கவிதையொன்றை நாடி
சொல்லொன்று அலைபாய்கிறது
தன்னியல்பு மாறாது தம்மை
எடுத்தாளுவோர் விரல்தேடி.

Monday, 1 February 2021

"இந்த அடியை மறக்காதே"
என்று பிரிந்த 
விடுமுறைக்காலங்கள் முடிந்துபோயின.
அடியை மறக்கவில்லை.
அடியே!
நீ எங்கே?