Friday, 28 July 2017

பசித் தீ

பொழுது கடந்துகொண்டிருக்கிறது. கடந்துவிட்ட பொழுதுக்குள்
ஆகவேண்டிய செயல்கள்
நடந்தேறவில்லை.
ஆனால்
உடம்புக்குள் இயக்கம் நடைபெற்றுக்கொண்டேயிருப்பதற்கான
அறிகுறிகள் எச்சரிக்கின்றன.
கண்கள் சோர்ந்து
கால்கள் வலுவிழந்து
ஓய்வு தேவை என்ற எச்சரிக்கைக்கொடி ஏற்றுகிறது உடல்.
கவனம் சிதறுகிறது.
வயிற்றில் நினைவில் பசிகிளற
மெல்ல எழுந்து
எரியும் அடுப்பின் முன் வந்து நிற்கிறேன்.
கொழுந்துவிட்டெறிகிறது தீ.
விரல் கொண்டு கிளறி வெளித்தள்ளுகிறேன் கங்குகளை.
ஆரஞ்சுநிறத்தில் ஜொலிக்கின்றன நெருப்புத் துண்டங்கள்.
ஒன்று
இரண்டு
மூன்று
.
.
.
மென்று தின்று விழுங்குகிறேன்
கனன்ற நெருப்புத்துண்டுகளை.
ஆழ்பசி தீர விட்ட இடத்திலிருந்து
தொடங்குகிறேன் வேகமாய்.

Thursday, 27 July 2017

வெல்லும் துளிகள்

டிவிஎஸ் கடந்து பாலம் ஏறி உறையூர் நோக்கி வந்துகொண்டிருக்கிறேன். மிதமான வேகத்தை சற்று கூட்டுகிறேன் வெயிலின் சுள்ளென்ற வெப்பம் உறைக்க. இடதுபுறத்திலிருந்து ஒரு சைக்கிள் ஓட்டும் சிறுவன் வியர்க்க விறுவிறுக்க மிதிக்கிறான். நான் வேகம் கூட்ட அவனும் இன்னும் கூடுதல் வேகம் கூட்டுவதுபோல் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் வேகமாக இயக்க அச்சிறுவனின் கால்கள் அதிக அழுத்தம் கொடுத்து சைக்கிளை மிதிப்பதை உணர்கிறேன். அதற்குமேல் மனசு வரவில்லை. அவன் உணராவண்ணம் வேகத்தைக்கூட்டாமல் நான் கொஞ்சம் கொஞ்சமாகக்குறைக்க, அவன் முன்னேறி மெல்ல திரும்பிப் பார்த்து என்னை முந்திவிட்டதை உணர்த்துகிறான் பெருமிதப் புன்னகையோடு.
சென்றுவா மகனே, செல்லும் பாதையெங்கம் வெற்றிகள் ஈட்டுவாய்.
உன் வியர்வைத்துளிகள் வெல்லும் எதையும்.

எது வாழ்க்கை 3

எதிர்பார்ப்பினால்தான் ஏமாற்றமா?
எதிர்பார்ப்பு தவறா?
எதிர்பார்ப்பு தவிர்க்கவேண்டிய ஒன்று எனில் எதுவுமே நடைபெற சாத்தியம் இல்லையே.

Monday, 24 July 2017

எது வாழ்க்கை (2)

ஆசைதான் வாழ்க்கையா?
ஆசையற்றுப் போனால் வாழ்வின் சுவையகலுமா?

எது வாழ்க்கை (1)?

பிறக்கிறோம்
இறக்கிறோம்
இடைப்பட்ட அனுபவங்கள் தானே வாழ்க்கை?!

Sunday, 23 July 2017

பேச்சிலருக்கு சில டிப்ஸ்

கொண்டைக்கடலை ஊறவைக்கும்போதே நன்றாகக் கழுவிவிட்டு நல்ல தண்ணீர்விட்டு ஊறவைக்கலாம். ஊறியபின் தண்ணீரை வடித்து புளி ஊறப்போட பயன்படுத்தலாம். கொண்டைக்கடலை வேகவைக்கும்போதே தேவையான உப்பு சேர்த்து ஒரு சிறுகரண்டி எண்ணெய் விட்டு வேகவைத்தால் வறண்டுபோகாமலிருக்கும். மீண்டும் வேகவைத்த நீரை வடித்து ரசம்வைக்கப் பயன்படுத்தலாம். சுவையும் சத்தும் நிறைந்தது.

Sunday, 16 July 2017

உனது எனது எனப்
பிரித்தெடுக்க முடியாது வழிந்த நம் வியர்வையின் ஈரம்
உயிருறங்கும் வரை காய்வதில்லை.

Sunday, 2 July 2017

ஸ்ஸ்ஸ்., யப்ப்பா..

அடுத்த தலைமுறை ஆண்குழந்தைகளை கொஞ்சமாவது மாற்றி வளர்க்கலாம் என்று பார்த்தால், வீட்டுக்குள்ளேயே இருக்கும் நம் தலைமுறை ஆண்களை வைத்துக்கொண்டு முடியாது போலிருக்கே.