Monday, 27 April 2020

இதோ இங்கே அலை விளையாடும் கடலினிலே எனக்கோர் பங்குண்டு
நுரைத்துப் பொங்கிச் சீறி
கால் நனைக்கும் அலையினிலே
எனக்கோர் பங்குண்டு
பிரபஞ்சத்தின் புரிந்தறியா ரகசியங்களைப் பொத்தி வைத்திருக்கும்
அதன் ஆழத்தில் 
எனக்கோர் பங்குண்டு
ஆர்ப்பரிக்கும் அலையறியாத
அதன் ஆழ்கடல் பேரமைதியில்
எனக்குப் பெரும்பங்குண்டு.
நடக்க நடக்க உள்ளிழுக்கும்
கடற்கரை மணற்பரப்பில்
எந்தன் பங்கும் புதைந்தே இருக்கிறது.
ஒற்றை மணல்துகள் ஒட்டிக்கொள்ள
தட்டிவிட எத்தனிக்கும் விரல்களறியாது
மானுடப் பரப்பின் ஏதோ ஒர் புள்ளியில்
எந்தன் சக மனிதன் புரியும் செயலின் வினையாய்க் கிளர்ந்தெழும் சகல பாவங்களும் 
எந்தன் வாழ்வோடு ஒட்டாமல் உதறிச்செல்லுதல் எளிதல்ல என்று.

Thursday, 9 April 2020

சிறகுவிரித்தல் எளிது
தான்
பறந்துவிடுங்கள் சட்டென்று
அனுமானங்களுக்குள் 
சிக்கிவிடாது


கிளையொன்றில் அமரும்
பறவையிடம் 
காரணங்கள் ஏதுமிருக்கத் தேவையில்லை..
பறத்தலுக்கும்.

Friday, 20 March 2020

வா!
பட்டாம்பூச்சி பார்ப்போம்!!
வா!
பட்டாம்பூச்சி ஆவோம் 🧡

Tuesday, 17 March 2020

உறைதற்பொருட்டு
கட்டிய கூடு சிறையானால்
சிறுபுள் என் செய்யும்?
இறக்கைகளைக் கொஞ்சம் மடித்து வைக்கிறேன்
பறக்கவே இல்லாமல் 
வெறுமனே விரித்திருப்பதில்
வலிமிகுகிறது

Sunday, 9 February 2020

பெயர் தெரியாத அந்தப் பறவையைப் பார்த்தபடி நடக்கிறேன்
என் பெயர் தெரியாத அந்தப் பறவையும்
என்னைப் பார்த்தபடி பறக்கிறது
இயற்கை இருவரையும்
ஒரு நொடி 
ஒரு புள்ளியில் இணைத்து
ஆசீர்வதிக்கிறது