Sunday, 23 June 2024

பிடிமண் எடுத்துச் செல்லக் கூட 
வக்கில்லாத இறுதி யாத்திரைதான்
ஒவ்வொருவர்க்கும்.
.
உணவுச் சங்கிலியில் கோர்த்தது தானே
உயிர்கள் எல்லாமே.
பிணந்தின்னும் அகோரிகளைப் போற்றிவாழும் மதந்தானே உமது.
.
உணவுக்கும் உயிருக்கும் 
விலங்கிற்கும் மனிதர்க்கும்
வாழ்வுக்கும் வீம்புக்கும்
வேறுபாடறியா உங்களின் 
மதங்கொண்ட மதவெறி மாயாதோ?
.
மதநீர் ஒழுகும் யானைகூட
மனதடங்கும் சில மணித்துளியில்.
.
மதவெறி கொண்ட உங்களின்
கோரப்பசி தீர இன்னும்
எத்தனை உயிர்கள் வேண்டும்?
.
அவன் போலொரு பிள்ளை 
உங்கள் வீட்டிலும் இருக்கலாம்.
அவன் உங்கள் பிள்ளையின் 
பள்ளித் தோழனாகவும் இருக்கலாம்.
.
அடித்துக் கொன்ற 
இரத்தக்கறை படிந்த
அந்தக் கரங்களோடு உம்மகனை அணைப்பீரோ?
.
அடித்த வெறி தீர
ஆசுவாசம் கொள்ள
அப்பிஞ்சின் குருதி குடித்து
உம் மதத்தாகம் தணிப்பீரோ?

Tuesday, 18 June 2024

பெண்...
குறில் தான்.
நெடில்களின் 
நீண்ட நெடிய கனவுகளுக்கும்
ஆசைகளுக்கும்
அற்ப கவுரவத்திற்கும்
குனிந்து நிமிர்ந்து
'ங' போல் வளைந்து.

Tuesday, 11 June 2024

மரணித்தவனின் தொடர்பு எண்ணை நீக்குகிறேன்
என் வாழ்நாளில்  
சில நொடிகள் குறைகிறது 😔

படம்: இணையத்தில் எடுத்தது

Sunday, 9 June 2024

சாத்தானுக்கானதை
அவனிடமே சேர்ப்பித்ததில்
கடவுளுக்கென்ன ஆற்றாமை?
நிறைந்து வழியும் எனதன்பில்
சிறிதே அள்ளிக்கொடுப்பதி்ல்
தடையேதுமில்லை
முகம் திருப்பிப்போகும் 
உன் கோபத்தைத் தவிர 🖤

Tuesday, 30 April 2024

கேளாச் செவிகளோடு 
போராடித் தோற்ற வேளை
மௌனத்தின் தேவை புரிந்தது

Sunday, 28 April 2024

மெல்லப் பொழுதுகள் சுமையாகும்
மூக்கின் நுனியில் செம்பொறியொன்று வலிதந்து சுடர்விடும்
அங்கங்களெங்கும் நோக
அடிவயிற்றில் தசையொன்று இழுத்துச் சுருட்டும்
தொடையிரண்டும் துவண்டு விழ
பாதங்கள் அடிவைக்க மறுக்கும்
உடுத்திய ஆடை மார்புக்காம்பின் நுனி தொட
நோகுதென்றே துடித்துப்போகும்
அன்பின் தீண்டலைக்கூட ஏற்காது அரற்றும்
முன்னேழு நாட்களில்
இப்போதா
இனிதானா
சதா
எச்சரிக்கையில் எப்போதும் உழலும் மனம்
முதல்சொட்டு மாதவிடாயின்போது
மரித்துப் போகும் பெண்ணுடல்
மூன்றாம் 
நான்காம்
ஐந்தாம் நாளில் உயிர்த்தெழுகிறது
அகவை நாற்பது கடந்த பின்னாலே.

படம்: இணையத்தில்
வலி : பெண்ணிடத்தில்