Monday, 30 October 2023

மழைகுறித்தான வரிகள் 
ஈரம் நிறைந்தவை
வறண்ட வானிலையின்
உஷ்ணம் தணிப்பவை
பெய்து தீர்த்தாலும்
பேயாது கெடுத்தாலும்
மழைக்கான தேடல்
இருந்து கொண்டே தான் இருக்கும்
பெருமழையொன்றில்
உருவழிந்து போகும் மேகமென 
உன்னில் கரைகிறேன் 🖤

Sunday, 29 October 2023

உன் மௌனத்தைப்போல்
அடர்த்தியானது
இன்றைய மழை 🖤
நீளும் நம் உரையாடல்களில்
பெரும்பாலும் முத்தங்களும்
எப்போதாவது வார்த்தைகளும் பரிமாறுவதுண்டு

Friday, 14 July 2023

நினைவுகள் கொன்றது என்னை.
சற்றுமுன்வரை
தீராப்பசி தீர
நினைவுகளை மென்று
தின்று கொண்டிருந்தேன்.
விக்கித்தபோது கண்ணீர் அருந்திக் கடந்தேன்
தீரா தாகத்தை உமிழ்நீர் கொண்டு தணித்தேன்
கொஞ்சம் புரைக்கேறி தடுமாறும் பொழுது
கடந்த கொடும்பொழுதுகளைக் கொண்டு தட்டிக் களைந்தேன்
ஊன் செத்த பொழுதொன்றில்
குருதியின் சூட்டில்
உயிர் தப்பிக் கிடந்தபோது
கனவுகள் கடைந்து 
நினைவுகளை உயிர்ப்பித்து 
உண்டு 
தின்று 
செரித்த கணத்தில்
நெரிபடும் குரல்வளை திமிற விழித்துப் பார்க்க
நினைவுகள் கொன்றது என்னை.

Monday, 10 July 2023

உன் விழியின் ஒளி தருகிறது
என் உயிர்த்தலுக்கான
பச்சையத்தை

Saturday, 6 May 2023

உச்சிப் பொழுதில்
விண்ணையும் மண்ணையும் 
நிறைத்துக்கொண்டோடும்
இவ்வெள்ளை நதிக்கு
வெயிலென்று பெயர்