Monday, 1 February 2021

"இந்த அடியை மறக்காதே"
என்று பிரிந்த 
விடுமுறைக்காலங்கள் முடிந்துபோயின.
அடியை மறக்கவில்லை.
அடியே!
நீ எங்கே?

என் பால்யத்தின் வண்ணங்கள் நிறைந்திருக்கும் 
இவ்வீதியைக் கடக்கும் கணங்களில்
வண்ணத்துப்பூச்சி ஆகிறேன் 🦋🦋
அமர்ந்து பேசிக் கழித்த 
பெருந்திண்ணைகளைத் தொலைத்த வீடுகள் இன்று
மின்சாரம் போன இரவுகளில் ஆடிய கண்ணாமூச்சியும்
கோடிட்ட எல்லைகளுக்குள் 
கல்லா மண்ணா ஆடி 
கண்டெடுத்த காயங்களும்
வீதிக்கு உயிர் கொடுத்த காலமது
அலைபேசிக்குள் முகம் புதைத்து
பால்யம் தொலைத்த குழந்தைகளும்
கொடூர ஒலியெழுப்பும் வாகனங்களின் போக்குவரத்துமாய்
வேற்று முகம் அணிந்து வெகுநாட்களாகியும்
கடந்து செல்லும் பொழுதுகளில்
பாதங்கள் உணரும் உயிர்ப்பும் சிலிர்ப்பும்
சற்றும் குறையவில்லை
இதோ!
வீதிக்குள் நுழையும் கணம்
படபடத்துச் சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சியொன்று 🦋🦋


Monday, 7 December 2020

மழைநிலத்துப் பதிந்த கால்தடமென
உறைகிறாய் என்னுள்
ஈர மண்ணுள் புதைந்த விதையென
உயிர்க்கத் தொடங்கும் காதல்
விதைபிளந்து 
மண்கீறி வெளிவருகிறது பசுந்தளிர்
மழைக்காலத்துக்கு பின்னான
இளவெயிலாய் எப்போதும்ப்போது நீ


Wednesday, 2 December 2020

ஒரு மழைப்பொழுதின் தனிமை சுடுவதில்லை
கொட்டித்தீர்க்கும் மழையிடம்
மனதில் பட்டதை பேசித்தீர்க்கலாம்
நசநசக்கும் மழையோடு
செல்லச்சண்டை போடலாம்
அடர்தூறலோடு ஆடிக்களிக்கலாம்
விடாது பெய்யும் மழையோடு
உரிமையோடு சினக்கலாம்
சாரலோடு சமரசம் ஆகலாம்
மழையென்பது மனதோடு பேசும் நட்பன்றி வேறென்ன ❤️

Saturday, 14 November 2020

தனிமை வாய்க்கப் பெறும் பொழுதுகளில் தொடக்கத்தில்
உன் பெயரைத்தானே உச்சரிக்கிறேன்🖤

Friday, 6 November 2020

இன்று நீ சொன்ன அன்பின் வார்த்தைகளால் 
நேற்று நீ எய்த சொல்லம்புகளைப் பிடுங்கி எறிகின்றேன் 🖤

Wednesday, 4 November 2020

புறங்கழுத்தில் கவ்வி குட்டியைத் தூக்கும் 
தாய்ப்பூனையின் லாவகமாய்
உன் சொற்கள்