Thursday, 29 May 2025

தேர்வு அறையில் நான்.
தலைப்பென்னவோ
"நான் உன்னைக் காதலிக்கிறேன்"

தேர்வில் வெற்றியா தோல்வியா
எதுவென்பதில் அய்யமில்லை.
காதலில் வெற்றியா தோல்வியா
என்பதில் அச்சமுண்டு.

அழகான கையெழுத்து
கவித்துவ சொல்லாடல்
கொண்டு வென்று
வெற்றிக்கோப்பையை ஏந்தி
உன்னைக்காண வருகிறேன்
தோல்வியை எதிர்கொள்ளும் திராணியின்றி.

சொல்லவா நான்?
சொல்வாயா நீ?

என் நெஞ்சு துடிக்க
விழி படபடக்க
கரம் நடுங்க
கால்கள் துவள
வந்தடைகிறேன் உன்னை.

நெஞ்சாங்கூட்டில் உயிர்பிழைத்திருக்க
அந்த மருந்தென்னும் சொல்லைச் சொல்லிவிடு.
"நானும் உன்னை"

29.05.2017

Tuesday, 27 May 2025

கூடுதிரும்புதலே வீடடைதல் ஒரு பறவைக்கு இரவைக்கழிக்கும் பொருட்டு.
இருளை எதிர்கொள்ள வேண்டிய இரவில்
உன் குறுஞ்செய்தியின் வரவொன்றே
வீடடைதலுக்கான காரணமெனக்கு.
வீடடைதல் தொடங்கிடும்
உன்னுடனான உரையாடலோடு.
பிறிதொரு நாளில்
உன் உரையாடலற்ற இரவுகளில்
நினைவுப்பறவையொன்று
நித்தம் நித்தம்
தனித்துப் பறந்து தவித்திருந்து 
வீடடையும் விருப்பமின்றி
சிறகுகளின் வலியுணராமல்
வலிந்து அசைத்து
வானளந்து திரிந்ததை யாரறிவார்

27.05.2017
முன்பின்நவீனத்துவம்
எதுவாயிருந்தாலென்ன.
சில பல வளைவுகளும்
மூன்றே புள்ளிகளும் போதுமென நினைக்கிறான்
பெண்ணை வரையும் ஓவியன்.
ன் விகுதியால்
ஆணெனக் கருதிக்கொள்ளலாம்
அவ்வோவியனை.
நவீன பெண் ஓவியர்களும்
வெற்று நேர்க்கோடுகளில்
ஆண் உருவம் வரையலாம்தான்.
பெண்ணால் இயலுவதில்லை அது.
ஏனெனில்
பெண்ணின் பார்வையில் 
ஆண் ஒரு உயிர்.
பொருளல்ல போகிக்க.

#2019ல்


Saturday, 24 May 2025

வெங்காயம்
வெள்ளைப்பூண்டு
தக்காளி
கத்தரிக்கா...

போன்றவற்றை வெட்டுவதற்கு மட்டுமே
பெண்கள்
இதுவரை கையிலெடுத்த கத்தியின்
உச்சபட்ச பயன்பாட்டினை
உலகிற்குப் பறைசாற்றினாள்
என் தோழியொருத்தி.

#verified / 24.05.2017

Wednesday, 21 May 2025

சிறுதுளி கூடக் குறையாது 
முழுவதுமாய் 
நிறைக்கிறாய் என்னை 🖤

Saturday, 17 May 2025

சில்லென்ற மழையும்
தலைகோதும் தென்றலும்
சிலிர்க்கவைக்கும் சாரலும்
மட்டுமல்ல.
சுள்ளென்று சுட்டெரிக்கும் வெயிலும்..
உன் நினைவுகள்.

Monday, 12 May 2025

சிறகு விரிக்கத் தெரியாத 
பறவையின் கூண்டுக்கு
பூட்டுகள் 
தேவையில்லை

Saturday, 10 May 2025

ஒரு கோடைமழையில் 
மண்
குளிர்ந்ததையொத்தது
உன் வரவு 💜